ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 170’ திரைப்படத்தை இயக்குநர் ஞானவேல் இயக்கவுள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
படத் தயாரிப்பு நிறுவனமான லைகா நேற்று (மார்ச் 1) பெரிய அறிவிப்பை வெளியிடுவதாக அறிவித்திருந்தது. அது என்ன அறிவிப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள ‘தலைவர் 170’ திரைப்படம் குறித்த ஒரு மாஸ் அப்டேட்டை கொடுத்துள்ளது லைகா. இது குறித்து லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“லைகா குழுமத் தலைவர் சுபாஸ்கரன் பிறந்தநாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ‘தலைவர் 170’ திரைப்படத்தின் அறிவிப்பை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
லைகா புரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மற்றுமொரு பெருமைமிகு தருணம் இது. தலைமுறைகள் கடந்து திரை ரசிகர்களை மகிழ்வித்து மகிழ்கின்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ‘தலைவர் 170’ திரைப்படத்தின் பணிகள் இனிதே ஆரம்பம்.
இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில், இசைவழி நம் இதயங்களை இணைக்கும் அனிரூத் இசையில், பிரம்மாண்டமான திரைப்படங்களைப் படைத்தளிக்கும் சுபாஸ்கரன் தயாரிப்பில், லைகா புரோடக்ஷன்ஸ் தலைமை பொறுப்பாளர் வி.கே.எம் தமிழ் குமரன் தலைமையில் ‘#தலைவர் 170” திரைப்படம் 2024-ம் ஆண்டு திரைக்கு வரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் கடைசியாக வெளியான ’ஜெய் பீம்’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு சமூகத்தில் தாக்கத்தையும் ஏற்படுத்தியது. இதனால் இவரது அடுத்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மோனிஷா
ஈரோடு கிழக்கு – முதல் சுற்று முடிவு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மேகாலயா: பாஜகவை பின்னுக்கு தள்ளிய தேசிய மக்கள் கட்சி