மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் பிரபல மலையாள நடிகர் ப்ரித்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான லூசிஃபர் படம் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை படைத்து பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.
இது ப்ரித்விராஜ் இயக்கிய முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் லூசிஃபர் படத்தில் நடிகர் ப்ரித்விராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.
தொடர்ந்து லூசிஃபர் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியானது. லூசிஃபர் இரண்டாம் பாகத்திற்கு “L2 எம்புரான்” என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் லூசிஃபர் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியது.
மலையாள திரையுலகில் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஆசிர்வாத் சினிமாஸ் லூசிஃபர் முதல் பாகத்தை தயாரித்திருந்தது. தற்போது லூசிஃபர் இரண்டாம் பாகத்தை ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. லூசிஃபர் 2 தான் லைகா நிறுவனம் மலையாளத்தில் தயாரிக்கும் முதல் படம் ஆகும்.
இந்நிலையில் இன்று மே 21 ஆம் தேதி நடிகர் மோகன் லால் பிறந்தநாளை முன்னிட்டு லூசிஃபர் 2 படத்தின் புதிய போஸ்டரை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
கையில் துப்பாக்கியுடன் காவலுக்கு நூற்றுக்கணக்கான பேர் சுற்றி நிற்க அவர்களுக்கு நடுவில் கருப்பு உடையில், கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டு செம ஸ்டைலாக மோகன்லால் நடந்து வருவது போல அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் மோகன் லால் குரேஷி ஆபிரகாம் என்ற ஒரு இன்டர்நேஷனல் டான் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். லூசிஃபர் 2 படம் குறித்த மற்ற அப்டேட்டுகள் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…