தமிழ் சினிமாவில் 2022 ஆம் ஆண்டு முதலீட்டாளர்களுக்கும் நடிகர்களுக்கும் வெற்றிகளை குவிக்கும் வருடமாக அமைந்திருக்கிறது.
கடந்த 10 மாதங்களாக முன்னணி நட்சத்திர நடிகர்களாக இருக்கும் அஜித்குமார், விஜய், சிவகார்த்திகேயன்,கமல்ஹாசன்,கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், தனுஷ், சிலம்பரசன் ஆகியோர் நடிப்பில் வெளியான படங்கள் வணிக அடிப்படையில், திரையரங்குகளில் வசூல் ரீதியாக வெற்றி பெற்றன.
அறிமுக நடிகர்கள் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் பாக்ஸ்ஆபீஸ் வசூலில் வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் கடந்த 4ம் தேதி வெளியான ” லவ்டுடே” படம் அந்த குறையை போக்கியிருக்கிறது.
கடந்த 2019ம் ஆண்டு ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்து வெளியான “கோமாளி” படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. அப்படத்தை அறிமுக இயக்குநராக பிரதீப் ரெங்கநாதன் இயக்கி இருந்தார்.
எனினும் அவருக்கு தொடர்ந்து படம் இயக்குவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் அவரே கதாநாயகனாக நடித்து இயக்கிய திரைப்படம் தான் “லவ் டுடே“.
இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன், இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, பிரவீனா ரவி, ஃபைனலி பாரத், ஆதித்யா கதிர் ஆகியோர் நடித்துள்ளனர்.
திட்டமிட்டு மார்க்கெட்டிங் செய்தால் வணிகரீதியாக வெற்றி நிச்சயம் என்பதற்கான உதாரணம்”லவ் டுடே”.
நல்லபடியாக மார்க்கெட்டிங் செய்தாலும் படம் பார்க்க வருகின்றவர்களை ஏதேனும் ஒரு வகையில் பாதிக்ககூடிய அல்லது வசீகரிக்கும் வகையில் திரைக்கதை இருக்க வேண்டும்.
அப்படி இல்லை என்றால் படத்தின் வெற்றி பப்படமாகிவிடும் என்பதற்கு சுந்தர் .சி இயக்கத்தில் வெளியான காபி வித் காதல் மிகச்சிறந்த உதாரணம்.
இரண்டு படங்களையும் தயாரித்தது முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள். இருபடத்தையும் கடந்த 4.11.2022 அன்று தமிழ்நாட்டில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிட்டது.
இன்றைய இளைஞர்களின் காதலை இரட்டை அர்த்த வசனங்களுடன் திரைப்படமாக வழங்கியது லவ் டுடே.
குடும்பத்துடன் பார்க்க முடியாத படமாக இருந்தாலும் கல்லூரி மாணவ மாணவிகளிடம் படம் வரவேற்பை பெற்றதால் முதல் நாளில் தமிழ் நாட்டில் உள்ள திரையரங்குகள் மூலம் சுமார் 5 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது.
கடந்த மூன்று நாட்களில் சுமார் 14 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ள லவ் டுடே, தயாரிப்பாளருக்கு விக்ரம், பொன்னியின் செல்வன் படம் போன்று பல மடங்கு லாபத்தை வழங்கியுள்ளது.
முதல் நாளே ஒரு அறிமுக ஹீரோவின் படம் 5 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பது தமிழ் சினிமாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இராமானுஜம்
“அதிமுக தலைமையில் கூட்டணியா?- எடப்பாடிக்கு அண்ணாமலை பதில்!
10 சதவீத இட ஒதுக்கீடு தீர்ப்பின் மீது மறுசீராய்வு அவசியம்: கி. வீரமணி