லவ் செக்ஸ் அவுர் தோகா 2: விமர்சனம்!

சினிமா

 அருவெருப்பூட்டும் ’எதிர்கால’ யதார்த்தம்!

பெரும்பாலான திரைப்படங்கள் பிரமாண்ட உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதாக நினைக்க வைக்கும். ஆனால், அவற்றுக்கான உழைப்பு சரியான திட்டமிடலோடு மிக எளிமையானதாக அமைந்திருக்கும். மிகச்சில படங்கள் மிக எளிதாக உருவாக்கப்பட்டவை போன்று தோற்றம் தரும்.

ஆனால், அவற்றின் பின்னணியில் பெரும் உழைப்பும் நிறைய நேரமும் கொட்டப்பட்டிருக்கும். எதிர்காலத்தை மனதில் வைத்து அந்த படைப்பு உருப்பெற்றிருக்கும்.

கிட்டத்தட்ட அப்படியொரு எண்ணத்தை ஏற்படுத்துகிறது திபாகர் பானர்ஜி இயக்கியுள்ள ‘லவ் செக்ஸ் அவுர் தோகா 2’.
2010-இல் இதே பெயரில் வெளியானது இதன் முதல் பாகம். அப்போது எம்எம்எஸ் ஸ்காண்டல், ஆணவக் கொலை போன்றவற்றை மொபைல் மற்றும் தொலைக்காட்சியின் சமூக ஆக்கிரமிப்பு வழியே பேசியது. தற்போது ஏஐ, டீப் பேக் உள்ளிட்ட விஷயங்கள் சமூகத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், தொழில்நுட்ப வளர்ச்சிகள் எவ்வாறு மனித உறவை மலினப்படுத்துகின்றன என்பதைப் பேசுகிறது ‘லவ் செக்ஸ் அவுர் தோகா 2’.

படம் எப்படி இருக்கிறது? – மூன்று கதைகள்!

திருநங்கை நூர் ‘ட்ரூத் யா நாச்’ எனும் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கிறார். ஆணாக இருந்து பெண்ணாக மாறியபிறகு, அவர் தனது தாயைச் சந்திக்கவில்லை. இந்த விஷயத்தை அறிந்ததும், அந்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள் அவரது தாயை நிகழ்ச்சிக்கு அழைத்து வருகின்றனர்.

கேமிராவுக்கு முன்னும் பின்னும் அவர்கள் நடந்து கொள்வதை நிகழ்ச்சியை நடத்துபவர்கள் பார்க்கின்றனர். அந்த நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு மக்களும் சமூக ஊடக பிரபலங்களும் கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். கேமிரா முன்பு தன்னைப் பற்றிய சில உண்மைகளை மறைக்கிறார் நூர். ஆனால், அதனை கேமிரா முன்பாகப் பேசுமாறு கட்டாயப்படுத்துகிறது தொலைக்காட்சி நிர்வாகம். அதை அப்படியே செய்ய, அந்த எபிசோடுகள் டிஆர்பியை அள்ளுகின்றன.

அதனால், தன்னை வந்தடைவது பரிதாபமா, அவதூறா என்பதைப் பற்றி நூர் யோசிப்பதில்லை. ஆனால், அந்த நிகழ்ச்சியின் இறுதியில் அவர் வெளியேற்றப்படுகிறார்.

இரண்டாவது கதை, மெட்ரோ ரயில் நிலையமொன்றில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றும் குலு எனும் திருநங்கை குறித்தது. அவரைப் போன்று பல திருநங்கைகளைப் பணியில் அமர்த்தியிருக்கிறது அந்த ஒப்பந்த நிறுவனம். குறிப்பிட்ட மெட்ரோ ரயில் நிலைய பராமரிப்பு பணிகளை நிர்வகிக்கிறார் லவினா சிங்.

ஒருநாள் குலு சிலரால் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாக்கப்படுகிறார். அது பற்றிப் புகார் கொடுக்க வற்புறுத்துகிறார் லவினா. அவரும் அவ்வாறே செய்கிறார். விசாரணை தொடர்ந்து நடைபெறும் நிலையில், ஒருகட்டத்தில் கேஸை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன் என்று குல் மன்றாடுகிறார். லவினா அதனை ஏற்கவில்லை.

பணியில் இருந்த குல் எப்படி சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்றார் என்று போலீசார் விசாரணை செய்யும்போது, அவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரிய வருகிறது. அது தனது நிறுவனத்தின் மாண்பைச் சிதைக்கும் என்று லவினா  கருதுகிறார்.

குல் மற்றும் அவரது பார்ட்னர் அஜ்மல் இருவரும் ஒரு யூடியூப் சேனலையும் நடத்தி வருகின்றனர். அதனால், அஜ்மலைப் பிடித்து விசாரிக்கிறது போலீஸ். அந்த விசாரணையால், வாடகைக்குக் குடியிருக்கும் வீட்டில் இருந்து குல் வெளியேற்றப்படுகிறார்.

நிறுவனத்திடம் நல்ல பெயர் எடுக்க வேண்டுமென்று குல்லை வேலையில் இருந்து நீக்குகிறார் லவினா. அதையடுத்து, மெட்ரோ ரயில் நிலையத்திற்கு தனது உடைமைகளோடு வருகிறார் குல். அங்கிருந்து செல்ல மாட்டேன் என்று அடம்பிடிக்கிறார்.

இறுதியாக, சில அசம்பாவிதங்களுக்குப் பின் குல் போலீசாரால் கைதாகிறார். அதன் தொடர்ச்சியாக, திருநங்கைகளைப் பணியமர்த்துவதில் இருந்த கட்டுப்பாடுகளை திருத்தி அமைக்கிறது சம்பந்தப்பட்ட கார்பரேட் நிறுவனம்.

மூன்றாவது கதை, பள்ளியில் படிக்கும் சுபம் எனும் ஒரு மாணவனைப் பற்றியது. வீடியோ கேமர் ஆக புகழ் பெற்றிருக்கும் அவன், அதில் மிகப்பெரிய புகழையும் பணத்தையும் சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புகிறான். அவனால் ஒரு சிறுவன் பள்ளியில் கொலையாகிறான்.

இணையத்தில் சுபம் ஒரு ஆணோடு இருப்பது போன்ற வீடியோக்கள் வெளியாகின்றன. எல்லாமே அவனை ‘பாப்புலர்’ ஆக்குகிறது. ஆனாலும், யதார்த்த வாழ்வுக்கும் மாயைக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் சுபம் சிக்கிக் கொள்கிறான். புகழ் போதையை நோக்கிய ஓட்டத்தில் தான் செய்த தவறுகள் தெரிய வரும்போது அவனது இயல்பு பிசகுகிறது.

ஒருநாள் வீட்டை விட்டு சுபம் நிர்வாணமாக ஓடும் வீடியோ செய்தி தொலைக்காட்சிகளில் வெளியாகிப் பரபரப்பாகிறது. அது குறித்தும் வீடியோ கேம் ரசிகர்கள், சமூக வலைதளப் பிரபலங்கள் அலசி ஆராய்கின்றனர்.
இந்த மூன்று கதைகளையும் சில பாத்திரங்கள் ஒன்றாக இணைக்கின்றன. நாயகன் நாயகி காதல், வில்லனுடன் மோதல், இடையே இதர பாத்திரங்களால் நகைச்சுவை, சோகம் என்று பார்த்துப் பழகிய திரைப்பட வடிவங்களில் இருந்து முற்றிலுமாக வேறுபட்டிருக்கிறது ‘லவ் செக்ஸ் அவுர் தோகா 2’வில் விரியும் உலகம்.

சீரணிப்பது கஷ்டம்!

முந்தைய அத்தியாயத்தின் தொடர்ச்சி என்ற தலைப்பில் சில ஷாட்களுடன் தொடங்குகிறது ‘லவ் செக்ஸ் அவுர் தோகா 2’. உடனே, 2010இல் வெளியான முதல் பாகத்தைப் பார்க்கிறோமா என்ற எண்ணம் நமக்குள் எழுகிறது.
மாறாக, பிக்பாஸ் பாணியுடன் டான்ஸ் நிகழ்ச்சிக்கான உள்ளடக்கத்தைக் கொண்ட ஒரு ரியாலிட்டி ஷோவை அதில் காட்டுகிறார் இயக்குனர். அந்த எபிசோடு முழுக்கவே ஒரு செட்டுக்குள் சிசிடிவி மற்றும் மறைக்கப்பட்ட கேமிராக்கள் மூலம் எடுக்கப்பட்ட பதிவுகளைப் பார்க்கும் உணர்வை உருவாக்குகிறார்.

அதற்கேற்ப தொலைக்காட்சி நிகழ்ச்சி, செய்தித் தொலைக்காட்சிகள், யூடியூப் தளங்களில் பார்க்கும் பதிவுகள் போன்று அக்காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. ஒரு காட்சியில், நூர் குறித்த செய்தியொன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்போது பக்கவாட்டில் இரண்டு சீரியல்களுக்கான விளம்பரங்கள் இடம்பெறுகின்றன.

ஒன்று, ஒரு தம்பதியரின் காதல் குறித்தது. இன்னொன்றில் ஒரு ஐஏஎஸ் அதிகாரி துப்பாக்கியுடன் தோன்றுவதாக உள்ளது. அதனைப் பார்க்கும்போது, உண்மையாகவே நேரடியாக ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியைப் பார்க்கும் எண்ணம் நம் மனதுக்குள் உருவாகும். இது ஒரு உதாரணம் தான்.

அந்த இரண்டு சீரியல்களுக்கான விளம்பரங்களும் நமது ரசனை மீதான இயக்குனரின் விமர்சனம் என்பது தனியாக விவாதிக்க வேண்டிய விஷயம்.

அதேபோல, இரண்டாவது கதையில் ஒரு செய்தியை கமர்ஷியலாக சொல்கிறோம் எனும் போர்வையில் குற்றச்செயல்களில் பாதிக்கப்பட்டோரை செய்தித் தொலைக்காட்சிகள் எந்த அளவுக்கு அவமானத்திற்கு உள்ளாக்குகின்றன என்பது காட்டப்படுகிறது.

மூன்றாவது கதையிலோ, வீடியோ கேம் உலகம் குறித்தும், அது மட்டுமே வாழ்க்கை என்று சமூக ஊடகங்களில் விவாதித்துக் கொண்டிருப்பது பற்றியும் விமர்சனம் செய்கிறார் இயக்குனர் திபாகர் பானர்ஜி.

ரிஜு தாஸ் – ஆனந்த பன்சலின் ஒளிப்பதிவு, பர்மிதா கோஷின் படத்தொகுப்பு, தியா தேஜ்பாலின் தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் திபாகர் பானர்ஜி, தன்மய் சாட்டர்ஜி, நிம்ரித் ஷாவின் பின்னணி இசை ஆகியவற்றோடு ஒலி வடிவமைப்பு, விஎஃப்எக்ஸ், ஏஐ, டீப் பேக் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் மிகச்சரியாக ஒன்றிணைந்து ‘எல்எஸ்டி 2’ உலகத்தை நமக்குக் காட்டுகின்றன.

சுபம், பிரதீக் வாட்ஸ் உடன் இணைந்து இதன் எழுத்தாக்கத்தைக் கையாண்டிருக்கிறார் இயக்குனர் திபாகர் பானர்ஜி. இப்படியொரு கதையை எப்படி இவர்கள் மனதுக்குள் உருவகம் செய்தனர் என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது. காரணம், இவர்கள் திரையில் நேரடியாக உணர்த்தாத பல விஷயங்கள் படம் பார்த்த பின்னர் நமக்குள் உணர்வெழுச்சியை உண்டுபண்ணுகின்றன.

பெருகும் அருவெருப்பு!

நிச்சயமாக, ’லவ் செக்ஸ் அவுர் தோகா 2’ பார்க்கும்போது நமக்குள் அருவெருப்பு உண்டாகும். ஓரினச் சேர்க்கை தொடர்பான பாத்திரங்களோ, அவை தொடர்பான விரிவான விளக்கங்களோ மட்டும் அதனை ஏற்படுத்தவில்லை.
தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் வழியே உருவாக்கி வைக்கப்பட்டிருக்கும் பிம்பங்களை நம்பி, நமது நேரத்தையும் மூளையையும் வீணடித்து வருகிறோம் என்ற உண்மை பிடிபடுவதால் ஏற்படும் அருவெருப்பு அது.

அடிப்படையான மனித உணர்வுகளுக்கு மதிப்பு தராமல் பொய்யான பிம்பங்களை ஏந்திப் பிடிப்பதற்கான விலை அது. இந்த படத்தின் நோக்கமும் கூட அதுதான். கேளிக்கை வியாபாரத்தின் மீது, பொதுப்புத்தியில் அது ஏற்படுத்தும் தாக்கத்தின் மீது, அதனால் சமூகத்தில் ஏற்படும் சீர்கேடுகள் மீதான இயக்குனரின் விமர்சனம் அது.

எல்லா தரப்பு பார்வையாளர்களையும் இது கவரும் என்று சொல்லவே முடியாது. அதற்கான வாய்ப்பைத் திட்டமிட்டு தவிர்த்திருக்கிறது படக்குழு. எதிர்காலத்தில் இப்படியொரு நிலை ஏற்படலாம் என்று முன்னுணர்த்தும் விதமாகச் சமகால நிகழ்வுகளில் கொஞ்சமாய் கற்பனையைக் கலந்து தந்திருக்கிறார் இயக்குனர் திபாகர் பானர்ஜி. ’முகத்தில் அறையும் அந்த யதார்த்தம்’ நம்மையே குற்றவாளிகளாக உணரச் செய்தால் மட்டுமே இந்த படம் அருவெருப்பாகத் தெரியும்!

உதய் பாடகலிங்கம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நிறம் மாறும் உலகில் ஃபர்ஸ்ட் லுக்: ஸ்பெஷல் என்ன?

மீண்டும் தேர்தல் பத்திரமா? – நிர்மலா சீதாராமனை சாடிய மனோ தங்கராஜ்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *