கேரள மாநில திரைப்பட விநியோகஸ்தராக கடந்த 30 வருடங்களாக அகஸ்தியா சினிமா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தை நடத்தி வருபவர் ராய். இந்நிறுவனம் கேரளாவில் பன்மொழிப்படங்களின் விநியோக உரிமையை வாங்கி திரையிட்டு வருகின்றது.
இந்த வருட தொடக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தை கேரள மாநிலத்தில் இந்த நிறுவனம்தான் வெளியிட்டது. வாரிசு படம் வெளியானபோது அந்தப் படத்தின் தமிழ்நாடு வசூல், பிற மாநிலங்கள், உலகளாவிய மொத்த வசூல் என அனைத்தும் மிகைப்படுத்திக் கூறப்பட்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் வாரிசு படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் அதனை பொதுவெளியில் விவாத பொருளாக்கவில்லை.
காரணம் வாரிசு படத்தின் தமிழ்நாடு விநியோகஸ்தர் லலித்குமார் தான் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் தயாரிப்பாளர். அதனால் அடுத்த வியாபாரம் சிக்கலாகி விடக்கூடாது என்பதால் மெளனமாக இருந்து வருகின்றனர். வாரிசு படத்தின் கேரள மாநில விநியோகஸ்தர் அப்படத்தை வாங்கியதன் மூலம் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதையும், அப்படத்திற்குக் கொடுத்த கூடுதல் அட்வான்ஸ் தொகை திரும்பக் கிடைக்கவில்லை, தான் கொடுத்த பணத்திற்கு ஜிஎஸ்டி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பதாகவும் குற்றம் சுமத்தி நடிகர் விஜய்க்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் வாரிசு படத்தின் கேரள மாநில விநியோகஸ்தர் ராய்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, “கேரளாவை பூர்வீகமாக கொண்ட நான் 30 வருடங்களாக விநியோகஸ்தராகவும், திரையரங்கு உரிமையாளராகவும் இருந்து வருகிறேன். கடந்த அக்டோபர் 2022 ஆம் ஆண்டு தங்களின் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படத்தின் கேரள விநியோக உரிமையை வாங்குவதற்கு அதன் தயாரிப்பாளர் தில்ராஜுவை அணுக முயற்சித்தேன்.
அப்போது அவருடைய மேனேஜர் நெல்லூர் ஹரி என்பவர் வாரிசு திரைப்பட கேரள விநியோக உரிமையை வாங்கித் தருவதாகவும் அதற்கு 7.1 கோடி எம்.ஜி தொகையும், ஜிஎஸ்டி 18 சதவீதம் சேர்த்து ரூபாய் 8.37 கோடி செலுத்த வேண்டும் எனவும் படம் திட்டமிட்டபடி ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் எனவும் தெரிவித்தார்.
இதனை நம்பி 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்கு வங்கி கணக்கு மூலம் ரூபாய் 2 கோடி முன்பணம் அனுப்பி வைத்தேன். டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் விநியோக உரிமைக்கான ஒப்பந்தத்தை வழங்குவதாக ஹரி தெரிவித்ததை அடுத்து டிசம்பர் முதல் வாரம் அவரை அணுகி ஒப்பந்தத்தைக் கேட்டேன். அப்போது தயாரிப்பாளர் தில்ராஜ் அவர்களின் அறிவுரைப்படி வாரிசு படத்தை தனது பெயரில் கேரளாவில் வெளியிட உள்ளதாகவும் தன்னிடமிருந்து விநியோக உரிமையை அவருடைய ’N சினிமாஸ்’ நிறுவனத்தின் மூலம் எனக்கு விநியோக உரிமையை வழங்கினார்.
இந்நிலையில் பொங்கலுக்கு அஜீத் நடிப்பில் துணிவு படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டதாலும் படம் முன்கூட்டியே ஜனவரி 11ம் தேதியே வெளியாகும் என அறிவிக்கப்பட்டதாலும் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் விநியோக உரிமை வேண்டாம் என ஹரியிடம் தெரிவித்தேன். சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஜனவரி 10ம் தேதி ஹரியுடன் மறு ஒப்பந்தம் செய்யப்பட்டு அதன்படி எம்.ஜி. தொகை, ஜிஎஸ்டி உட்பட 4.78 கோடி எனவும், 2.36 கோடி ரூபாய் கூடுதல் டெபாசிட் தொகையாக வைத்துக்கொள்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
ஒப்பந்தப்படி நான் தரவேண்டிய ரூபாய் 8 கோடியை கொடுத்துவிட்டேன். மேலும் விளம்பரம், டிஜிட்டல் பிரிண்ட் செலவுகளுக்காக 94 லட்சம் செலவு செய்தேன். படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றபோதிலும் மாளிகைபுரம், துணிவு பட வெற்றிகளால் வாரிசு படம் எதிர்பார்த்த வசூலை குவிக்காமல் ரூபாய் 6.83 கோடி மட்டுமே வசூல் செய்தது. இதில் என் கமிஷன் போக தில்ராஜுவிடமிருந்து எனக்கு வர வேண்டிய தொகை ரூ 3.6 கோடி ஆகும்.
இதில் மார்ச் 13ஆம் தேதி ரூ.16 லட்சம் மட்டும் பெற்றுள்ளேன். மீதி வரவேண்டிய தொகை ரூ.3.44 கோடி ஆகும். இதனை திருப்பி கேட்டு பல மாதங்களாக அலைந்தும் என் பணம் எனக்கு கிடைக்கவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன். எனவே தாங்கள் இதில் தலையிட்டு ஒரு தீர்வை எட்டித் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து விநியோகஸ்தர் ராயிடம் பேசிய போது, ”மூன்று தலைமுறைகளாக திரைப்பட விநியோகம், திரையரங்க தொழிலை எங்களது குடும்பம் நடத்திவருகின்றது. கடந்த ஏழு மாதங்களாக பணத்தை திருப்பி வாங்குவதற்கு தயாரிப்பாளர் தரப்பை தொடர்பு கொள்ள விடாமல் முயற்சி மேற்கொண்டேன். அதனால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. வேறு வழி தெரியாமல் தான் படத்தின் நாயகன் விஜய்க்கு நேரடியாக கடிதம் எழுதினேன்” என்றார்.
அதற்கு படத்தில் கதாநாயகனாக சம்பளத்திற்கு நடித்த விஜய் எப்படி இதற்கு பொறுப்பாவார் என்று கேட்டபோது, “சினிமாவில் அப்படி கூறமுடியாது. படத்தின் தயாரிப்பு செலவில் 60% முதலீடு கதாநாயகனின் சம்பளமாக கொடுக்கப்படுகிறது. ஒரு படத்தின் வெற்றி கதாநாயகன் சம்பளம் அதிகரிக்க காரணமாகிறது.
அதே வேளையில் தோல்வி என்றால் கதாநாயகனை பாதிக்காது ஆனால் விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைகின்றனர். அதனால் தான் கதாநாயகன் விஜய் கவனத்திற்கு எனது பிரச்சினையைக் கொண்டு செல்ல முயற்சித்தேன். ஆனால் விஜய் தரப்பில் இருந்து எந்தவொரு தகவலும் இல்லை” என்று தெரிவித்தார்.
அப்படியே அவர் தலையிட்டாலும் நஷ்டத்தை சரி செய்ய விஜய் பணம் கொடுக்க முடியுமா என கேட்டபோது, “ஹீரோக்கள் சொன்னால் தயாரிப்பாளர்கள் கேட்பார்கள். அவரும் நஷ்டப்பட்டிருக்கும் நிலையில் ஹீரோக்கள் தாங்கள் வாங்கிய சம்பளத்தை குறைத்துக் கொண்டு பணத்தை திருப்பிக்கொடுக்கலாம். அதற்கு மிகச்சிறந்த முன் உதாரணம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்” என்றார்.
தொடர்ந்து அவரிடம், ரஜினிகாந்த் சொந்த தயாரிப்பில் தயாரான பாபா படத்திற்கு கொடுத்தார். அவர் நடித்த வேறு படங்கள் நஷ்டமடைந்ததற்கு சம்பளத்தில் ஒரு பகுதியைக் கொடுத்தாரா? என்ற கேள்வி கேட்டதற்கு
”குசேலன், லிங்கா இரண்டு படங்களையும் அவர் (ரஜினிகாந்த்) தயாரிக்கவில்லை. ஆனால் இந்தப்படங்கள் மூலம் விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் நஷ்டமடைந்தபோது அவரே நேரடியாக தலையிட்டு தனது சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை திருப்பிக்கொடுத்து நஷ்டத்தை சரிகட்டினார்.
அதனால் தான் அவர் இன்றளவும் சூப்பர் ஸ்டார் என அவரது ரசிகர்களால் மட்டுமல்ல விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களால் கொண்டாடப்படுகிறார். சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்படும் நடிகர் விஜய் ரஜினிகாந்த் வழியை பின்பற்ற வேண்டும் என எதிர்பார்க்கிறோம்” என்றார் விநியோகஸ்தர் ராய்.
இது சம்பந்தமாக தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் பேசிய போது,
”வாரிசு பட வியாபாரம், அதன் வசூல் தகவல் எல்லாம் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட ஒன்று. ரஜினிகாந்த் படங்களை காட்டிலும் விஜய் படங்களின் வியாபாரம், வசூல் அதிகம் என்பது உண்மை. அதற்கேற்ப அவரது சம்பளம் அதிகரித்து வருகிறது.
இதுவரை விஜய் படங்கள் மூலம் நஷ்டப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு விஜய் உதவியது இல்லை. அடுத்த சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்படும் விஜய் வாரிசுபட பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண உதவினால் அவரது இமேஜ் அதிகரிக்கும். இதனை அவர் செய்வாரா என்பதை விநியோகஸ்தர்கள் வட்டாரம் எதிர்பார்த்து காத்திருக்கிறது” என்றனர்.
இராமானுஜம்
“எ.வ.வேலு குறித்து மோடி பேசியதை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்” – டி.ஆர்.பாலு கடிதம்!