உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் விஷால் நேற்று (ஜனவரி 12) நடைபெற்ற மதகஜராஜா பட பிரீமியர் ஷோவுக்கு தனது அதே கம்பீரத்துடன் வந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி, சோனுசூட் ஆகியோர் நடித்துள்ள மதகஜராஜா திரைப்படம் 2012ஆம் ஆண்டு உருவானது. ஆனால் பல்வேறு காரணங்களால் ரிலீஸாக தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் பொங்கல் ரேசில் இருந்து அஜித்தின் ’விடாமுயற்சி’ விலக, நீண்ட காலமாக வெளியீட்டிற்கு காத்திருந்த மதகஜராஜா ஜூன் 14ஆம் ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
12 ஆண்டுகளுக்கு பிறகு வெளியானாலும், ரிலீஸ் அறிவிப்பு வெளியானது முதல் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.
இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த பட பிரமோஷன் நிகழ்ச்சியில் வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த விஷால் கலந்துகொண்டார். மேடையில் கைகள் நடுங்கியபடி மைக்கில் பேசிய அவரைக் கண்டு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் ஷாக் ஆனது. அவர் மீண்டும் உடல் நலம் பெற வேண்டுமென பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் பிரிமியர் ஷோ நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் விஷால் மீண்டும் தனது பழைய கம்பீரத்துடன் மேடையில் பேசினார்.
இந்த இரண்டு மட்டுமே என்னுடைய பலம்!
அவர், “சென்ற நிகழ்ச்சியில் என் நிலையை பார்த்த பலரும் மெசேஜ் மூலமும், தொலைபேசி மூலமும் என்னிடம் நலம் விசாரித்தீர்கள். இந்தளவுக்கான அன்பை உண்மையில் நான் எதிர்ப்பார்க்கவில்லை. எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. இவ்வளவு அன்புக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். சாகும் வரை அதை மறக்கமாட்டேன்.
நிறைய பேர் நான் அப்பல்லோ, காவேரி மருத்துவமனைகளில் அட்மிட் ஆகியிருப்பதாக எழுதினர். ஆனால் நான் எங்கும் அட்மிட் ஆகவில்லை. மார்க் ஆண்டனி படத்தில் சொல்வதுபோல, ‘நான் விழுவேன்னு நினைச்சியா? நான் விழ மாட்டேன்’ என்பதைதான் சொல்ல நினைக்கிறேன்.
வைரல் ஃபீவர் தான் அன்று அதிகமாக இருந்தது. அம்மா, அப்பா நிகழ்ச்சிக்கு போக வேண்டாம் என்று கூறினார்கள். ஆனால் எனக்கு சுந்தர்.சி முகம்தான் தெரிந்தது. மதகஜராஜா முகம்தான் தெரிந்தது.
எனக்கு தன்னம்பிக்கை தான் பலம். எனது அப்பா தான் பலம். இந்த இரண்டும் இருக்கும் வரை, எந்தவொரு தடையையும் சர்ச்சையையும் நான் தாண்டி வருவேன்.
நிறைய பேர், ‘3 மாதம் 6 மாதம் இவர் ஷூட்டிங் வரமாட்டேன்’ என்றெல்லாம் சொன்னார்கள். அதெல்லாம் இல்லை. நான் நலமாகத்தான் இருக்கிறேன். எல்லோரின் அன்புக்கும் நன்றி. ஆத்மார்த்தமான உங்கள் அன்புக்கு, வெள்ளித்திரை மூலம் ஆத்மார்த்தமாக நல்ல படங்கள் கொடுப்பேன். மதகஜராஜா திரைப்படம், நிச்சயம் வயிறு வலிக்க உங்கள் எல்லோரையும் சிரித்து மகிழவைக்கும்.
இன்னைக்கு நல்லா தான் இருக்கிறது. மைக்கு நடுங்கவில்லை. மதகஜராஜாவின் முதல் பாகம்தான் இது. இரண்டாம் பாகமும் உங்களுக்கெல்லாம் பிடிக்கும். நீங்கள் எல்லோரும் என்னுடைய ஃபேன்ஸ் இல்லை… என்னுடைய நண்பர்கள். உங்கள் எல்லோருக்கும் என் நன்றி. அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்” என்று விஷால் நெகிழ்ச்சியாக பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
நாளை முதல்வர் தொடங்கி வைக்கும் சென்னை சங்கமம்… எந்த இடத்தில் எந்த நிகழ்சிகள்… முழு விவரம்!
தாய்நாடான பாகிஸ்தானுக்கு மலாலா சென்றது எதற்காக?
டாப் 10 நியூஸ் : அயலகத் தமிழர் தின விழாவில் ஸ்டாலின் முதல் INDvsENG டி20 டிக்கெட் விற்பனை வரை!