சில படங்களின் பெயர்களைக் கேட்டவுடனே, படம் இப்படித்தான் இருக்கும் என்ற எண்ணம் தானாகப் படரும். சில படங்களோ, நமது எதிர்பார்ப்பு சரியாக இருப்பது போலத் தோன்றச் செய்து, இறுதியாக நம்மை அதிர்ச்சியடைய வைக்கும். எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் தினேஷ்குமார், யோகிபாபு, உபாசனா, இமான் அண்ணாச்சி, சென்றாயன் உள்ளிட்ட சிலர் நடித்திருக்கும் ‘லோக்கல் சரக்கு’ அதில் இரண்டாவது ரகம்.
அப்படிச் சொல்லும் அளவுக்குப் படத்தில் என்ன இருக்கிறது?
மதுவில் ஊறியவன்!
பூ கட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் நாரினை எந்நேரமும் நீரில் ஊற வைத்திருப்பார்கள். பூ கட்டும்போது நெகிழ்ந்து கொடுக்க வேண்டுமென்பதற்காகவே அந்த ஏற்பாடு. இந்த உதாரணத்திற்குச் சம்பந்தமில்லை என்றபோதும், இதனைச் சொல்ல வேண்டியிருக்கிறது. மிகச்சிலர் இதே போன்று சதாசர்வ காலமும் மது போதையில் ஊறிக் கிடப்பார்கள். ஒரு கணம் கூட, அந்த போதையின் பிடியில் இருந்து விடுபடத் தயாராக இருக்க மாட்டார்கள். அப்படியொரு மனிதன் தான், ‘லோக்கல் சரக்கு’ படத்தில் வரும் நாயகன்.
என்ன நடந்தது என்று தெரியாத அளவுக்கு மது போதையில் திளைப்பவன். எப்படியாவது இன்றைய தினம் மது அருந்த வேண்டுமென்று நினைப்பவன். அப்படிப்பட்ட மனிதனுக்கு ஒரு தங்கை. தினமும் அவர் தரும் பணத்தை எடுத்துக்கொண்டு அல்லது தனக்குத் தெரிந்த, அறிந்த, சிலவேளைகளில் முன்பின் தெரியாத அந்நிய நபர்களிடம் கடன் வாங்கியாவது மதுக்கடைக்குச் செல்லத் துடிப்பவன். தன்னைத் திருமணம் செய்ய விரும்பியவரோடு வீட்டை விட்டு வெளியேறத் தங்கை தயாரானதைக் கண்டபிறகும், அந்த அவமானத்தின் ஆழத்தை முழுமையாக உணராதவன்.
அப்படிப்பட்ட ஒரு மனிதனுக்குத் திருமணமாகி, அழகான பெண்ணொருத்தி மனைவியாக அமைந்து, அதன்பிறகும் குடியே கதி என்று கிடந்தால் என்னவாகும்? அதுவே ‘லோக்கல் சரக்கு’ படத்தில் கதையாக விரிகிறது.
ஒரு பிரச்சனையோடு கதை தொடங்கினால், அது தீர்வதாகத்தான் படம் முடிவடையும் என்பது கடைக்கோடி ரசிகனுக்கும் தெரியும். அதற்கேற்ப, ’குடிக்கிறவன் தானா திருந்தினாத்தான் உண்டு’ என்ற வசனம் இப்படத்தில் உண்டு; திரைக்கதையின் பின்பாதியில் அப்படியொரு இடமும் வருகிறது. அது, மது போதையில் திரியும் மனிதர்களைக் கண்டு பதைபதைக்கும் உள்ளங்களுக்கு நிச்சயம் ஆறுதலளிக்கும்.
தவறான ‘ட்ரீட்மெண்ட்’!
எந்நேரமும் குடியே கதி என்று திரியும் மனிதர்கள், அவ்வாறு அடிமையானதற்கான காரணங்களாகக் காதல் தோல்வி, வணிகத்தில் நஷ்டம், வேலையின்மை போன்றவற்றைக் குறிப்பிடுவார்கள். அப்படி எந்தக் காரணமுமின்றி குடிக்கத் தொடங்கி மதுவுக்கு அடிமையான ஒரு சராசரி மனிதனைத் திரையில் வெளிப்படுத்தியிருக்கிறார் டான்ஸ்மாஸ்டர் தினேஷ்குமார்.
ட்ரிம் செய்யப்படாத தாடி மற்றும் தலைமுடி, உடையணிவதில் நேர்த்தியின்மை, மதுவைத் தவிர வேறெதற்கும் முக்கியத்துவம் தராத மனப்பாங்கை மிகச்சரியாகத் திரையில் பிரதிபலித்திருக்கிறார். ’கட்டிங் போடறதுக்கு ஒரு பத்து ரூபா குறையுது’ என்று வருவோர் போவோரிடம் கேட்கும் இடங்கள், ‘நிஜமாவே இவர் குடிச்சிட்டு நடிச்சிருக்காரோ’ என்றெண்ணும் அளவுக்குக் கனகச்சிதமாக இருக்கின்றன. ஹேட்ஸ் ஆஃப் மாஸ்டர்!
தினேஷின் ஜோடியாக வரும் உபாசனா, படத்தில் ஜுனியர் ஆர்ட்டிஸ்டாக வருகிறார். ஆனால், அதையும் மீறி தான் ஒரு நாயகி மெட்டீரியல் என்பதை அவரது உடல்வாகு காட்டிக்கொடுக்கிறது.
உபாசனாவை சைட் அடிக்கும் காட்சிகளில் கலகலக்க வைக்கும் யோகிபாபு, பின்பாதியில் தினேஷுக்கு அட்வைஸ் செய்யும் காட்சியிலும் அதேபோன்று ‘கலாய்த்தல்’ பாணி வசனங்களைப் பயன்படுத்தியிருப்பது அருமை.
இவர்கள் தவிர்த்து இமான் அண்ணாச்சி, சென்றாயன், வினோதினி, சிங்கம்புலி, வையாபுரி என்று பலர் இப்படத்தில் உண்டு. ‘குக்கூ’வில் கலக்கிய ஈஸ்வர் சந்திரபாபு இதில் வீணடிக்கப்பட்டிருக்கிறார். முன்னணி ஹீரோவாக சாம்ஸ் தலைகாட்டும் காட்சிகள் நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும்.
தினேஷின் தங்கையாக நடித்தவருக்குப் படத்தில் பெரிய முக்கியத்துவம் தரப்படவில்லை. அதேபோல, அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களோடு மையப்பாத்திரங்கள் கொண்டிருக்கும் உறவுப்பிணைப்பும் திரைக்கதையில் வெளிப்படவில்லை. அது இப்படத்தின் பெரிய பலவீனம்.
ப்ரேமில் தலைகாட்டும் தலைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு மிகக்குறைவான நடிப்புக்கலைஞர்களே இதில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர். படப்பிடிப்புத்தளத்திலும் அதுவே நிகழ்ந்திருக்கும் என்று யூகிக்க முடிகிறது.
கோவிட் – 19 பாதிப்பின்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலகட்டத்தில் நடப்பதாக உள்ளது ‘லோக்கல் சரக்கு’ கதை. அதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், அதனை விளக்குவதற்கு இயக்குனர் எந்த முயற்சியும் செய்யவில்லை; ‘மாண்டேஜ்’ ஏதும் இல்லாமல், அதனை வெறுமனே வசனமாகப் பேசி முடித்துவிடுகின்றனர்.
தொலைக்காட்சி சீரியல்களே அழகுற எடுக்கப்படும் காலத்தில், மிகக்குறைந்த செலவில் படம் உருவாகியிருப்பதைப் பட்டவர்த்தனமாகக் காட்டுகிறது பழனியின் ஒளிப்பதிவு. வெளிப்புறக் காட்சிகளில் இருக்கும் ’லைவ்லினெஸ்’ வீட்டின் உட்புறத்தில் நிகழும் காட்சிகளில் அமையவில்லை.
டாஸ்மாக் பார், டீக்கடை போன்ற இடங்களைப் பார்க்கும்போது மட்டும் முஜீப் ரஹ்மானின் கலை வடிவமைப்பைச் சிலாகிக்கத் தோன்றுகிறது.
படத்தொகுப்பாளர் கேஸ்ட்ரோ, இயக்குனர் எடுத்த காட்சிகள் அனைத்தையும் வரிசையாகத் தொகுத்திருக்கிறார். இடைவேளை திருப்பத்தையும் அதன்பின் வரும் பிளாஷ்பேக் காட்சியையும் காட்டிய விதம் அருமை.
வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையில் ஒரு குத்துப் பாடல் படத்தில் உண்டு. பத்தாண்டுகளுக்கு முன் வெளிவந்திருக்க வேண்டிய பாடல் அது.
‘அமெரிக்க ஜனாதிபதி முருகேசன் வாழ்க’ என்ற வடிவேலு – லிவிங்ஸ்டன் காமெடி காட்சியை ரசித்தவர்களுக்கு இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார் யார் என்று தெரிந்திருக்கும்.
இதற்கு முன் சுறா, பொன்மனம், என் புருஷன் குழந்தை மாதிரி உட்பட 8 படங்களை இயக்கியிருக்கிறார். இப்படங்களில் எல்லாம் குறைந்தபட்சம் நான்கைந்து நகைச்சுவை காட்சிகளாவது திரும்பத் திரும்பப் பார்க்கும் ரகத்தில் இருக்கும். ’லோக்கல் சரக்கு’ படத்திலும் அப்படிப்பட்ட காட்சிகளே இக்கதையைத் தாங்கிப் பிடிக்கின்றன.
பட்ஜெட் குறைவும் யதார்த்தத்தைத் திரையில் நிறைக்கத் தவறிய திரைக்கதை ட்ரீட்மெண்டும் படத்தின் தரத்தைப் பின்னுக்கு இழுத்திருக்கிறது. அவற்றையெல்லாம் சரி செய்திருந்தால், இன்னும் கூர்மையாக நகைச்சுவையைச் செதுக்கியிருந்தால் இந்த படம் தொட்டிருக்கும் உயரமே வேறு.
பெண்களை ஆபாசமாகப் படம்பிடித்து மிரட்டுவதை முன்வைத்து இப்படத்தின் கிளைமேக்ஸை அமைத்திருக்கிறார் இயக்குனர். மதுவுக்கு அடிமையாதல் போன்றே இச்சமூகத்தில் தீர்க்கப்பட வேண்டிய முக்கியப் பிரச்சனை அது என்று சொன்ன வகையில் நம்மைக் கவர்கிறார் எஸ்.பி.ராஜ்குமார்.
வெல்கம் தினேஷ்!
திரையுலகில் தொழில்நுட்பக் கலைஞர்களாகப் பெரும்புகழ் சம்பாதிப்பவர்கள் திரையில் முகம் காட்டத் தயங்குவார்கள். நடிப்பில் ஆர்வம் பொங்கி வழிந்து, வெகுசிலர் அதனை நோக்கி நகர்வது தனிக்கதை. ஆனால், தொடரும் பணிகளுக்கு நடுவே தனக்கேற்ற கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடிப்பது ரொம்பவே அபூர்வம். அந்த வகையில் ஒரு குப்பைக்கதை, நாயே பேயே போன்றவை குறைந்த பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க முயற்சிகளாக அமைந்தன. அந்த வரிசையில் இடம்பெறுகிறது ‘லோக்கல் சரக்கு’. அதற்காகவே, அவரது முனைப்புக்கு ஒரு ‘வெல்கம்’ சொல்லலாம்.
தினேஷைப் போன்று சிரத்தையுடன் உழைத்தவர்களுக்காகவது ’லோக்கல் சரக்கு’ இன்னும் கொஞ்சம் நேர்த்தியாக அமைந்திருக்கலாம்.. ஹும்..!
உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நிர்வாக திறமையின்மையால் கீழ்வெண்மணியில் ஓலை குடிசைகள்: ஆளுநர் குற்றச்சாட்டு!
எஸ்சி, எஸ்டி மாணவர்கள் படிக்கக்கூடாது என்பதே பாஜகவின் நோக்கம்: திருமா
காஞ்சிபுரத்தில் நாட்டிலேயே மிகப்பெரிய புற்றுநோய் ஆராய்ச்சி மையம்: மா.சுப்பிரமணியன்
பியூட்டி டிப்ஸ்: சரும நிறத்தை அதிகரிக்க இயற்கையான வழிகள் இதோ!