காளி வெங்கட். சமகாலத்தில் தமிழ் திரையுலகில யதார்த்த நடிப்புக்கான உதாரணங்கள்ல ஒருத்தரா இருக்குறவர்.மிகச் சாதாரணமாக, மிக இயல்பாக, மிக நேர்த்தியாக, நம்ம முன்னால பேசிக்கிட்டிருக்கிற ஒரு ஆளு அப்படிங்கற தோற்றத்தை திரையில உருவாக்கிடும் காளி வெங்கட்டோட நடிப்பு.
’தமிழ் சினிமாவுல முப்பதுல இருந்து நாற்பது வயசு கேரக்டர்ல நடிக்க ஆளே இல்ல’ அப்படின்னு சொன்னவங்களுக்கு பதிலா அமைஞ்சது இவரோட இருப்பு. நேர்ல சந்திக்கறபோதும், காளி வெங்கட்டோட பேச்சும் உடல்மொழியும் அப்படித்தான் இருக்கும். அதை, தான் நடிக்கிற கேரக்டர் மேல ஏத்துறதுல ஒரு வித்தகன்னு இவரைச் சொல்லலாம்.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பக்கத்துல இருக்குற சாயமலையில பிறந்து வளர்ந்தவர் காளி வெங்கட்.இவரோட உண்மையான பேரு வெங்கட். காளிங்கறது இவர் முதன்முதலா நடிச்ச படத்துல வந்த கேரக்டரோட பேரு.சின்ன வயசுல படிப்பு, விளையாட்டு, வார இறுதியில தியேட்டர்ல படம் பார்க்கறதுன்னு இருந்த வெங்கட்டுக்கு நாடகங்கள் நடிக்கறதுல ஆர்வம் அதிகம். அதுவே, சினிமாவுல முகம் காட்டணும்கற வெறியாகவும் மாறுச்சு. 1998 வாக்குல சென்னைக்கு அவரை வர வச்சது.
சினிமா வாய்ப்புங்கறது குதிரைக்கொம்புன்னு நினைச்சவர், முதல்ல ஒரு வேலைய, தொழிலை கத்துக்கிடுவோம்னு இறங்குனார். காய்கறி விற்பனை, மளிகைக்கடைன்னு பல வேலைகள் செஞ்சார். தண்ணீர் கேனை வீடுவீடா கொண்டு போற வேலைய பின்னாட்கள்ல செஞ்சிருக்கார்.
கிட்டத்தட்ட 10 வருஷ உழைப்புக்குப் பிறகு, ‘இனிமே சான்ஸ் தேடலாம்’னு முடிவு பண்ணி கோடம்பாக்கம் வீதிகள்ல திரிய ஆரம்பிச்சார் வெங்கட். அவரோட முதல் படையெடுப்பு ‘சித்திரம் பேசுதடி’ தந்த இயக்குனர் மிஷ்கினை நோக்கி அமைஞ்சது. அவர் படங்கள்ல நடிக்க வாய்ப்பு கிடைக்காதபோதும், அந்த அனுபவமே தன்னை மாதிரியே நடிக்க காத்திருந்த பலரை அறிமுகப்படுத்தி வச்சது. தினேஷ், விஜய் சேதுபதி, முனீஸ்காந்த், கருப்பு நம்பியார்னு அந்த லிஸ்ட் ரொம்ப பெருசு.
இடைப்பட்ட காலத்துல, விஜயபிரபாகரன் இயக்குன ‘தசையினைத் தீச்சுடினும்’ படத்துல முதன்முறையா நடிச்சார் வெங்கட். அந்தப் படத்துல அவர் நடிச்ச கேரக்டர் பேரு தான் காளி. பிறகு, அதுவே இவரோட பேரா மாறிடுச்சு.
தன்னோட திரையுலக குருன்னு இயக்குனர் விஜயபிரபாகரனை பல மேடைகள்ல குறிப்பிட்டிருக்கார் காளி வெங்கட். ஆனா, அந்தப் படம் திரைக்கு வரலை.
அந்த காலகட்டத்துல, சினிமா தேடலைக் கைவிட முடியாம பல சினிமாக்கள்ல வில்லனோட அடியாளா, கூட்டத்துல ஒருத்தரா வந்து போயிருக்கார் காளி வெங்கட். அதுக்கு முற்றுப்புள்ளி வச்ச படம் ‘வ – குவார்ட்டர் கட்டிங்’. மிர்ச்சி சிவா, சரண், லேகா வாஷிங்டன் நடிச்ச அந்தப் படத்துல ஒரு சின்ன கேரக்டர்ல நடிச்சார்.
அதைத் தொடர்ந்து வந்த வாய்ப்புகள்ல ‘மௌனகுரு’ பேர் சொல்ற மாதிரி அமைஞ்சது.தொடர்ந்து கலகலப்பு, உதயம் என்ஹெச் 4, விழான்னு நடிச்சிட்டு வந்தவருக்கு பெரிய பிரேக் தந்த படம் ‘தெகிடி’. இந்தப் படத்துல ஹீரோ அசோக்செல்வன் ப்ரெண்டா, நம்பிங்கற கேரக்டர்ல நடிச்சிருந்தார் காளி வெங்கட். அது, பல ரசிகர்கள் அவரைத் தங்கள்ல ஒருத்தரா நினைக்க வச்சது. 2014இல் வெளியான ‘முண்டாசுப்பட்டி’யிலயும் ஹீரோ கூட வர்ற நண்பன் பாத்திரம் தான். எண்பதுகள்ல நடக்குற பீரியட் கதையா அமைஞ்ச இந்தப் படம், காளி வெங்கட்டை ரசிகர்கள் அடையாளம் காண வச்சது.
‘மாரி’ படம், ஒரு நட்சத்திர நடிகரோட நடிக்கறப்போ அதே ரசிகர்கள் எவ்வளவு பெரிய வரவேற்பை தருவாங்கன்னு நிரூபிச்சது. இந்த காலகட்டத்துல, ஹீரோயினோட அப்பாவா ‘இறுதிச்சுற்று’ படத்துல நடிச்சார் காளி வெங்கட். அதோட இந்தி பதிப்புலயும் இவரே இடம்பிடிச்சார்.
தொடர்ந்து தெறி, இறைவி, கொடி, மெர்சல், வேலைக்காரன்னு பல படங்கள்ல ரசிகர்கள் கொண்டாடுற கேரக்டர்ல இடம்பிடிச்சார்.ராஜா மந்திரி படத்துல கலையரசன் கூட இரண்டு ஹீரோக்கள்ல ஒருவரா நடிச்சார் காளி வெங்கட்.
எனக்கு வாய்த்த அடிமைகள் படத்துல ஹீரோ ஜெய்க்கு இணையா, அவரோட மூன்று ப்ரெண்ட்ஸ்ல ஒருத்தரா வந்து போனார்.
தொடர்ந்து பல படங்கள்ல காமெடி பண்ணிட்டிருந்த காளி வெங்கட்டை, ரொம்பவே சீரியசான ஒரு கேரக்டர்ல காட்டுன படம் ‘ராட்சசன்’. அது, இவரால இப்படியும் நடிக்க முடியும்னு திரையுலகைச் சேர்ந்தவங்களை உணர வச்சது.
அந்த வரிசையில இடம்பெறுகிற இன்னொரு படம், சாய் பல்லவி முதன்மை வேடத்துல நடிச்ச ‘கார்கி’. இதுல முழுக்கவே ஹீரோயின் கூட வர்ற பாத்திரமா வந்தார் காளி வெங்கட். அதுல இவரோட வித்தியாசமான முகத்தை பார்க்க முடியும்.’அநீதி’ படத்துல ‘தங்கப்பிள்ளே’ங்கற வார்த்தை மூலமாக, நம்மை கதறி அழ வச்சவர் காளி வெங்கட்.
அதேநேரத்துல, ‘கட்டாகுஸ்தி’யில விழுந்து விழுந்து சிரிக்க வச்சிருப்பார். ’கேப்டன் மில்லர்’ல ’இப்படியொரு கொடூரமான ஆளா’னு மிரள்கிற அளவுக்கு வில்லத்தனம் காட்டியிருப்பார். விதவிதமான கேரக்டர்ல நடிக்கற வாய்ப்புகள் வந்தாலும், அதனை ஏற்று நடிக்கிற தைரியம் தான் காளி வெங்கட்டோட சிறப்பு.
மகாமுனி, சூரரை போற்று, சார்பட்டா பரம்பரை, ஐங்கரன் போன்ற படங்கள்ல சப்போர்ட்டிங் ஆர்ட்டிஸ்டா தோன்றின காளி வெங்கட், ஹர்கரா, டியர், குரங்கு பெடல், தோனிமா படங்கள்ல முக்கிய பாத்திரமா இடம்பெற்றிருப்பார்.
அவ்வளவு ஏன், ‘லப்பர் பந்து’ல இவர் நடிச்ச கருப்பையா பாத்திரம் ரசிகர்களால அப்படிக் கொண்டாடப்படுது. ஒரு நடிகன் அல்லது நடிகை எத்தனை காட்சிகள்ல வர்றாங்கறதை விட, அதுல அவங்களோட நடிப்பு எப்படிப்பட்ட வரவேற்பை ரசிகர்கள்கிட்ட பெறுதுங்கறது ரொம்ப முக்கியம். அந்த வகையில, திரையில் மிகச்சாதாரண மனிதனாகத் தெரியும் காளி வெங்கட் ஒரு அசாதாரணமான கேரக்டர் ஆர்ட்டிஸ்ட். அவரோட எதிர்காலப் பயணம், நமக்கு இன்னும் பல ஆச்சர்யங்களைத் தர வேண்டும்..!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதய் பாடகலிங்கம்
அபிசேக்குடன் காதல்? : நிம்ரத் கவுருக்கு அமிதாப் கடிதம் எழுதியது ஏன்?
கங்குவா : ட்விட்டர் விமர்சனம்!