விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் ஒரு படத்தை தயாரிக்கும் என கூறப்பட்டு வந்தது. பிரதீப் ரங்கநாதன் சம்பளம் மற்றும் விக்னேஷ் சிவன் கூறிய பட்ஜெட் காரணமாக ராஜ்கமல் நிறுவனம் படம் தொடங்குவதை தாமதப்படுத்தியது.
இந்த நிலையில் ஏற்கனவே வணிகரீதியாக இணக்கமான உறவில் இருக்கும் செவன் ஸ்கீரின் நிறுவனத்துடன் கைகோர்த்த விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதனை கதாநாயகனாக வைத்து படம் இயக்குகிறார் . இந்த படத்துக்கு ‘எல்.ஐ.சி.’ (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என்று பெயரிடப்பட்டு அறிவிக்கப்பட்டது.
இதில் கீர்த்தி ஷெட்டி நாயகியாகவும், எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
இந்நிலையில், எல்.ஐ.சி.என்கிற தலைப்பை ஏற்கனவே தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தாம் பதிந்து வைத்திருப்பதாக இசையமைப்பாளரும், இயக்குநருமான எஸ்.எஸ்.குமரன் அறிக்கை வெளியிட்டார்.
செவன் ஸ்கீரீன் நிறுவனம் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்தது.
இப்போது அடுத்த பிரச்சினையாக ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ (எல்.ஐ.சி) என்ற தலைப்பை படத்துக்கு பயன்படுத்துவதை நிறுத்தக்கோரி பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான – எல்.ஐ.சி செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நோட்டீஸ் பெற்ற 7 நாட்களுக்குள் படத்தின் பெயரை மாற்றாவிட்டால் உரிமையியல், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த நோட்டீசில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அனிமல் படத்தின் வெற்றி ஆபத்தானது: எழுத்தாளர் ஜாவித் அக்தர் விமர்சனம்!
வேலைவாய்ப்பு: அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி!