lets get married (LGM) movie review

எல்.ஜி.எம் – விமர்சனம்!

சினிமா

சில படங்களில் சுவாரஸ்யமான ஐடியா இருக்கும். அதற்கேற்ற காட்சிகளோ, கதைத் திருப்பங்களோ இருக்காது. சில படங்களில் சுவாரஸ்யப்படுத்தும் விஷயம் எதுவுமில்லை என்றாலும் கூட, காட்சியமைப்பும் கதாபாத்திர வடிவமைப்பும் நம்மை இருக்கையோடு கட்டிப் போடும். இந்த பில்டப் எதற்கு என்று கேட்கிறீர்களா? தோனி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், ரமேஷ் தமிழ்மணி எழுதி இசையமைத்து இயக்கியிருக்கும் ‘எல்ஜிஎம்’ பார்த்துக் கொண்டிருந்தபோது, மேற்சொன்ன எண்ணங்கள் நம் மனதில் தோன்றியது. சரி, ‘எல்ஜிஎம்’ அதில் எந்த வகையறாவில் அடங்கும்?

குடும்பத்துடன் ஒரு ‘ட்ரிப்’!

திருமணமானபிறகு தம்பதிகள் தேனிலவுக்குச் செல்வார்கள். திருமணம் முடிந்தவுடன் அல்லது நிச்சயமானவுடன் ஆண், பெண் வீடுகளில் அவரவர் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக்கடன்களை நிறைவு செய்வார்கள். ‘பேச்சுலர் பார்ட்டி’ அல்லது ‘ஸ்பின்ஸ்டர் பார்ட்டி’ என்ற பெயரில் கண் காணாத இடத்திற்குச் சென்று கன்னாபின்னாவென்று கும்மாளமிடும் வழக்கமும் தற்போது நம்மவர்களைத் தொற்றியிருக்கிறது. அவற்றில் இருந்து வேறுபட்டு, ‘வாங்க பழகலாம்’ என்று மருமகள், மாமியார் உடன் ஊர் சுற்றக் கிளம்புவதைச் சொன்னது ‘எல்ஜிஎம்’ படத்தின் ட்ரெய்லர். கிட்டத்தட்ட படத்தின் கதையும் அப்படித்தான் உள்ளது.

லீலாவின் ஒரே மகன் கௌதம். அவன் திருமணம் கொண்டபிறகு, தான் கோயில், குளம் என்று இருந்துவிடலாம் எனும் நினைப்பில் இருக்கிறார் லீலா. ஆனால், திருமணப் பேச்செடுத்தாலே கௌதம் பிடி கொடுத்துப் பேசுவதில்லை. இப்படியே இரண்டு ஆண்டுகள் கடக்கின்றன. திடீரென்று ஒருநாள், தான் மீரா எனும் பெண்ணைக் காதலிப்பதாகக் கூறுகிறார் கௌதம். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தாலும், ஒருவழியாகச் சமாதானமாகிறார் லீலா. இருவரும் மீராவின் வீட்டிற்குச் செல்கின்றனர். அப்போது, மீரா சொல்லும் ஒரு விஷயம் கௌதமைக் காயப்படுத்துகிறது. வேறொன்றுமில்லை, ‘மாமியார் உடன் பழகிப் பார்க்காம ஒண்ணா வாழ முடியாது’ என்கிறார் மீரா. அதற்கான தீர்வாக, இரு குடும்பங்களும் ஒரு சுற்றுலா செல்லலாம் என்கிறார். அதனை ஏற்க மனமில்லாதபோதும், வேறு வழியில்லாமல் சம்மதிக்கிறார் கௌதம்.

செல்லும் வழியிலேயே, மீராவுக்கும் லீலாவுக்கும் பயங்கரமாக முட்டிக் கொள்கிறது. ‘இனி ஒரு நிமிடம் கூட இருவரும் சேர்ந்திருக்க முடியாது’ என்றானபிறகு, அடுத்தநாளே அனைவரும் சென்னை திரும்ப முடிவெடுக்கின்றனர். ஆனால், லீலாவும் மீராவும் மட்டும் தனியாக ஒரு ‘ட்ரிப்’ செல்ல முடிவு செய்கின்றனர். எப்போதும் போல, அதற்கும் ‘ஓகே’ சொல்கிறார் கௌதம்.

lets get married (LGM) movie review

ஆனால், பாதி வழியில் ‘அம்மா இன்ஹேலர் மறந்துவிட்டாரே’ என்று ஹோட்டலுக்கு மீண்டும் செல்கிறார். அப்போதுதான், இருவரும் கோவாவுக்கு தனியாகக் கிளம்பியது தெரிய வருகிறது. ’என்ன ஆபத்து காத்திருக்கிறதோ’ என்ற பயத்துடன் தனது நண்பனை அழைத்துக்கொண்டு இருவரையும் தேடிச் செல்கிறார் கௌதம். அதன்பின் என்ன நடந்தது என்பதோடு படம் முடிவடைகிறது.

ஒரு பெண் தனது காதலனின் அம்மாவுடன் பழகிப் பார்த்து, அவரை மாமியாராக ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்று முடிவு செய்வது கொஞ்சம் புத்துணர்ச்சி தரும் ஐடியா தான். ஆனால், அதற்காக இயக்குனர் யோசித்திருக்கும் காட்சிகள் தான் நம்மை ‘ப்பா..’ என்று அலற வைக்கிறது.

காப்பாற்றும் ஆர்ஜே விஜய்!

இந்தப் படத்தில் கௌதம் ஆக ஹரீஷ் கல்யாண், மீராவாக இவானா, லீலாவாக நதியா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களது கதாபாத்திரங்களை ஒன்றோடொன்று முரண்பட்டதாக, மிகத்தெளிவாக, ரசிகர்களோடு ஒன்றும்விதமாக வடிவமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் கதை, காட்சிகள், நடிப்பு என்று எல்லாமே ‘மெலிதாக’ இருக்க வேண்டுமென்று யோசித்து, உப்புச்சப்பில்லாத உணவை ருசித்த நிலைமையை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர்.

lets get married (LGM) movie review

ஹரீஷ் கல்யாண், இவானா இருவரும் ‘லைவ்’ ஆக நடிக்க முயற்சித்திருக்கின்றனர். ஆனாலும், ஒவ்வொரு பிரேமிலும் அவர்களது நடிப்பில் ’மேடை நாடக தொனி’யே தென்படுகிறது. இவானா தனது முகத்தில் ‘ப்ரெஷ்னெஸ்’ இருப்பதை உறுதி செய்துகொண்டு திரையில் தோன்றுவது நல்லது.

தன்னுடைய அனுபவ முதிர்ச்சியால் சில காட்சிகளைக் காப்பாற்றுகிறார் நதியா. யோகிபாபு வழக்கம்போல நம்மை நோகடித்திருக்கிறார். அவரது இருப்பை ‘அலேக்’ ஆக தாண்டியிருக்கிறார் ஆர்ஜே விஜய். தொலைக்காட்சி ஆண் தொகுப்பாளர்கள் பெண் விஐபிக்களை கண்டு வழிவது போன்று திரையில் ‘காமெடி’ செய்திருக்கிறார். அது ஆங்காங்கே நம்மைச் சிரிக்க வைக்கிறது. விக்கல்ஸ் விக்ரம், ஹரிக்கு இரண்டொரு காட்சிகளில் தலை காட்டும் வாய்ப்பு கிடைத்தாலும் ‘காமெடி’ செய்யும் வாய்ப்பு தரப்படவில்லை.

இவர்கள் தவிர்த்து தீபா, மோகன் வைத்யா, ஜானகி சபேஷ், வெங்கட்பிரபு என்று சிலர் வந்து போகின்றனர். கிளைமேக்ஸ் காட்சியில் தோன்றும் விடிவி கணேஷ், ‘டேய் இன்னாடா இவன்’ என்று தன் பாணியில் சில வசனங்களைப் பேசியிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் விஸ்வஜித் ஒடுக்கத்தில் கைவண்ணத்தில் குடகு அழகுறத் திரையில் காட்டப்பட்டிருக்கிறது. யோகிபாபு, நதியா, இவானா குதிரை வண்டியில் செல்லும் காட்சியில் இருள் கருப்பு மை கொட்டினாற்போல காட்டப்பட்டிருப்பது ‘டிஐ’ பற்றிய கேள்வியை உருவாக்குகிறது. அருண் வெஞ்சாரமூடுவின் கலை வடிவமைப்பு, எந்த வகையிலும் சாதாரண ரசிகர்களை திரையோடு பிணைப்பதாக இல்லை.

ஒட்டுமொத்த கதையும் ‘ஸ்மூத்’ ஆக நகர்வதில் படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவ் பெரிதாக அக்கறை காட்டவில்லை. ஒவ்வொரு காட்சியும் பிசிறில்லாமல் இருக்கிறதா என்று சரி பார்ப்பதோடு தனது பணி நிறைவடைந்ததாக நினைத்துவிட்டார் போல..

இந்த படத்தின் இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி ஒரு பன்முக வித்தகர். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியதோடு, இதில் இசையும் தந்திருக்கிறார். விஎஃப் எக்ஸ்பணிகளையும் மேற்பார்வையிட்டிருக்கிறார். முன்பாதி எளிதாக நம்மைக் கடந்துபோக, பின்னணி இசை ஒரு முக்கியக் காரணம். பின்பாதி திரைக்கதை படு சொதப்பல் என்பதால், அதையும் மீறி ஆங்காங்கே சுவராஸ்யமூட்டுகிறது இசை. அந்த வகையில், ஒரு இசையமைப்பாளராக ரமேஷ் தமிழ்மணியின் வரவு நிச்சயம் கவனிப்பைப் பெறும்.

ஏமாற்றிய தோனி!

’எல்ஜிஎம்’மில் ஆங்காங்கே சில காட்சிகளைப் பார்க்கும் ஒருவர், ‘இப்படம் நன்றாக இருக்கும்’ என்று நினைக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால், ஒட்டுமொத்தமாய் ஒரு படமாகப் பார்ப்பவர்களுக்குத்தான் அதிலுள்ள குறைகள் தெரியும்.

lets get married (LGM) movie review

‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’யிலும் தந்தை இல்லாமல் தனியாக ஒரு மகனை வளர்க்கும் வேடத்தில் நடித்திருப்பார் நதியா. அந்த பாத்திரமும் லீலாவும் ஒன்றல்ல; ஆனால், இரண்டையும் பார்க்கும் ஒருவரால் எதில் செய்நேர்த்தி அதிகம் என்று எளிதாகச் சொல்ல முடியும்.

உண்மையைச் சொன்னால், ‘லவ் டுடே’வில் கூட ராதிகா, இவானா இடையில் இது போன்றதொரு ‘ஈகோ யுத்தம்’ முளைப்பது போல லேசாகக் காட்டப்பட்டிருக்கும். இப்படத்தில் அதுவே மையமாக அமைக்கப்பட்டுள்ளது.

திரைக்கதையில் எந்த இடத்தில் அழுத்தம் தர வேண்டும், எங்கு தரக் கூடாது என்பதில் இயக்குனர் கவனம் செலுத்தவில்லை. கதாபாத்திரம், இடத்தை மாற்றுவதன் மூலமாக திரைக்கதையை நகர்த்தி அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்ல முடியும் என்று அவர் எண்ணியிருக்கலாம். ஆனால், அது நிகழவில்லை.

படம் பார்க்க வந்தவர்களில் பலர், ‘இது தோனி தயாரிப்பு’ என்றே அடையாளப்படுத்தியதைக் காண முடிந்தது. அந்த வகையில், அவரது தயாரிப்பு நிறுவனத்தை நினைவுகூரும் விதமாகவோ, அதன் பிரமாண்டத்தை உணரும் வகையிலோ ‘எல்ஜிஎம்’ நிச்சயமாக இல்லை. ’ஒரு ஹைடெக் சீரியல்’ பார்த்த எண்ணமே மனதில் தங்குகிறது.

அந்த விதத்தில், தோனி ஏமாற்றிவிட்டார் என்றே சொல்ல வேண்டும். இதே கதையை வைத்துக்கொண்டு இந்தியிலோ, பஞ்சாபியிலோ அல்லது வேறு மொழிகளிலோ இன்னும் சுவாரஸ்யமான திரைக்கதையை ஆக்க முடியும். ராதாமோகன் போன்ற ஒரு இயக்குனரால் அதனை எளிதாகச் சாதிக்க முடியும். இதெல்லாம் படம் பார்க்கும்போதே நம் மனதில் உலா வருவதுதான் ‘எல்ஜிஎம்’ தரும் சோகமான அனுபவம்.

உதய் பாடகலிங்கம்

நான் பண வசதியில்லாதவன், எவ்வாறு தான தர்மங்கள் செய்யமுடியும்?

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *