நடிகர் விஜய் நடித்த ‘லியோ‘ திரைப்படம் 19ஆம் தேதி வெளியாகும் நிலையில் திருப்பூரில் ‘லியோ’ படத்தை குறிக்கும் வகையிலான டி-ஷர்ட்ஸ் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது.
திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள் மூலம் விளையாட்டுப் போட்டிகள், தேர்தல் பிரச்சாரம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அணியக்கூடிய வகையில் டி-ஷர்ட்ஸ் தயாரித்து கொடுக்கப்படுகிறது. தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் அணிவது போன்று, நீலநிறத்தில் தயாரிக்கப்பட்ட ‘சிங்கிள் ஜெர்சி’ டி-ஷர்ட்டுகளுக்கான ஆர்டர் அதிகமாகி உள்ளது.
இந்த நிலையில் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் வருகிற 19ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படம் வெளியாகும் நாளில் அதை வரவேற்கும் விதமாக பல்வேறு ஏற்பாடுகளை ரசிகர்கள் செய்துள்ளனர். இந்த நிலையில் லியோ படத்தை குறிப்பிடும் வகையிலான டி-ஷர்ட் அணிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக திருப்பூர் பனியன் உற்பத்தி நிறுவனங்களுக்கு அதிக ஆர்டர்கள் வந்துள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள பனியன் உற்பத்தியாளர் ஒருவர், “ரஜினி நடித்த கபாலி படம் வெளியான போது அதை சிறப்பிக்கும் வகையில், டி-ஷர்ட் உற்பத்தி செய்யப்பட்டது. நம்நாடு மட்டுமின்றி அமெரிக்காவுக்கும் கூட அனுப்பப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக அதிக அளவிலான ஆர்டர் லியோ படத்துக்குப் பெறப்பட்டுள்ளது. விஜய் நற்பணி இயக்கத்தினர், ரசிகர்கள் அதிக அளவில் இதற்கு ஆர்டர் அளித்து வாங்கியுள்ளனர். லியோ படத்தின் விஜய் போஸ்டர், அதில் இடம்பெறும் பஞ்ச் டயலாக் ஆகியன அச்சிட்ட டி-ஷர்ட்டுகள் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது” என்றார்.
குறிப்பாக, லியோ டி-ஷர்ட்ஸ் ஆன்லைன் விற்பனையும் வேகமெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
ராஜ்