leo movie review

லியோ – விமர்சனம்!

சினிமா

வித்தியாசமான விஜய் படம்!

விஜய்யும் லோகேஷ் கனகராஜும் மீண்டும் இணைகிறார்கள் என்ற தகவல் வெளியானதில் இருந்து, ‘லியோ’ தியேட்டருக்கு வரும் கணம் வரை எதிர்பார்ப்பு மிகுந்து உச்சம் தொட்டது. அதற்கு நிறைய காரணங்கள் உண்டென்றபோதும், இரண்டு மட்டுமே பிரதானமாக இருந்தன.

‘மாஸ்டர்’ படத்தில் விஜய்யின் நடிப்பு அபாரமானதாக இருந்தது முதற்காரணம். இரண்டாவது, அந்த படத்தில் விஜய்யின் ஹீரோயிசத்திற்காக மாநகரம், கைதியில் தென்பட்ட லோகேஷ் கனகராஜின் படைப்பாக்க சிறப்பம்சங்கள் பின்னே தள்ளப்பட்டிருந்தன.

ஆதலால், லோகேஷ் கனகராஜின் தனித்துவமான காட்சியாக்கத்தோடு விஜய்யின் நடிப்பில் ஒரு மைல்கல்லாக ’லியோ’ அமையுமா என்ற கேள்வி மிகுந்திருந்தது. அதற்கு என்ன பதில் தந்திருக்கிறது விஜய் & லோகேஷ் கனகராஜ் கூட்டணி?

leo movie review

பெயர் குழப்பம்!

இமாச்சலப் பிரதேசத்திலுள்ள தியோக் எனுமிடத்தில் பேக்கரியொன்றை நடத்துகிறார் பார்த்திபன் (விஜய்). மனைவி சத்யா (த்ரிஷா), குழந்தைகள் சித்து (மேத்யூ தாமஸ்), ஜிட்டு (இயல்) உடன் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

ஒருநாள் இரவு, அவரது கடைக்குள் ஒரு கேங்க்ஸ்டர் கும்பல் நுழைகிறது. அவர்களில் ஒருவரிடம் துப்பாக்கி இருப்பதைக் காண்கிறார் பார்த்திபன். அந்த நேரத்தில் ஜிட்டுவும், ஸ்ருதி என்ற பணிப்பெண்ணும் அங்கிருக்கின்றனர். கடையைக் கொள்ளையடிப்பதோடு, மூவரையும் கொலை செய்யவும் அக்கும்பல் துணிகிறது. அதனைத் தடுக்கும் முயற்சியில், அந்த கும்பலைச் சேர்ந்த அனைவரையும் சுட்டுத் தள்ளுகிறார் பார்த்திபன்.

வழக்கு விசாரணையில் தற்காப்பிற்காக பார்த்திபன் சுட்டதாக முடிவாகிறது. அதைத் தொடர்ந்து, அவர் விடுவிக்கப்படுவது மட்டுமல்லாமல் வீர தீர செயலுக்காகவும் பரிந்துரைக்கப்படுகிறார். ஆனால், அவரால் சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையில் இறங்குகின்றனர். அவர்களிடம் இருந்து பார்த்திபன் தன் குடும்பத்தினரைக் காக்கப் போராடுகிறார்.

அப்போது, தெலங்கானாவைச் சேர்ந்த ஆண்டனி தாஸ் (சஞ்சய் தத்), அவரது சகோதரர் ஹெரால்டு தாஸின் (அர்ஜுன்) ஆட்கள் பார்த்திபனைத் தேடி வருகின்றனர். ‘நீதான் லியோன்னு ஒத்துக்கோ’ என்று அவரை ‘டார்ச்சர்’ செய்கின்றனர்.

ஆண்டனியின் மகனான லியோ, இருபதாண்டுகளுக்கு முன்னர் போதைப்பொருள் கடத்தலில் பெரும்புள்ளியாகத் திகழ்ந்தவர். அவர் இறந்துவிட்டாரா அல்லது காணாமல்போய் விட்டாரா என்பது மர்மமாகவே இருந்து வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

அந்தக் கும்பலின் தொடர் துரத்தல்களை அடுத்து, ஒருகட்டத்தில் ’பார்த்திபன் ஒரு முன்னாள் குற்றவாளியோ’ என்று சத்யாவே சந்தேகப்படுகிறார். அந்த நேரத்தில், பார்த்திபன் குடும்பத்தினரைக் கூண்டோடு தகர்க்கும் முயற்சியில் ஆண்டனி & ஹெரால்டின் ஆட்கள் இறங்குகின்றனர்.

லியோவுக்கும் அந்த கும்பலுக்குமான மோதலுக்குக் காரணம் என்ன? உண்மையில், பார்த்திபன் தான் லியோவா என்ற கேள்விக்குப் பதில் சொல்கிறது மீதமுள்ள திரைக்கதை.

’பெயர் குழப்பம்’ திரைக்கதையில் பிரதான இடத்தைப் பிடித்தாலும், வாழ்நாளில் திரைப்படமே பார்க்காத ஒருவர் கூட ‘பார்த்திபனும் லியோவும் ஒரே ஆள்தான்’ என்று சொல்லிவிடுவார். அதனால், இந்தக் கதையில் புதிய விஷயமென்று எதுவுமில்லை. ஆனால், அதற்குத் திரையுருவம் தந்த வகையில், சில இடங்களில் நம்மை சுவாரஸ்யப்படுத்துகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்; சில இடங்களில் ‘ப்ச்’ என்று உதட்டைப் பிதுக்க வைத்திருக்கிறார்.

 

leo movie review

’வாவ்’ விஜய்!

வழக்கமாக, விஜய் படங்களில் என்னவெல்லாம் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்களோ அவையனைத்தும் ‘லியோ’வில் உண்டு. ஆனால், அது சற்றே வேறுபட்டு அமைந்திருப்பதுதான் வித்தியாசம்.

நடிப்பைப் பொறுத்தவரை, விஜய்க்கு ஒரு மைல்கல்லாக அமைந்திருக்கிறது ‘லியோ’. கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி தவிர்த்து, மற்ற இடங்களில் எல்லாம் நட்சத்திரமாக அல்லாமல் வெறுமனே ஒரு நடிகராகத் தோன்றியிருப்பது சிறப்பு. அதுவே, அவர் தோன்றும் காட்சிகள் அனைத்தையும் ‘வாவ்’ என்று ஆச்சர்யப்பட வைக்கிறது.

த்ரிஷாவுக்கு இதில் விஜய்யின் மனைவி வேடம். மேத்யூ தாமஸ், இயலுக்குத் தாய் பாத்திரத்தில் பாந்தமாகப் பொருந்தியிருக்கிறார்.

கௌதம் மேனன் படம் முழுக்கத் தோன்றியிருக்கிறார். அவரது மனைவியாக வரும் பிரியா ஆனந்த் நான்கைந்து இடங்களில் தலைகாட்டியிருக்கிறார். ‘கைதி’யில் வந்த ஜார்ஜ் மரியமும் இதில் உண்டு.

பிரதான வில்லன்களாக வரும் சஞ்சய் தத்தும் அர்ஜுனும் திரையில் மிரட்டியிருக்கின்றனர். மன்சூர் அலிகான் இரண்டொரு காட்சிகளில் தோன்றியிருக்கிறார். படத்தில் மடோனா செபாஸ்டியன் இடம்பெறும் காட்சிகள் நன்றாக உள்ளன.

இவர்கள் தவிர்த்து மிஷ்கின், சாண்டி, பாபு ஆண்டனி, மதுசூதன் ராவ், லீலா சாம்சன், டான்ஸ் மாஸ்டர்கள் சாந்தி, தினேஷ், ஜனனி குணசீலன், சச்சின் மணி என்று பலர் இதில் இடம்பிடித்துள்ளனர். ராமகிருஷ்ணன், வையாபுரி, ஜவஹர் ஆகியோர் இரண்டொரு ஷாட்களில் தலைகாட்டியிருக்கின்றனர்.

இவர்களோடு அனுராக் காஷ்யப்பும் இடம்பெற்றிருக்கிறார். ஆனால், அவருக்கு ஏன் அப்படியொரு காட்சி தரப்பட்டது என்பது லோகேஷ் கனகராஜுக்கே வெளிச்சம்.

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு, ஒரு ஹாலிவுட் படத்தைத் தமிழில் பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது. சண்டைக்காட்சிகளில் அவரது உழைப்பு அபாரம்.

பிலோமின் ராஜ் படத்தொகுப்பு கன கச்சிதமாகக் காட்சிகளை அடுக்கியிருக்கிறது. ஆனால், பிளாஷ்பேக் காட்சிகளில் மட்டும் அவரிடம் தடுமாற்றம் தெரிகிறது.

’ஜெயிலர்’ அளவுக்கு இல்லாவிட்டாலும், இருக்கையை விட்டு எழாமல் ‘லியோ’வைப் பார்க்க வைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது அனிருத்தின் பின்னணி இசை. அதேநேரத்தில், வழக்கமாக அவரது பாடல்கள் தரும் உற்சாகம் இதில் கிடைக்கவில்லை.

என்.சதீஷ்குமாரின் கலை வடிவமைப்பு இப்படத்தின் மிகப்பெரிய பலம். விஷுவல் எபெக்ட்ஸ் இடம்பெறாத காட்சிகள் அனைத்தும் ‘ரிச்’சாக தெரிவதில் அவரது குழுவின் உழைப்பு கடுமையாக உழைத்திருக்கிறது.

அனைத்துக்கும் மேலாக, அன்பறிவ் சகோதரர்களின் சண்டைக்காட்சி வடிவமைப்புதான் இப்படத்தின் உயிர்நாடியாக விளங்குகிறது.

எல்லாம் சரி, லோகேஷ் கனகராஜின் திரைக்கதை மாயாஜாலம் எப்படியிருக்கிறது? இதில் ‘எல்சியு’ உள்ளதா? கமர்ஷியல் படம் என்பதைத் தாண்டி, மேற்கத்திய படங்கள் பார்த்த அனுபவத்தை இதில் லோகேஷ் தருகிறாரா? இக்கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்குப் பதிலாகத் தலையைச் சொறிய வேண்டியிருக்கிறது. ஏனென்றால், இதில் ‘கைதி’, ‘விக்ரம்’, ‘மாநகரம்’ தந்த அனுபவம் கொஞ்சம் கூட கிட்டவில்லை. முக்கியமாக, பிளாஷ்பேக் பார்த்தபிறகு மொத்தப்படமும் ’மிகச்சிறியதாக’த் தோன்றுகிறது.

அந்த வகையில், லோகேஷ் கனகராஜ் ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறார். கூடவே, ‘ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்’ எனும் ஹாலிவுட் படத்தைத் தமிழில் தர வேண்டிய அவசியம் என்ன என்று புலம்ப வைத்திருக்கிறார்.

leo movie review

சாக்லேட் காபி காட்சி!

தொண்ணூறுகளில் புகழ் பெற்ற சில பாடல்களை ஆக்‌ஷன் மற்றும் த்ரில் ஊட்டும் காட்சிகளில் பயன்படுத்தும் வழக்கத்தைத் தன் படங்களில் மேற்கொண்டு வருகிறார் லோகேஷ் கனகராஜ். அவ்வாறு ’விக்ரமில்’ இடம்பெற்ற ‘வத்திக்குச்சி வத்திக்குச்சி சட்டுன்னுதான் பத்திக்க்குச்சி’ எனும் அசுரன் படப் பாடல் ரசிகர்களிடையே வைரல் ஆனது.

விஜய் நடத்திவரும் கடைக்கு வந்து சாண்டி சாக்லேட் காபி கேட்பதாக, இதிலும் அதேபாணியில் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது.

அந்தக் காட்சியில் ‘கரு கரு கருப்பாயி..’, ‘தாமரைப் பூவுக்கும்..’ பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவ்விரு பாடல்களையும் இன்றும் ரசிப்பவர்களுக்கு, அக்காட்சியனுபவம் தருவது ‘கூஸ்பம்ஸ் மொமண்ட்’களாக இருக்கும்.

குறிப்பாக, அதில் விஜய்யின் டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் அருமையாக அமைந்திருக்கின்றன. அதற்கு இணையாக, அந்த பின்னணியில் அன்பறிவ் சண்டைக்காட்சியை வடிவமைத்திருப்பது நிச்சயம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும்.

அந்த காட்சி உட்படத் திரைக்கதையின் சில இடங்கள் நம்மைக் குதூகலப்படுத்துகின்றன. அதேநேரத்தில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள அதீத வன்முறை நிறைந்த சண்டைக்காட்சிகளும், எல்சியுவில் இடம்பெற வேண்டுமென்பதற்காக வலிந்து திணிக்கப்பட்ட காட்சிகளின் இருப்பும் நம்மை அயர்வுற வைக்கின்றன.

வித்தியாசமான விஜய் படமொன்றை பார்க்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு ‘லியோ’ சரியான சாய்ஸ். ஆனால், அதில் முழு திருப்தி கிடைக்க வேண்டுமென்று மட்டும் எதிர்பார்க்கக் கூடாது!

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

உதய் பாடகலிங்கம்

ஜடேஜாவிடம் மன்னிப்பு கேட்ட ’ஆட்டநாயகன்’ விராட் கோலி

பங்காரு அடிகளார் உடலுக்கு முதல்வர் அஞ்சலி!

+1
0
+1
1
+1
0
+1
3
+1
1
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *