இயக்குநர் லோகேஷ் கனகராஜ்-விஜய் கூட்டணியில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான, லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜூக்கு உளவியல் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என, மதுரையைச் சேர்ந்த ராஜு முருகன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ”லியோ படத்தில் உள்ள பெரும்பாலான காட்சிகள் வன்முறையை ஆதரிப்பதாக உள்ளது. பெரும்பாலும் ஆயுதக் கலாச்சாரமும், மதம் தொடர்பான சின்னங்களை பயன்படுத்தி முரண்பாடான கருத்துகளும் சொல்லப்பட்டு உள்ளன.
போதைப்பொருள் பயன்பாடு பெண்கள், குழந்தைகளை கொல்ல வேண்டும் என்ற கருத்தை விதித்தல் உள்ளிட்ட காட்சிகளை லோகேஷ் கனகராஜ் காட்சிப்படுத்தி உள்ளார்.
இதுமட்டுமின்றி கலவரம், சட்டவிரோத செயல்கள், போதைப்பொருள் வியாபாரம், துப்பாக்கிகளை பயன்படுத்துதல், காவல்துறை உதவி உடன் எல்லா குற்றங்களையும் செய்ய முடியும் போன்ற சமூக விரோத கருத்துகளை லியோ படத்தில் காட்சிப்படுத்தி உள்ளார்.
இது போன்ற படங்களை தணிக்கைத் துறையினர் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். லியோ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜூக்கு முறையாக உளவியல் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
மேலும் இந்திய குற்றவியல் தண்டனை சட்டப்படி வழக்குப்பதிவு செய்து, லியோ படத்தை ஊடகங்களில் ஒளிபரப்ப முழுமையாக தடை விதிக்க வேண்டும்.
லியோ படம் பார்த்து மன உளைச்சலுக்கு ஆளானதால் படக்குழு ரூபாய் 1000 பணம் வழங்க வேண்டும் ,” என கோரி இருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. லோகேஷ் கனகராஜ் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. இதனால் மனு மீதான வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.