தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் புதிய படத்தை சமீபத்தில் வெளியான ‘கருடன்’ திரைப்படத்தின் இயக்குநர் ஆர்.எஸ் துரை செந்தில்குமார் இயக்குகிறார்.
புதுமையான கதைக் களத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் விறுவிறுப்பான திரைக்கதையோடு உருவாகும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகையான பாயல் ராஜ்புத் நாயகியாக நடிக்கிறார். பல முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கின்றனர்.
இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள லெஜெண்ட் சரவணனின் சொந்த ஊரான பணிக்கநாடார் குடியிருப்பு சுற்று வட்டாரத்தில் நடைபெற்று வருகிறது.
தேனியை மையமாக வைத்து துரை செந்தில்குமார் உருவாக்கிய ‘கருடன்’ பெரும் வெற்றி பெற்ற நிலையில், தற்போது தூத்துக்குடியை மையமாக வைத்து உண்மை சம்பவம் ஒன்றின் அடிப்படையில் பரபரப்பான ஆக்ஷன் திரில்லராக இந்த படம் தயாராகி வருகிறது.
அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டிலும், மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களிலும் நடைபெற உள்ளது. ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.
முன்னதாக லெஜண்ட் சரவணன், லெஜெண்ட் என்ற பெயரிலேயே தனது முதல் படத்தில் நடித்திருந்தார். அந்த படம் பெரியதாக பேசப்படாத நிலையில், நல்ல கதை களம் கொண்ட படத்தில் நடிக்க முடிவெடுத்து, கருடன் பட இயக்குநரை அணுகியதாக தெரிகிறது.
இந்த படம் தனக்கு நல்ல பெயரையும் நல்ல நடிகர் என்ற பெயரையும் பெற்று தருமென்று லெஜெண்ட் சரவணன் நம்புவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
வயநாடு நிலச்சரிவு: ஒரு உடலை எரிக்க 75 ஆயிரம் செலவு… கேரள அரசு கணக்கு!
அடுத்த இரண்டு நாட்களுக்கு… உச்சத்தில் உஷ்ணம் – வானிலை மையம் அலர்ட்!