தமிழ் சினிமாவில் 2022ஆம் ஆண்டு கடந்துபோன நிகழ்வுகளில் ஆச்சர்யத்துக்கு உரியது பிரபல சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அறிமுகமான”லெஜெண்ட்” திரைப்படத்தின் விளம்பரமும், அப்படத்தின் வெளியீடும் ஆகும்.
முன்னணி நடிகர்களே தங்கள் படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்புகளில் பங்கேற்க தயங்குகிறபோது இந்தியா முழுவதும் படத்தின் புரமோஷனுக்காக பத்திரிகையாளர்களை சரவணன் சந்தித்தபோது “40 வயதை கடந்த அவரிடம் இந்த வயதில் நடிக்க வரலாமா ” என்று ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அப்போது, இந்த கேள்வியை ரஜினிகாந்திடம் கேட்பீர்களா என அவர் கேட்டது அதிர்வுகளை ஏற்படுத்தியது.
லெஜெண்ட் திரைப்படத்தின் புரமோஷன் நடைபெற்றபோதும், படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெறாத நிலையில் சமூக வலைதளங்களில் சரவணன் ட்ரோல் செய்யப்பட்டார். படம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானபோது “எல்லோருக்கும் பிடித்த மாதிரி படம் எடுக்க முடியாது, இது எனக்கு முதல் படம்” அடுத்தடுத்த படங்களில் எல்லாம் சரியாகும் என்றார் சரவணன்.
இதையடுத்து “லெஜண்ட்” திரைப்படம் மார்ச் – 3 அன்று ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியானது. ஓடிடியில் படம் வெளியாவதையொட்டி செய்தியாளர்களுக்கு அவர் அனுப்பிய செய்தியில்….
ஆரம்பகாலம் முதல் இன்றுவரை தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில் ஊடக நண்பர்களின் பேராதரவுடன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நான் சென்றுகொண்டிருக்கிறேன்.
இந்த வரிசையில் நான் நடித்த பல விளம்பர படங்களை பாராட்டி என்னை ஊக்குவித்த நீங்கள் முதல்முதலில் நான் தயாரித்து நடித்த லெஜெண்ட் திரைப்படத்தையும் பார்த்து உங்களில் பலர் நேரிலும், தொலைபேசியிலும் வாழ்த்து தெரிவித்தீர்கள்.
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் விமர்சனம் செய்வதும், விமர்சிக்கப்படுவதும் இயல்பு. விமர்சனங்களையும், விமர்சிப்பவர்களையும் கடந்து அடுத்த கட்டத்திற்கு நோக்கி முன்னேறி செல்வது தான் வெற்றி என்று பெரியவர்கள் சொல்வார்கள்
லெஜெண்ட் திரைப்படத்தை பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்ததற்கு நன்றி. உங்கள் விமர்சனங்களும், கருத்துக்களும் எனது அடுத்தக்கட்ட முயற்சிக்கு துணையாக இருந்தன என்பது உண்மை.
லெஜெண்ட் வெளியான பிறகு என்னை நேரில் சந்தித்த பலரும் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்புகொள்வோரும்”லெஜெண்ட்” திரைப்படத்தின் ஓடிடி ரீலீஸ் எப்போது என்று ஆவலுடன் கேட்டு வந்துள்ளார்கள்
அவ்வாறு கேட்டுக்கொண்டிருப்பவர்களுக்காக இதோ ஒரு மகிழ்ச்சியான செய்தி “லெஜெண்ட்” திரைப்படம் ஹாட் ஸ்டார் தளத்தில் இன்று மார்ச் – 3 அன்று மதியம் 12.30 மணி முதல் உலகமெங்கும் தமிழ், தெலுங்கு,மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகிறது எனும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த அறிக்கை வழக்கமான ஒன்று தானே என்று எளிதாக கடந்துபோகலாம் ஆனால் தமிழ் சினிமாவில் சாதித்தவர்கள், சாதிக்க போராடுபவர்கள் எவரும் இப்படி ஒரு அறிக்கை கொடுத்தது இல்லை..
எந்த ஒரு தொழிலிலும் வாடிக்கையாளர் என்பது உயிர் நாடியானது அது சினிமாவிற்கு மிகவும் முக்கியமானது
தமிழ்நாட்டில் இளம் தொழில் அதிபர்களில் முக்கியமானவர் சரவணன் ஒரு திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் அளவு அவர் நடத்தும் கடையின் தினசரி வியாபாரம். இருந்தபோதிலும் படம் வெளியீட்டு நேரத்தில் சமூகவலைதளங்களில் கடுமையான கிண்டல், கேலிக்கு உள்ளாக்கி மீம்ஸ் வெளியானது. அது எதனையும் பொருட்படுத்தாது தன்னம்பிக்கையுடன் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை கவனிப்பிற்கும், அவரை விமர்சித்தவர்களின் விவாதத்திற்கும் உள்ளாகியுள்ளது
ஓடிடியில் முன்னணி நடிகர்கள் படங்களே முதல் இடத்திற்கு வர பல நாட்கள் ஆகும். இந்நிலையில் லெஜெண்ட் வெளியான அன்றே முதல் இடத்திற்கு வந்துள்ளது. இது சாதாரணமான சம்பவமல்ல என்கின்றனர் ஓடிடி வட்டாரத்தில்.
திரையரங்குகளில் லெஜெண்ட் வெளியாகும்போது நாளிதழ்களில் கொடுத்த விளம்பரத்தை போன்றே, ஞாயிற்றுகிழமை முன்னணி நாளிதழ்களின் முதல் பக்கத்தில் லெஜெண்ட் படத்தின்முழு பக்க விளம்பரத்தை சொந்த செலவில் சரவணன் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இராமானுஜம்
ஆட்டோ ஓட்டும் பில்கேட்ஸ்: இணையத்தில் வைரல்!