நடிகர் ரஜினிகாந்த்தின் புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்தினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பல தசாப்தங்களாக பல்வேறு படங்களில் நடித்து என்றும் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். அவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பெயர், புகைப்படங்கள், குரலை அனுமதியின்றி பயன்படுத்தக்கூடாது என ரஜினிகாந்த சார்பில் அவரது வழக்கறிஞர் சுப்பையா இளம்பரிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய சினிமாவில் குறிப்பாகத் தென் இந்திய சினிமாவில் சிறந்த நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். அவர் தன்னுடைய தனித்துவமான நடிப்பின் மூலமாக சூப்பர் ஸ்டார் என்று உலகளவில் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.
ஆனால் சில நிறுவனங்கள் அவரது பெயர், புகைப்படங்கள், குரல் போன்றவற்றை எந்த அனுமதியுமின்றி தவறாகப் பயன்படுத்துகின்றனர். அந்த நிறுவனங்கள் அவர்களது பொருட்களை மக்கள் அதிகளவில் வாங்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்கிறார்கள்.
எனவே ரஜினிகாந்த்தின் பெயர், குரல், புகைப்படங்கள், நட்சத்திர அந்தஸ்து போன்றவற்றை அனுமதியின்றி பயன்படுத்துபவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
மோனிஷா
டான்சர் ரமேஷ் மரணத்தில் மர்மம் : முதல் மனைவி பரபரப்பு புகார்!
டிஜிட்டல் திண்ணை: அலேக் எடப்பாடி… அலர்ட் பன்னீர்: ஈரோடு கிழக்கு பணிக்குழு பின்னணி!