தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் முதல் தமிழ் படத்தில் ஹீரோவாக ஹரிஷ் கல்யான் மற்றும் ஹீரோயினாக பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி சமீபத்தில் தனது தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம் படதயாரிப்புகளில் களமிறங்கியுள்ளார்.
இந்நிறுவனம் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய ஐபிஎல் போட்டிகளை அடிப்படையாகக் கொண்டு பிரபலமான ”’ரோர் ஆப் தி லயன்’ எனும் ஆவணப் படத்தையும், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தையும் தயாரித்துள்ளது.
தோனி தனது முதல் படத்தைத் தமிழில் இயக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார். அதன்படி தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கவுள்ளார்.
இந்த படத்திற்கு தோனியின் மனைவி சாக்ஷி தான் கதை எழுதி உள்ளதாக நேற்று (அக்டோபர் 25) அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இதுகுறித்து ரமேஷ் தமிழ்மணி கூறுகையில் ”சாக்ஷி தோனி எழுதிய கதையின் கருவைப் படித்தபோது அதன் தனித்துவத்தை என்னால் உணரமுடிந்தது.
இந்தக் கதை குடும்பங்களை மகிழ்வூட்டி, சிரிக்கவைத்துச் சிந்திக்கவைக்கும். ஒரு சிறந்த திரைப்படத்தை மக்களுக்குக் கொடுக்கப்போகிறோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்” என்றார்.
ஆனால் அந்த அறிவிப்பில் இப்படத்தில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின் குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், படத்தின் கதாநாயகனாக பிக்பாஸ் பிரபலம் ஹரிஷ் கல்யாண் மற்றும் கதாநாயகியாகப் பிரியங்கா மோகன் ஆகியோர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோனிஷா
பசும்பொன் செல்லாத எடப்பாடி : ஜெயக்குமார் விளக்கம்!
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு: முதல்வர் ஆலோசனை!