புகழ்பெற்ற வில்லிசை பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வில்லுப் பாட்டின் வாயிலாக சுதந்திர போராட்ட காலத்தில் மக்களிடையே ஆன்மிகம், தேச பக்தியை வளர்த்தவர் என்ற பெருமைக்குரியவர் சுப்பு ஆறுமுகம்.
94 வயதான அவர், பல்வேறு இதிகாசங்களையும், விழிப்புணர்வுகளையும் வில்லுப்பாட்டின் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்தவர்.
வயது மூப்பின் காரணமாக சென்னையில் இன்று(அக்டோபர் 10)காலமான வில்லிசை வேந்தர் சுப்புவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், புகழ்பெற்ற வில்லிசை பாட்டு கலைஞர் பத்மஸ்ரீ சுப்பு ஆறுமுகம் அவர்கள் வயது மூப்பின் காரணமாக மறைவுற்றார் என்றறிந்து வேதனை அடைகிறேன்.
இளமைக்காலம் முதலே தமிழ் மண்ணின் மரபார்ந்த கலையான வில்லுப்பாட்டில் தேர்ச்சி பெற்று வில்லிசை வேந்தர் எனப் போற்றும் நிலைக்கு உயர்ந்தவர் சுப்பு ஆறுமுகம் அவர்கள்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், நடிகர் நாகேஷ் ஆகியோரின் திரைப்படங்களிலும் தனது பங்களிப்பை அவர் செய்துள்ளார்.
மூத்த கலைஞரான சுப்பு ஆறுமுகம் அவர்களின் இழப்பால் துயரில் இருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் கலை உலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகரும், மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள இரங்கல் குறிப்பில்,
“வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் கலைவாணர் என்.எஸ்.கே கண்டெடுத்த இசைவாணர். வில்லுப்பாட்டு கலையை வளர்ப்பதிலேயே வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டவர்.
அதில் பல புதுமைகளைப் புகுத்தி வில்லடியை வெகுமக்களுக்கும் கொண்டுசேர்த்தவர். அபாரமான நகைச்சுவை எழுத்தாளரும் கூட. இனிய நண்பரை இழந்து விட்டேன். என் அஞ்சலி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“வில்லுப்பாட்டால் சுதந்திர போராட்ட காலகட்டத்தில் மக்களிடையே ஆன்மீகம், தேசபக்தியை வளர்த்த வில்லிசை வேந்தர் பத்மஸ்ரீ சுப்பு ஆறுமுகம் மறைவு வேதனை அளிக்கிறது. அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழர்களின் பாரம்பரிய கலையான வில்லிசையின் மாபெரும் கலைஞர் பதம்ஶ்ரீ கலைமாமணி சுப்பு ஆறுமுகம் அய்யா அவர்களின் மறைவு மிகுந்த வேதனையை அளிக்கிறது.
அவரது இறப்பு கலை உலகிற்கும் தமிழ் உலகிற்கும் மிகப் பெரிய ஒரு இழப்பு. அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். ஓம் சாந்தி! ” என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கலை.ரா
சட்டத்தை மீறினார்களா நயன் விக்கி தம்பதி ?
வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் காலமானார்!