நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான படம் கோச்சடையான்.
முழுக்க முழுக்க அனிமேஷன் படமாக வெளியான இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை என்பதால் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழல் உருவானது.
கோச்சடையான் படத்தை தயாரிப்பதற்காக ஆட் ப்யூரோ நிறுவனத்திடம் 6.2 கோடி ரூபாயை கடனாக பெற்றிருந்தது மீடியா ஒன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம். அந்த கடன் தொகைக்காக நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் கொடுத்து கையெழுத்திட்டிருந்தார்.
படம் நஷ்டமானதால் கடனாகப் பெற்ற பணத்தை திருப்பி தர முடியாமல் மீடியா ஒன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் உரிமையாளர் முரளி பிரச்சனையில் சிக்கி கொண்டார்.
இதைத்தொடர்ந்து ஆட் ப்யூரோ நிறுவனம் பெங்களூரு முதன்மை நீதிமன்றத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு முரளி மற்றும் லதா ரஜினிகாந்த் மீது மோசடி வழக்கு தொடர்ந்தது.
அதன் பிறகு முரளி, லதா ரஜினிகாந்த் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். காவல்துறையின் குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்யுமாறு கோரிக்கை வைத்து லதா ரஜினிகாந்த் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் “ஆதாரங்கள் முறையாக சமர்ப்பிக்கப்படவில்லை” எனக் கூறி இந்தியத் தண்டனைச் சட்டம் 196,199,420 ஆகிய 3 பிரிவுகளின் அடிப்படையில் ரத்து செய்ய உத்தரவிட்டது.
மேலும் இந்த வழக்கின் விசாரணையை மேற்கொள்ளலாம் என்று பெங்களூரு முதன்மை நீதிமன்றத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இந்த வழக்கை தள்ளுபடி செய்ய கோரி மீண்டும் லதா ரஜினிகாந்த் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இதே சமயம் கர்நாடகா உயர்நீதிமன்றம் ரத்து செய்த மூன்று பிரிவுகளுக்கு எதிராக ஆட் ப்யூரோ நிறுவனமும் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.
இந்த இரண்டு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை நடத்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள்,
“தற்போது லதா ரஜினிகாந்த் எதிரான இந்த மோசடி வழக்கை மீண்டும் விசாரிக்க பெங்களூரு நீதிமன்றத்திற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
இருதரப்பிலும் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை கருத்தில் கொண்டு, மனுதாரர் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர் ஆகிய இருவரும் தேவைப்படும் போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.
பெங்களூரு நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் மனு தாக்கல் செய்து கொள்ளலாம் என்றும் மத்தியஸ்தர்கள் மூலம் இந்த பிரச்சனையை தீர்க்க இரு தரப்பினருக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது” என்றும் உத்தரவிட்டனர்.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னை, புறநகர் பகுதிகளில் மிக மோசமான 324 சாலைகள்!
Comments are closed.