மலையாள சினிமாவில் நடந்த பாலியல் வன்கொடுமைகள் குறித்து மோகன்லால், சுரேஷ் கோபி ஆகியோர் வாய் திறக்க மறுப்பது அவர்கள் பக்கம் தவறு இருப்பதையே காட்டுவதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து ஹேமா கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கை, பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நடிகை கஸ்தூரி கூறுகையில், நடிகர் சுரேஷ் கோபி மத்திய அமைச்சராக உள்ளவர். சினிமாத்துறையில் இருந்து அமைச்சரான அவரே, பாலியல் சம்பவங்கள் குறித்து வாய் திறக்காதது அவருக்கும் பங்கு இருப்பதைதானே காட்டுகிறது. குற்றம் செய்யாதவர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். மாறாக ஓடுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், நடிகர் மோகன்லால் பல ஹீரோயின்களுடன் நடித்தவர். அவரின் படங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்கவில்லையா? சக ஹீரோயின்களுக்கு அவர் ஆதரவாக இருந்தாரா? இதற்கெல்லாம் விளக்கம் அளிக்காமல் நடிகர் சங்கத்தை கை விட்டு ஓடுவது சரியானதுதானா? என்றும் நடிகை கஸ்தூரி கேட்டுள்ளார்.
ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கை எனக்கு முழுவதும் நம்பிக்கையை அளிக்கவில்லை. எனினும், பெண் கலைஞர்களின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் கொடுக்கும் வகையில், வைட்டமின் போல அமைந்துள்ளது என்பதை மறுக்க முடியாது என்றும் கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
அதோடு, நான் நடித்த கடைசி மலையாள படத்தின் போது, மிக மோசமான அனுபவம் எனக்கு ஏற்பட்டது. அதற்கு பிறகு, மலையாள சினிமா பக்கம் நான் போகவே இல்லை என்றும் கஸ்தூரி தெரிவித்துள்ளார்.நடிகை கஸ்தூரி கடைசியாக கடந்த 2013 ஆம் ஆண்டு ஜிப்சி என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, இன்று கஸ்தூரி அளித்துள்ள பேட்டியில், பாலியல் வன்கொடுமை குறித்து நடிகை ராதிகா போன்ற சீனியர் ஆர்டிஸ்ட்டின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்