“படம் பிடிக்கலனா வெளியே சொல்லாதீங்க” : சர்ச்சையாகும் எம்.எஸ்.பாஸ்கர் பேச்சு!
லாந்தர் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் 100, 120 எல்லாம் ஒரு பணமே இல்லை என்று பேசியது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
ஷாஜி சலீம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘லாந்தர்’ திரைப்படத்தில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஞான சௌந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம்.எஸ்.பிரவீன் இசையமைத்திருக்கிறார்.
திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு நேற்று சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது.
விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் ரவிக்குமார், ஏஆர்கே சரவணன், கார்த்திகேயன், கனல் கண்ணன், தயாரிப்பாளர் – நடிகர் பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
படத்தின் இசையை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவரான பூச்சி முருகன் வெளியிட, சிறப்பு விருந்தினர்களும், படக் குழுவினரும் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய எம்.எஸ்.பாஸ்கர், “பொதுமக்களுக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். படம் உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களிடம் படத்தை பற்றி நல்லவிதமாக சொல்லுங்கள். பிடிக்கவில்லை என்றால் அதை பற்றி யாரிடமும் சொல்லாதீர்கள்.
படம் பார்க்க வருபவர்களிடம், செல்பவர்களிடம் நீங்கள் பார்த்த அந்தப்படம் நல்லா இல்லை, மொக்கை, ரம்பம் என்றெல்லாம் சொல்லாதீர்கள்.
ஒரு திரைப்படத்தை எடுப்பதற்கு நூற்றுக்கணக்கான பேர் தேவைப்படுகிறார்கள். படத்தில் விபத்து, உயிரிழப்பு என அனைத்தையும் கடந்து எடுக்கும் படத்தை செல்போனை கையில் வைத்திருக்கிறோம் என்பதற்காக படம் மொக்கை, இந்தப் படத்துக்கு தயவு செய்து வந்து விடாதீர்கள் என பதிவிடுவதை தவிருங்கள் உங்களுக்கு புடிக்கவில்லை என்றால் பேசாமல் இருங்கள். எல்லோரும் பார்க்கட்டும்.
ஒரு படத்தை பார்க்க செலவழிக்கும் 120, 200 ரூபாயில் மாட மாளிகைகள், கோபுரங்கள் கட்டிவிடப்போவதில்லை.
ஆனால், நல்லா இருக்கும் படத்துக்கும் சரி, நல்லா இல்லாத படத்துக்கும் சரி நிறைய பேர் வந்து பார்த்து வாய்ப்பளித்தால், பல குடும்பங்கள் வாழும் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.
எம்.எஸ் பாஸ்கர் பேசிய இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
ஒழுக்கமாக, நல்ல கதையம்சம் உள்ள படமாக எடுக்காமல் மொக்கை படமாக தயாரித்தால் வேறு எப்படி கூற முடியும்.
பாஸ்கருக்கு 100, 120 என்பது பணமாக தெரியவில்லையா?. கிராமப்புறங்களில் விவசாய வேலை செய்பவர்களுக்கான ஒரு நாள் சம்பளத்தில் பாதி 120 ரூபாய்.
பணம் கொடுத்து படம் பார்க்கும் ரசிகன் படத்தை விமர்சிக்க கூடாது என்று இவர் எப்படி கூறலாம் என பல்வேறு வகையில் சமூக வலைதளங்களில் எம்.எஸ்.பாஸ்கர் பேச்சு விமர்சிக்கப்பட்டு வருகிறது.
-இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மாதிரி பள்ளி பணியாளர்களின் ஊதியம் உயர்வு!
கிச்சன் கீர்த்தனா: குடமிளகாய் – முந்திரி ரைஸ்!
டாப் 10 செய்திகள் : இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் முதல் சபரிமலை நடைதிறப்பு வரை!
பியூட்டி டிப்ஸ்: முடி இல்லாத பிரச்சினைக்கு என்னதான் முடிவு?