லால் சிங் சத்தா – கதை என்ன?

சினிமா

இந்தி திரையுலகில் நீண்ட காத்திருப்பிற்கு பின் இன்று (ஆகஸ்ட் 11) ஆமீர்கான் நடித்துள்ள  லால் சிங் சத்தா திரைப்படம் வெளியாகிறது.

இந்த படத்திற்கு ஆதரவும் – எதிர்ப்பும் வட இந்தியாவில் சமமாகவே உள்ளது. தென்னிந்தியாவை பொறுத்தவரை இந்தப்படம் சம்பந்தமான எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லை. நாகசைதன்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் தெலுங்கு சினிமா ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருக்ககூடும்.

ஹாலிவுட்டில் 1994-ல் வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றியுடன் பார்வையாளர்களை நெகிழவைத்த  ‘ஃபாரஸ்ட் கம்ப்’. படத்தின் உரிமையை சட்டபூர்வமாக வாங்கி  28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியில் ‘லால் சிங் சத்தா’ என்கிற தலைப்பில் மறுஆக்கம் செய்து நாயகனாகவும் நடித்திருக்கிறார் அமீர்கான். 

ஃபாரஸ்ட் கம்ப் கதை என்ன? 

alt="Lal Singh Chadha"

ஒரு பறவையின் வெண்சிறகொன்று காற்றில் மெள்ள மிதந்து வந்து ஃபாரஸ்ட் கம்ப்பின் காலடியில் விழுகிறது. அதை எடுக்கும் அவன் தன்னுடைய பெட்டியில் வைத்துக் கொள்கிறான். அங்கே பேருந்துக்காக காத்திருப்பவர்களிடம் பேச்சு கொடுக்கும் ஃபாரஸ்ட் கம்ப் தனது கதையைச் சொல்லத் தொடங்குகிறான்.

முதுகு தண்டுவடத்தில் இருக்கும் பிரச்சினையால் நடக்கும் திறனை இழக்கும் சிறுவனான ஃபாரஸ்ட் கம்ப்புக்கு இருக்கும் ஒரே உறுதுணை அவனது தாய் மட்டுமே. லெக் பிரேசஸ் எனப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக் காலணியின் உதவியைக் கொண்டு அவனால் நடக்க முடியும். மகன் எந்தவிதத்திலும் மற்றவர்களுக்குக் குறைந்தவன் இல்லை என்பதை தொடர்ந்து கம்ப்புக்கு அவனது தாய் சொல்லிக் கொண்டே இருக்கிறார் .

ஃபாரஸ்ட் கம்ப்பை பள்ளியில் சேர்ப்பதற்காகச் செல்லும் அவனது அம்மாவிடம் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர், கம்ப்பின் ஐ.க்யூ அளவு சராசரிக்கும் கீழே இருப்பதாக கூறி, அவனை பள்ளியில் சேர்த்துக் கொள்ள மறுக்கிறார். அவரிடம் தன்னை இழப்பதன் மூலம் கம்ப்பை பள்ளியில் சேர்க்கிறார் அவனது தாய்.

முதல் நாள் பள்ளிக்குச் செல்கிறான் ஃபாரஸ் கம்ப். பள்ளிப் பேருந்தில் சக மாணவர்கள் அவனுக்கு அமர இடம் தரத் தயங்குகின்றனர். அப்போதுதான் அந்தக் குரல் அவனது காதில் விழுகிறது. 

அதுதான் ஜென்னியின் குரல். அவனுக்கு தனது இருக்கையின் பாதியைத் தருகிறாள் ஜென்னி. தனது தாயைத் தவிர யாரிடமும் பேசியிருக்காத கம்ப், பள்ளிக்குச் செல்லும் வரை அவளிடம் உரையாடிக் கொண்டே செல்கிறான். இருவரும் இணை பிரியா நண்பர்களாகின்றனர்.

ஒருநாள் கம்ப்பை விரும்பாத சிறுவர்கள் சிலர் அவனைத் தாக்குகின்றனர். அங்கிருந்து தத்தி தடுமாறித் தப்பிக்கும் கம்ப்பை வேகமாக ஓடச் சொல்லி ஊக்கமளிக்கிறாள் ஜென்னி.

 “ரன் ஃபாரஸ்ட் ரன்…” என்ற அந்த மந்திர வாக்கியம், அவனது கால்களில் இருந்த லெக் பிரேசஸை சுக்குநூறாக உடைக்கிறது. மின்னல் வேகத்தில் ஓடி அந்தச் சிறுவர்களிடமிருந்து தப்பிக்கிறான் ஃபாரஸ்ட் கம்ப்.

பெரியவனாகிறான் கம்ப்அதே இடம் சைக்கிளில் துரத்திக் கொண்டிருந்த சிறுவர்கள் இப்போது இளைஞர்களாகி காரில் அவனைத் துரத்துகிறார்கள். அதே மின்னல் வேகத்தில் தப்பிக்கும் கம்ப் ஒரு ஃபுட்பால் ஸ்டேடியத்தில் நுழைந்து மைதானத்துக்குள் புகுந்து ஓடுகிறான். 

அவனது வேகமான ஓட்டத்தால் அவனுக்கு அலபாமா பல்கலைக்கழகத்தின் ஸ்கார்லர்ஷிப் கிடைக்கிறது. அமெரிக்க ஃபுட்பால் டீமிலும் இடம்பிடித்து விடும் ஃபாரஸ்ட் கம்ப் அப்போதைய அதிபர் ஜான் கென்னடியைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுகிறான். அவனுக்குத் தெரிந்ததெல்லாம் ஓடுவது ஒன்று மட்டுமே.

கல்லூரிப் படிப்பை முடிக்கும் கம்ப்புக்கு ராணுவத்தில் சேரும் வாய்ப்பு கிடைக்கிறது. அங்கே அவனுக்கு புப்பா என்ற இளைஞன் நண்பனாகிறான். தலைமுறை தலைமுறையாக இறால் வியாபாரம் செய்து வரும் குடும்பத்திலிருந்து வந்த அவனுக்கும் படகு ஒன்றை வாங்கி இறால் பிடிப்பதே இலக்காக இருக்கிறது.

 1967ஆம் ஆண்டு அமெரிக்கா – வியட்நாம் போர் உச்சத்தில இருக்கிறது. கம்ப்பும் புப்பாவும் வியட்நாமுக்கு அனுப்பப்படுகின்றனர். அங்கே டேன் என்பவரின் தலைமையிலான படையில் இருவரும் இணைந்து வியட்நாமிற்கு எதிரான போரில் பங்கெடுக்கிறார்கள். 

வியட்நாம் ராணுவத்தின் கொடூரத் தாக்குதலில் புப்பா இறந்து போகிறான். டேன் தனது இரு கால்களையும் இழக்கிறார். பாரம்பரியமிக்க போர் வீரர்களின் குடும்பத்திலிருந்து வந்திருந்த டேன் தானும் தன் முன்னோர்களைப் போலவே போர்க்களத்தில் இறந்திருக்க வேண்டும் என தன்னைக் காப்பாற்றியதற்காக ஃபாரஸ்ட் கம்ப் மீது கோபம் கொள்கிறார். 

பல போர் வீரர்களின் உயிரைக் காப்பாற்றியதற்காக அதிபரால் கௌரவிக்கப்படுகிறான் கம்ப். அந்தப் போருக்கு எதிராக நடக்கும் ஒரு பேரணியில் கலந்து கொள்ளும் ஃபாரஸ்ட் கம்ப், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜென்னியைச் சந்திக்கிறான். 

தற்போது ஹிப்பியாக மாறிவிட்ட ஜென்னி, அன்று இரவு முழுவதும் அவனோடு நகரைச் சுற்றுகிறாள். விடிந்ததும் மீண்டும் கம்ப்பின் வாழ்விலிருந்து மீண்டும் மறைகிறாள்.

மிகப்பெரிய டேபிள் டென்னிஸ் வீரனாகிறான் கம்ப். சீனாவுக்கு எதிரான டேபிள் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெறுகிறான். நியூயார்க்கில் கால்களை இழந்து தற்போது ஆதரவற்று இருக்கும் டேனைச் சந்திக்கும் கம்ப் தனது விடுமுறையை டேனுடன் கழிக்கிறான். 

கம்ப் யதேச்சையாக செய்யும் ஒரு போன் காலால் அப்போதைய அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் டிக்ஸான் தனது பதவியை இழக்கிறார்.

alt="Lal Singh Chadha"

ராணுவத்திலிருந்து விடுவிக்கப்படும் கம்ப் மீண்டும் தனது சொந்த ஊருக்குச் செல்கிறான். ஒரு மீன்பிடிப் படகை வாங்கி அதற்கு ஜென்னியின் பெயரைச் சூட்டுகிறான். டேனுடன் இணைந்து இறால் வியாபாரத்தில் பெரும் பணக்காரனாகிறான் கம்ப். இறால் வியாபாரத்தில் கிடைத்த மொத்த பணத்தையும் புப்பாவின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கிறான். இதற்கிடையே கம்ப்பின் அம்மா புற்றுநோயால் இறந்து போகிறார்.

1976-ஆம் ஆண்டு கடும் போதைப் பழக்கத்திலிருந்தும், தொடர் பாலியல் தொல்லைகளிலிருந்தும் மீளும் ஜென்னி கம்ப்பைப் பார்க்க வருகிறாள். அவளிடம் தன் காதலைச் சொல்லி தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு கூறுகிறான் கம்ப். மறுக்கும் அவள் அன்றைய இரவை அவனோடு கழிக்கிறாள்.

மீண்டும் காலையில் மாயமாகிறாள் ஜென்னி. விரக்தியின் உச்சிக்குச் செல்லும் கம்ப், எழுந்து ஓடத் தொடங்குகிறான். ஓடுகிறான், ஓடுகிறான் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஓடிக்கொண்டே இருக்கிறான்.  நாடு முழுவதும் பிரபலமடைகிறான் கம்ப். இறுதியில் வீடு திரும்பும் அவனுக்கு ஜென்னி எழுதிய கடிதம் ஒன்று வந்து சேர்கிறது.

ஜென்னியைத் தேடிச் செல்கிறான் கம்ப். ஒரு கொடிய வைரஸால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் அவள் தனது மகனை அறிமுகம் செய்கிறாள். 

அது கம்ப்பின் மகன் தான் எனவும் கூறுகிறாள். அவர்களை அழைத்துக் கொண்டு மீண்டும் தனது வீட்டுக்கு வரும் கம்ப், ஜென்னியைத் திருமணம் செய்து கொள்கிறான். 

ஒரு வருடம் கழித்து நோயின் வீரியத்தால் ஜென்னி இறந்துபோகிறாள். அதன்பிறகு தன் மகனை வளர்க்கும் பொறுப்பை எடுத்துக் கொள்கிறான் கம்ப். 

தனது மகனை முதல் நாள் பள்ளிக்கு அனுப்பும் கம்ப்பின் காலடியில் கிடக்கும் வெண்சிறகொன்று மீண்டும் காற்றில் மிதந்து சென்று மறைகிறது.

alt="Lal Singh Chadha"

விருதுகளை குவித்த படம்

1994 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் 1986-ஆம் ஆண்டு வின்ஸ்டன் க்ரூம் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இயக்கியவர் ராபர்ட் ஜெமிக்கிஸ். இவர் இதற்கு முன்பே ‘Back to the future’ உள்ளிட்ட பல படங்களை இயக்கி பிரபலம் அடைந்திருந்தாலும் ‘ஃபாரஸ்ட் கம்ப்’ இவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்று உலகமெங்கும் பிரபலம் அடையச் செய்தது.

உலகம் முழுவதும் 677 மில்லியன் டாலர்களை ஈட்டியதுடன் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் உள்ளிட்ட 6 ஆஸ்கர் விருதுகளைக் குவித்தது. இது தவிர கோல்டன் குளோப் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றது.

படம் முழுவதும் ஃபாரஸ்ட் கம்ப்பாக வாழ்ந்து ஒட்டுமொத்தப் படத்தையும் தன் தோள்மேல் சுமந்திருப்பார் டாம் ஹேங்க்ஸ். மறைந்த அமெரிக்க அதிபர்கள் ஜான் கென்னடி, லிண்டன் பி. ஜான்சன் உள்ளிட்டோரை அப்போதே கிராபிக்ஸ் மூலம் திரையில் கொண்டு வந்து உலகை வியக்க வைத்தார் இயக்குநர் ராபர்ட் ஜெமிக்கிஸ்.

இந்தப் படத்தை பார்க்கும் நம்மை ஃபார்ஸ்ட் கம்ப் சிரிக்க வைப்பான், அழவைப்பான், நெகிழ வைப்பான், அவனது வலிகளை நம்மையும் உணரவைப்பான். படம் முடிந்தாலும் சில நாட்களுக்கு நம் மனதை விட்டு அகலாமல் நிற்கும் உணர்ச்சிகளின் குவியல் இந்த ‘ஃபார்ஸ்ட் கம்ப்’.

இராமானுஜம்

ட்ரெண்டான ஹேஷ்டேக் : ‘என் படத்தை புறக்கணிக்காதீர்கள்’ – அமீர்கான்

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *