லால் சிங் சத்தா என்ற ஆமீர் கான் நடித்த இந்தி படம் தமிழிலும் வெளியிடப்படுகிறது. வரும் ஆகஸ்டு 11 ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.
இந்த படத்துக்கான செய்தியாளர் சந்திப்பு இன்று (ஆகஸ்டு 7) சென்னையில் நடந்தது. இதற்கான ஆமீர் கான் சென்னை வந்திருந்தார். இன்று அதிகாலை முதலே கலைஞர் நினைவு தின நிகழ்ச்சிகளில் பிசியாக இருந்தாலும் இந்த விழாவில் உற்சாகமாக கலந்துகொண்டார் உதயநிதி.,
விழாவில் பேசிய உதயநிதி, “ஆமீர் கான் அவர்களே… ஆமீர் கானின் குழுவினரே… சென்னைக்கு உங்களை வருக வருக என வரவேற்கிறேன். ரங்கீலாவில் இருந்தே நான் உங்கள் பெரிய ரசிகன். உங்கள் படத்தைப் பார்ப்பதற்காக பள்ளிக்கு மட்டம் போட்டிருக்கிறேன். ஆமீர் கான் நடித்த படத்தை நான் வெளியிடுவேன், அவருடன் பணிபுரிவேன் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
ரெட் ஜெயின்ட்ல இரண்டு வாரத்துக்கு ஒரு படம் வந்துகொண்டிருக்கிறது. நானும் நிறைய படங்களை அவாய்ட் பண்ணிட்டு வர்றேன். நிறைய படங்கள நம்மளே பண்ணிக்கிட்டிருக்க வேணாம்னு இருந்தேன். அந்த சூழல்லதான் ஆமீர் கான் படத்தை வெளியிடணும்னு என்கிட்ட சிலர் சொன்னாங்க. இந்திய விட்டு வைப்போம், தமிழ் படத்தை மட்டும் பண்ணுவோம்னு சொல்லிட்டேன்.
அப்புறம் ஒரு நாள் ஆமீர்கான் சாரே லயன்ல வந்தார். சாதாரண கால் இல்ல, வீடியோ காலில் வந்தார். உதய் இந்த படத்தை நீங்க வெளியிட வேண்டும்னு கேட்டுக்கிட்டாரு. உடனே நான் ஒ.கே.னு சொல்லிட்டேன். அதன் பின் படத்தைப் பார்க்க ஏற்பாடு பண்ணினார். நீங்க ட்ரைலர்ல பார்த்ததை விட பயங்கரமா இருக்கு படம். இந்திய சினிமாவுல மட்டுமல்ல, உலக சினிமாவுக்கே புதுசா இருக்கும்.
பேன் இந்தியா படம்னு இப்ப நாம் பேசிக்கிட்டிருக்கோம். ஆனால் 25,30 ஆண்டுகளாக ஆமீர் கான் சார் பேன் இந்தியா ஸ்டாரா இருக்காரு. உங்களுடன் பணி செய்வது எனக்குப் பெருமை. ரெட் ஜெயின்ட் இந்தப் படத்தை மிகப் பெரிய அளவில் ரிலீஸ் செய்யும் என்று நான் உத்தரவாதம் கொடுக்கிறேன். தமிழில் இப்படம் பெரிய வெற்றி பெறும்” என்று பேசினார் உதயநிதி.
மேலும் செய்தியாளர்கள், ‘இந்தி படத்தை வெளியிடுகிறீர்களே என்று கேட்டபோது, ‘நாங்கள் இந்தித் திணிப்புக்குதான் எதிரி, இந்திக்கு அல்ல” என்றார் உதயநிதி.
–வேந்தன்
திருச்சிற்றம்பலம்: தனுஷ் கேரக்டர் என்ன?