பிப்ரவரி 2 அன்று ‘சிக்லெட்’, ‘மறக்குமா நெஞ்சம்’, ‘டெவில்’, ‘வடக்குப்பட்டி ராமசாமி’ ஆகிய நான்கு படங்கள் வெளியானது.
செக்ஸ் திரைக்கதை என்பதால் ‘சிக்லெட்’ படத்தை பிரபலமான, வசூல் முக்கியத்துவம் உள்ள திரையரங்குகள் திரையிடாமல் தவிர்த்து விட்டனர். Lal Salaam Lover Box Office
கிடைத்த குறைவான திரையரங்குகளுக்கும் படம் பார்க்க பார்வையாளர்கள் வருகை குறைவாக இருந்ததால், முதல் நாளே படம் இன்று கடைசி என போஸ்டர் ஒட்டியது திரையரங்குகள்.
மிஷ்கின் இசையமைப்பில் உருவான ‘டெவில்’ மல்டி பிளக்ஸ், நகர்ப்புறங்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் வரவேற்பை பெற்றாலும் வசூல் குறைவாகவே இருந்தது.
‘மறக்குமா நெஞ்சம்’ இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதுடன், மந்தமான வசூலை கடந்து வெற்றி பெற முடியவில்லை.
நடிகர் சந்தானம் என்கிற நட்சத்திர அந்தஸ்துடன், படம் வெளியாகும் முன்பே அரசியல் அரங்கில் விவாதத்தை ஏற்படுத்திய ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படம் மட்டும் வசூலில் முன்னணியில் இருந்தது. படக்குழு முதல்வார முடிவில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்கள்.
அதில் நடிகர் சந்தானம் பேசும்போது,“இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் போலவே அனைவரது கதாபாத்திரமும் மக்களுக்குப் பிடித்திருந்ததுதான் இந்தப் படத்தின் வெற்றி என்று நினைக்கிறேன்.
நாத்திகரோ, ஆன்மீகவாதியோ நீங்கள் எப்படி இருந்தாலும் அந்தக் கண்ணோட்டத்தில் படம் பார்க்கலாம். அப்படித்தான் இது அமைந்திருக்கிறது. பொதுவான ஒரு முடிவைத்தான் இயக்குநர் கொடுத்திருக்கிறார்.
நான் ஆன்மீகவாதிதான். சோஷியல் காமெடி செய்வது கடினம். அதை இயக்குநர் அழகாக செய்திருக்கிறார். மக்களின் வாழ்வு இப்போது இறுக்கமாக இருக்கிறது.
என்னையும், என்னைச்சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பேன். அதைப் பார்த்துதான் எனக்கு பல பட வாய்ப்புகளும் வந்தது. சிம்புவும் என்னை கூப்பிட்டார்.
இந்த இயல்பை எனக்குக் கடவுள் கொடுத்திருக்கிறார். என் படங்களுக்கு வந்தால் நீங்கள் சந்தோஷமாகப் போகலாம். படத்திற்கான முதலீடு வசூல் மூலம் தயாரிப்பாளருக்கு கிடைத்துவிட்டது.
படம் பற்றிய செய்தியையும், விமர்சனத்தையும் மக்களிடம் ஊடகங்கள் விரைவாக சென்றடையும் வகையில் செயல்பட்டதே ‘வடக்குப்பட்டி ராமசாமி’ வணிகரீதியாக வெற்றியடைய காரணம்”, என கூறினார்.
இரண்டாவது வாரமும் ‘வடக்குபட்டி ராமசாமி’ கணிசமான திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த சூழலில் சமூக வலைதளங்களில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த விஷ்ணு விஷால், விக்ராந்த், தம்பி ராமைய்யா, ஜீவிதா நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான ‘லால் சலாம்’, ‘குட்நைட்’ மணிகண்டன் நடிப்பில் வெளியான ‘லவ்வர்’ ஆகிய இரு படங்களுடன் ‘இமெயில்’ படமும் வெளியானது.
‘லால் சலாம்’ படத்தில் ரஜினிகாந்த் கெளரவ தோற்றத்தில் முஸ்லிம் கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால் உலகம் முழுவதும் படம் வெளியான பிப்ரவரி 9 அன்றைய முதல் நாள் வசூல் அந்தப் படத்தின் பட்ஜெட்டிற்கு உரிய வகையில் இருந்தது.
ரஜினிகாந்த் படமாக அவரது ரசிகர்களால் கட் அவுட், பேனர், கொடி என அமர்க்களமாக கொண்டாடப்பட்டாலும் ரஜினிகாந்த் படத்திற்கு உரிய வசூல் உலகம் முழுவதும் இல்லை.
படத்தின் இயக்குநர் தன் மகள் ஐஸ்வர்யா என்பதால், படத்தை புரமோஷன் செய்யும் வகையில் ரஜினிகாந்த் தனது எக்ஸ் (X) பக்கத்தில் வாழ்த்து செய்தியை வெளியிட்டார்.
விமான நிலையத்தில் ‘லால் சலாம்’ படம் நன்றாக இருப்பதாக விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. படம் வெற்றி பெறும் என பத்திரிகையாளர்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
படத்தை புரமோஷன் செய்ய தயாரிப்பு நிறுவனம் கோடிக்கணக்கில் செலவு செய்த போதும், படம் வெளியான இரண்டாவது நாள் வசூலில் பின்தங்கியது. Lal Salaam Lover Box Office
‘லால்சலாம்’ படத்துடன் கதையை நம்பி திரையரங்குகளில் வெளியான லவ்வர் படம் முதல் நாள் ரஜினிகாந்த் அலையில் தடுமாறினாலும் இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் முதல் இடத்திற்கு வந்துள்ளது.
இதன் மூலம் நட்சத்திர, பிரமாண்ட விளம்பரங்களுக்கு மத்தியில் கதை வெற்றிவாகை சூடும் என்பதை தனது பாக்ஸ் ஆபீஸ் வசூல் மூலம் நிரூபித்து, கம்பீரமாக தொடர்ந்து கல்லா கட்ட தொடங்கியுள்ளது ‘லவ்வர்’.
அரசியல் கிரைம் த்ரில்லராக தயாரிக்கப்பட்டு வெளியான ‘இமெயில்’ பெண்களின் கவர்ச்சியை, ஆடை குறைப்பை நம்பியவர்கள் திரைக்கதையில் தெளிவில்லாமல், தடுமாறியதால் திரையரங்க வசூலில் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
கடந்த மூன்று நாட்களில் ‘லால்சலாம்’ 9.60 கோடி ரூபாயும், ‘லவ்வர்’ படம் 3.60 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் மொத்தமாக வசூல் செய்துள்ளன.
–ராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தேங்கி நிற்கும் தங்கம் விலை… வேகம் காட்டும் வெள்ளி விலை!
அரசின் உரையை புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவி