இது யாருக்கான ’வணக்கம்’? – லால் சலாம் விமர்சனம்!

சினிமா

ரசிகர்களுக்குப் பிடித்துப்போன விஷயங்களைப் பற்றி திரைப்படங்கள் எடுத்தால், அவை பெரிய வரவேற்பைப் பெறும். இதனை முன்வைத்தே, ‘ட்ரெண்ட்’ என்கிற வஸ்து திரையுலகில் கோலோச்சி வருகிறது.

அந்த வகையில் கிரிக்கெட், சூப்பர்ஸ்டார் ரஜினி, மதவாதம் என வேறுபட்ட அம்சங்களைத் திரையில் காட்டுகிறதோ என்ற எதிர்பார்ப்பை உண்டு பண்ணியது ‘லால் சலாம்’ ட்ரெய்லர். தற்போது படம் தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், தம்பி ராமையா, நிரோஷா, ஜீவிதா, செந்தில், விவேக் பிரசன்னா உட்படப் பலர் நடித்துள்ளனர்.

அதையெல்லாம் மீறி, ரஜினிகாந்த் இதில் கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார் என்பதே இதன் யுஎஸ்பி. அது திரையில் சரியாக ‘வொர்க் அவுட்’ ஆகியிருக்கிறதா? என்பதை இங்கே பார்க்கலாம்.

Lal Salaam Twitter Review

தடம் புரட்டும் சம்பவம்

ஒரு ஊரே கிரிக்கெட் போட்டியால் இரண்டுபடுகிறது. மதங்களின் பெயரால் பிளவுபடுகிறது. அதுவரை சகோதர பாசத்தோடு பழகியவர்கள் ஒருவரையொருவர் தாக்குகின்றனர்.

அதற்கெல்லாம் காரணகர்த்தா என்று ஒரு நபர் கைகாட்டப்படுகிறார். அவரது பெயர் திருநாவுக்கரசு (விஷ்ணு விஷால்).

கடலூர் வட்டாரத்திலுள்ள மூரார்பாத் ஊரைச் சேர்ந்தவர் திரு. அவரது தந்தை (லிவிங்ஸ்டன்) இறந்துபோக, தாய் (ஜீவிதா) மற்றும் தங்கையுடன் வசித்து வருகிறார். திருவின் தந்தையும் மொய்தீனும் (ரஜினிகாந்த்) நெருங்கிய நண்பர்கள்.

சிறு வயதில் மொய்தீன் மகன் ஷம்சுதீன் (விக்ராந்த்) உடன் சேர்த்துத் தன்னை வெளியூரில் உள்ள பள்ளியொன்றில் படிக்க வைத்தது, திருவின் மனதில் அவருக்குள் காயத்தை ஏற்படுத்துகிறது.

வளர வளர அது மொய்தீன் குடும்பத்தின் மீதான வெறுப்பாக மாறுகிறது. திருவின் குடும்பத்திற்கு மொய்தீன் பண உதவி செய்வது, ஊரில் சிலர் கேலி பேசவும் காரணமாகிறது.

மூரார்பாத்தில் 3 ஸ்டார், எம்சிசி என்று இரண்டு கிரிக்கெட் அணிகள் உண்டு. இரண்டுமே மதங்களின் பெயரால் பிளவுபட்டுக் கிடக்கின்றன.

எம்சிசியின் கேப்டனான திரு, அந்த வட்டாரத்திலேயே பெரிய கிரிக்கெட் ஆட்டக்காரராக இருக்கிறார். அவரைத் தோற்கடிக்க, பம்பாயில் இருந்து மொய்தீன் மகன் சம்சுதீனை வரவழைக்கிறது 3 ஸ்டார் குழு.

ஒரு ஆட்டத்தில் 3 ஸ்டார் அணி தோற்கிறது. அதனால், சந்தனக்கூடு திருவிழாவையொட்டி இன்னொரு ஆட்டம் ஆட வேண்டுமென்று வற்புறுத்துகிறார் சம்சுதீன்.

அந்த நேரத்தில், அவர் ரஞ்சி டிராபி போட்டிக்குத் தேர்வு செய்யப்படுவது மொய்தீன் குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

 

ஆனால், 3 ஸ்டார் மற்றும் எம்சிசி இடையிலான கிரிக்கெட் ஆட்டத்தில் ஏற்படும் தகராறு ஊரையே இரண்டாக்குகிறது. மோதலின்போது, சம்சுதீன் கையில் காயம் ஏற்படுத்துகிறார் திரு.

உள்ளூர் மருத்துவமனையில் அதற்குச் சிகிச்சை அளிக்க முடியாத நிலையில், அவரை வெளியூருக்குக் கூட்டிச் செல்கின்றனர். அங்கு, ‘கால தாமதம் ஆனதால் கையை வெட்டி எடுக்க வேண்டும்’ என்று மருத்துவர்கள் கூறிவிடுகின்றனர்.

கையை இழந்த வேதனை சம்சுதீனை அலைக்கழிக்கிறது. அந்த வழக்கில் கைதாகிச் சிறை செல்கிறார் திரு. பெயில் கிடைத்து வெளியே வரும் அவரை ஒரு கும்பல் தாக்குகிறது.

தாயோ, உறவினர்களோ, ஊர் மக்களோ அவரை ஏற்கத் தயாராக இல்லை. அவரால்தான் ஊருக்குள் பிரிவு வந்ததாகத் தூற்றுகின்றனர் மக்கள்.

அதேநேரத்தில், திருவை எதிரியாகக் கருதும் எம்.எல்.ஏ. மருமகன் மகராஜன் (விவேக் பிரசன்னா) ஊர் மக்கள் அம்மன் கோயிலில் திருவிழா கொண்டாடும்போது கலாட்டா செய்கிறார்.

நான்கு ஊர்களின் கோயிலுக்குப் பொதுவாக விளங்கும் தேரை மூரார்பாத்தில் இருந்து இழுத்துச் செல்கிறார்.

ஏற்கனவே மொய்தீனுடன் பகை ஏற்பட்டதற்காகத் திருவைக் கரித்துக் கொட்டும் ஊரார், தேர் திருவிழா நடைபெறாமல் போனதற்கும் அவரே காரணம் என்று தூற்றுகின்றனர்.

அதன்பிறகாவது தன் மீதுள்ள களங்கங்களைத் திரு துடைத்தெறிந்தாரா? மீண்டும் தேர் திருவிழாவை நடத்தினாரா? மொய்தீன் மற்றும் அவரது மகனுடனான பகையைக் களைந்தாரா என்று சொல்கிறது ‘லால் சலாம்’ படத்தின் மீதி.

ஊர் மக்களின் ஒற்றுமையைத் தடம் புரளச் செய்த ஒரு கிரிக்கெட் ஆட்டத்தைச் சுற்றியே அமைக்கப்பட்டுள்ளது ‘லால் சலாம்’ படக் கதை. ஆனால், அதனை மறந்துவிட்டு வேறெங்கோ திரைக்கதை செல்வது ஏமாற்றம் தருகிறது.

முதுமையிலும் அழகு

ஏறக்குறைய இளமைப்பொலிவை ஒப்பனையால் ஏற்படுத்திவிட முடியுமென்ற காலகட்டத்தை எல்லாம் தாண்டிவிட்டார் ரஜினிகாந்த்.

அதனால், வயதுக்கேற்ற பாத்திரங்களை ஏற்றால் போதும் என்ற இடத்தை அடைந்திருப்பதும் சிறப்பு. ஆனாலும், அவரை ‘ஸ்டண்ட்’ காட்சிகளில் நடிக்க வைத்தால் தான் ஹீரோயிசம் என்று தப்புக்கணக்கு போட்டிருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

முதுமையிலும் ஒரு அழகுண்டு என்று காட்ட முயன்றிருந்தால், சூப்பர்ஸ்டார் மகள் என்ற பெருமையை இன்னும் ருசித்திருக்க வாய்ப்புண்டு. இதுவே, படத்தில் ரஜினியின் இருப்பு எத்தகையது என்று சொல்லிவிடும்.

விஷ்ணு விஷால் இந்த படத்தின் நாயகன். அவருக்கே நிறைய முக்கியத்துவம். அதற்கேற்ப திருவாகத் தோன்றியிருக்கிறார். விக்ராந்த், இதில் ரஜினியின் மகனாகத் தோன்றியிருக்கிறார்.

முக்கியமானதொரு பாத்திரம். அதனைச் சரியாகச் செய்திருக்கிறார். அழுது மூக்கைச் சிந்துவதே வேலை என்றிருக்கிறார் ஜீவிதா. அவருக்கும் லிவிங்ஸ்டனுக்கும் அதிகக் காட்சிகள் இல்லை.

நிரோஷா இதில் ரஜினியின் மனைவியாக வந்து போகிறார். தம்பி ராமையா, செந்தில், நந்தகுமார், ஆதித்யா மேனன், பாண்டி ரவி, மூணார் ரமேஷ் என்று பலர் இதில் முகம் காட்டியுள்ளனர். கே.எஸ்.ரவிக்குமாரும் இதில் உண்டு.

விஷ்ணு விஷாலின் ஜோடியாக அனந்திகா ஒரு பாடல் காட்சிக்கு வந்து போயிருக்கிறார். தங்கதுரை உட்பட நால்வர் கூட்டணி ஓரிரு காட்சிகளில் நகைச்சுவையூட்டுகிறது.

படத்தில் வில்லனாக விவேக் பிரசன்னாவும், அவரது மனைவியாக ஒரேயொரு காட்சிக்குத் தான்யாவும் வந்து போயிருக்கின்றனர். இத்தனை பாத்திரங்கள் இருப்பது இப்படத்திற்குப் பலமாக மாறியிருக்க வேண்டும்.

ஆனால், எதற்கும் திரைக்கதையில் சரிவர இடமளிக்காதது படத்தைப் பலவீனப்படுத்தி இருக்கிறது. இது போக, கிரிக்கெட் வீரர் கபில்தேவ் இரண்டு காட்சிகளில் ’கௌரவமாக’ தலைகாட்டியிருக்கிறார்.

விஷ்ணு ரங்கசாமி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். திரை முழுக்க மனிதர்களும் பொருட்களும் நிறைந்து ஏதேனும் ஒரு வண்ணம் மிகுந்திருக்க வேண்டுமென்பதில் ஆர்வம் காட்டியிருக்கிறார்.

ஒவ்வொரு பிரேமும் செறிவுடன் அமைந்திருக்கிறது. ராமு தங்கராஜின் தயாரிப்பு வடிவமைப்பு படத்திற்குப் பலம் கூட்டுகிறது. ரங்காவின் டிஐ, விஎஃப்எக்ஸ் என்று பல விஷயங்கள் திரையை வண்ணமயமாக மாற்றியிருக்கின்றன.

ஒளிப்பதிவாளர் விஷ்ணுவே இப்படத்திற்குக் கதை, வசனமும் எழுதியிருக்கிறார். ‘வாழ்க்கைய எப்படி தொடங்குறோம்கறது முக்கியமில்ல; எப்படி முடிக்கிறோம்கறதுதான் முக்கியம்’, ‘திருவிழா வர்ற ரெண்டு நாளுக்காகத்தான் ஒரு வருஷத்தையே நான் வாழுறேன்’ என்பது போன்ற வசனங்கள் நம்மை ஈர்க்கும்.

படத்தொகுப்பைக் கையாண்டிருக்கும் பிரவீன் பாஸ்கர், திரைக்கதையில் பதில்களைத் தர வேண்டிய சில காட்சிகளை வெட்டி எறிந்திருக்கிறார். தேவையற்ற காட்சிகளைப் புகுத்தியிருக்கிறார்.

திரைக்கதை ஒரு வடிவத்தில் அடங்கவில்லை என்று தெரிந்தும், சிதறிக் கிடக்கும் காட்சிகளைக் கோர்வையாக அடுக்கத் தவறியிருக்கிறார்.

முதலில் கேட்கும்போது ‘ப்பா..’ என்று அசூயைப்பட வைத்தாலும், திரையில் பார்க்கும்போது ‘ஏ புள்ள..’, ‘தேர் திருவிழா’, ‘ஜலாலி’ பாடல்கள் கவர்கின்றன. பின்னணி இசை பழைய ஏ.ஆர்.ரஹ்மான் படங்களை நினைவூட்டுகிறது.

அதனைக் கொஞ்சம் சரிப்படுத்தியிருக்கலாம். அதேநேரத்தில், ஒட்டடையின் பலத்தில் நிற்கும் சிதைந்த கட்டடம் போலப் பல காட்சிகளைக் காப்பாற்றவும் அதுவே உதவியிருக்கிறது.

யாருக்காக இந்தப் படம்?

இந்து, முஸ்லிம் ஒற்றுமை குறித்து ‘லால் சலாம்’ ரொம்பவே அழுத்தமாகப் பேச முயன்றிருக்கிறது. ரஜினி பேசும் வசனங்கள் எந்த இடத்திலும் யாரையும் காயப்படுத்தி விடாமல் இருக்கப் பெரும் பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

கிளைமேக்ஸ் காட்சி ரசிகர்களை உணர்ச்சிவயப்பட வைப்பதோடு, மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்துவதாக உள்ளது. எல்லாமே சரிதான்! ஆனால், இந்த படம் யாருக்கானது என்ற கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை.

ஏனென்றால், இரு தரப்பு மக்களின் வாழ்வையும் உணர்வுகளையும் அச்சு அசலாகப் பதிவு செய்திருக்க வேண்டிய இத்திரைப்படம் ரொம்பவே மேலோட்டமாக அதைப் பேசியிருக்கிறது.

அரைகுறையாகப் பார்க்கும் ரசிகர்கள் அதனால் கதையைத் தவறாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்புகளும் இருக்கின்றன. ஒரு திரைப்படமாகவும் சில இடங்களில் பின்தங்கியிருக்கிறது ‘லால் சலாம்’.

இடதுசாரிகள் சொல்லும் ‘சிவப்பு வணக்கம்’ என்ற சொல்லை ஏன் இக்கதைக்கு டைட்டிலாக வைக்க வேண்டும். தெரியவில்லை.

படத்தின் முதல் பாதியில் கிரிக்கெட் ஆட்டமும், மொய்தீன் குடும்பமும் திரைக்கதையின் மையமாக இருக்கின்றன.

இரண்டாம் பாதியை தேர் திருவிழாவும் மகாராஜனின் வில்லத்தனமும் ஆக்கிரமிக்கின்றன. கே.எஸ்.ரவிக்குமார் பாத்திரம் முதல் காட்சியோடு காணாமல் போகிறது.

லிவிங்க்ஸ்டன் – ரஜினி நட்போ, ரஜினி மீது விஷ்ணு விஷால் காட்டும் வெறுப்போ, விக்ராந்த் பாத்திரம் தன்னைச் சுற்றியுள்ளவர்களை அணுகும் விதமோ, இத்திரைக்கதையில் முழுமையாக வெளிப்படவில்லை.

சில காட்சிகள் ‘கட்’ செய்யப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. அவை எதற்காக நீக்கப்பட்டன என்று தெரியவில்லை. ஒவ்வொரு பாத்திரமும் ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு விதமாக ‘ரியாக்ட்’ செய்கின்றன.

ஒவ்வொரு காட்சியும் அழுத்தமானதாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அவற்றை ஒன்றாகக் கோர்த்ததில் தெளிவு சுத்தமாக இல்லை.

முக்கியமாக, இரு தரப்பும் மோதிக்கொள்ளும் சண்டைக்காட்சி விலாவாரியாகக் காட்டப்பட வேண்டிய அவசியமென்ன என்கிற கேள்வி நம்மை அலைக்கழிக்கிறது.

அனைத்து பின்னடைவுகளையும் ‘ரஜினி’ என்ற ஒற்றை வார்த்தையால் சரி செய்திட முடியும் என்று இயக்குனர் ஐஸ்வர்யா நினைத்திருந்தால், ‘வெரி சாரி’ என்றே சொல்லியாக வேண்டும். அதுவே, யாருக்கானது இந்த வணக்கம் என்பதையும் சேர்த்துச் சொல்லிவிடும்!

உதய் பாடகலிங்கம் 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

குமரி மீனவர்களுக்கு எச்சரிக்கை!

புது கொடியுடன் ரசிகர் படை : அரசியலுக்கு வருகிறாரா ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *