திருக்குறளுக்கு மெட்டு அமைத்து, அதற்கு நடனம் ஆடியது பரதநாட்டியக் கலையில் இதுவரை யாரும் செய்திராத ஒன்றாகும்.
முதல் முறையாக நேற்று சென்னையில் நடைபெற்ற பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியில் இதனை நிகழ்த்தி காட்டினார் லக்ஷிதா.
இந்த அரங்கேற்ற நிகழ்ச்சி பரதநாட்டியக் கலையின் மிக முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்பட்டது.
தமிழ்த் திரையுலகிலும், பத்திரிகை உலகிலும் விருந்தோம்பல் திலகம் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர் குட்லக் கல்யாணம்.
இவரது மகள் வழிப் பேத்தி செல்வி லக்ஷிதா மதனின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி ஜூன் 25 அன்று சென்னை தியாகராயா நகரில் உள்ள வாணி மஹாலில் நடைபெற்றது.
இதில், நடிகர் சிவக்குமார், பிரபல பரதநாட்டியக் கலைஞர் நிர்த்ய சூடாமணி டாக்டர்.ஸ்ரீநிதி சிதம்பரம், நீதிபதி வெங்கட்ராமன், நீதிபதி வைத்தியநாதன், நீதிபதி ஆதிகேசவலு, நீதிபதி கோவிந்தராஜ், நீதிபதி பாஸ்கரன், நீதிபதி விமலா, லக்ஷ்மி சிவக்குமார், நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி, இயக்குநர் ஹரிஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டார்கள்.
நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார் பேசுகையில், ”என் நண்பன் கல்யாணத்தின் பேத்தியாக தான் லக்ஷிதா இருந்தாள். ஆனால், இன்று முதல் லக்ஷிதாவின் தாத்தா கல்யாணம் என்று மாறிவிட்டது. உலகம் முழுவதும் லக்ஷிதா பேர் வாங்குவார். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி இனி லக்ஷிதாவின் தாத்தா தான் கல்யாணம் என்று சொல்லும் அளவுக்கு அவள் பின்னிட்டாள்.
இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடனம் ஆடுவது என்பது சாதாரண விசயம் அல்ல, லக்ஷிதா நடனம் ஆடவில்லை, மேடையில் பறந்துகொண்டிருந்தாள். பானை மீது ஏறி ஆடியபோது நான் சீட் நுனிக்கே வந்துவிட்டேன்.
பத்து வருடங்களாகப் பரதநாட்டியம் ஆடி வருவதாகச் சொல்கிறார்கள். லக்ஷிதாவின் இத்தகைய சிறப்பான நடனத்திற்கு அவருடைய ஆசிரியர் ஷீலா உன்னிகிருஷ்ணனை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். பரதநாட்டியம் எல்லோரிடமும் போய்ச் சேரும் கலை இல்லை, அப்படி இருந்தும் இந்தக் கலையை இத்தனை வருடம் காப்பாற்றிய ஷீலா உன்னிகிருஷ்ணனை நான் கைகூப்பி வணங்குகிறேன்.
ஏற்கனவே லக்ஷிதாவின் இரண்டு அரங்கேற்ற நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டேன். ஆனால், இப்போது நடந்தது ஒரு முழுமையான அரங்கேற்றம் என்று நினைக்கிறேன். ஜனனியின் பாட்டுக்கு லக்ஷிதா ஆடுகிறாரா அல்லது இவருடைய நடனத்திற்கு அவர் பாடுகிறாரா என்று தெரியாதவாறு இரண்டுமே ஒரே நேர்கோட்டில் பயணித்து அசத்திவிட்டது. வாத்தியக்குழுவுக்கு என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நடனக் கலைஞர்களுக்கு கண் மிகவும் முக்கியம், நான் ஒரு ஓவியன் என்பதால் கண்களைப் பற்றி நன்றாகத் தெரியும். அந்த வகையில் லக்ஷிதாவின் கண்கள் மீனை விட அழகாக இருக்கின்றன. அந்தக் கண்கள் மூலம் அபிநயங்களையும், பாவங்களையும் லக்ஷிதா வெளிப்படுத்திய விதம் மிகச் சிறப்பாக இருந்தது. பாடல்களில் வருவதை விட லக்ஷிதா நடனத்தில் காட்டிய நளினம் மிக அழகாக இருந்தது.
இறுதியாக நான் ஒரு விசயத்தைப் பாராட்டியாக வேண்டும். நான் நிறைய பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சிகளுக்குச் சென்றிருக்கிறேன். பெரும்பாலும், அறிமுகப்படுத்தும் போது ஆங்கிலத்தில் தான் சொல்வார்கள். ஆனால், இங்கு அனைத்துப் பாடல்களையும் தமிழில் சொல்லி, தமிழில் விளக்கம் கொடுத்தது பிரமாதமாக இருந்தது.
இப்படித் தான் செய்ய வேண்டும். நிறையப் பேருக்கு ஆங்கிலம் புரியாது, எனக்குக் கூடத் தான், அதனால் இதுபோல் தமிழில் பாடல்களையும், அதன் விளக்கங்களையும் சொல்லும் போது என்னைப் போன்றவர்களாலும் இரசிக்க முடியும். மிகச் சிறப்பான முயற்சி இது, நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.
சமீபத்தில் நான் பார்த்த பரதநாட்டிய நிகழ்ச்சிகளில் மிகவும் சிறப்பான நிகழ்ச்சியாக லக்ஷிதாவின் அரங்கேற்றம் அமைந்திருக்கிறது. இதை அரங்கேற்றம் என்று சொல்வதை விட ஒரு முழுமையான பரதநாட்டிய நிகழ்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். மிகச் சிறப்பாக இருந்தது. லக்ஷிதாவின் ஆசிரியர் ஷீலா உன்னிகிருஷ்ணன் உள்ளிட்ட இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகளைக் கூறி விடைபெறுகிறேன்.” என்றார்.
இராமானுஜம்
வெண்புள்ளி பாதித்தவர்களை தனிமைப்படுத்தினால் நடவடிக்கை: எச்சரித்த மா.சுப்பிரமணியன்
செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் எப்போது?: அமைச்சர் மா.சுப்பிரமணியன்