ஆஸ்கர் 2025 விருதுகளுக்காக இந்தியாவின் சார்பாக இந்தி படமான ‘லாபதா லேடீஸ்’யை, இந்தியத் திரைப்பட கூட்டமைப்பு இன்று(செப்டம்பர் 23) தேர்வு செய்தது.
இந்தியாவின் பொருளாதார தலைநகரமான மும்பையில் இருக்கும் இந்திய திரைப்பட கூட்டமைப்பு, ஒவ்வொரு வருடமும் ஆஸ்கர் விருதுகளுக்கு அனுப்புவதற்காக ஒரு படத்தை தேர்வு செய்யும்.
இதற்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து இந்த திரைப்பட கூட்டமைப்புக்குப் படங்கள் அனுப்பி வைக்கப்படும். அதில் ஒரு படம் தேர்ந்தெடுக்கப்படும்.
தமிழ்நாட்டிலிருந்து ‘மகாராஜா’,’கொட்டுக்காளி’, ‘ஜிகர்தண்டா XX’, ‘வாழை’, ‘தங்கலான்’, ‘ஜமா’, மற்றம் மற்ற மாநிலங்களில் இருந்து கான்ஸ் திரைப்பட விழாவில் கிராண்ட் ப்ரி விருது வாங்கிய ‘ஆல் வி இமேஜின் ஏஸ் லைட்’, ‘கல்கி 2898’, ‘சந்து சாம்பியன்’ ‘குட் லக்’ , ‘லாபதா லேடீஸ்’ உள்ளிட்ட 29 படங்கள் இந்தியத் திரைப்பட கூட்டமைப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில்தான், ‘லாபதா லேடீஸ்’ திரைப்படம் ஆஸ்கர் 2025 விருதுக்கு இந்தியா சார்பாக அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்று இந்தியத் திரைப்பட கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
கிரண் ராவ் இயக்கிய இந்த திரைப்படம், கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியானது. இது கிரண் ராவின் இரண்டாம் திரைப்படம். இதற்கு முன்னர் எல்லோராலும் பாராட்டப்பட்ட‘தோபி காட்’ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
லாபதா லேடீஸ் திரைப்படத்தில், ஒரே நாளில் திருமணம் ஆன இரு புது தம்பதிகள் ரயிலில் ஒன்றாகப் பயணிக்கிறார்கள். இரண்டு ஜோடிகளும் ஒரே மாதிரி உடை அணிந்திருக்கிறார்கள். அதில் ஒருவரது மனைவி, தவறுதலாக மற்றொரு ஜோடியின் கணவருடன் சென்று விடுகிறார்.
அதற்குப் பின் என்ன நடந்தது என்பது தான் கதை. இந்த படத்தில் இந்தியச் சமூகத்தில் நிலவும் ஆணாதிக்கத்தைக் கிண்டல் செய்திருப்பார்கள். இந்த படம் பெரும்பான்மை மக்களால் கொண்டாடப்பட்டது.
கிரண் ராவ் மகிழ்ச்சி
ஆஸ்கர் 2025 விருதுகளுக்கு இந்தியா சார்பாக தான் இயக்கிய திரைப்படம் தேர்வு செய்யப்பட்டிருப்பதைப் பற்றி கிரண் ராவ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் “அகாடமி விருதுகளுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாக எங்களின் ‘லாபதா லேடீஸ்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
இந்த அங்கீகாரம் எனது முழு குழுவின் அயராத உழைப்புக்கு ஒரு சான்றாகும். அவர்களின் முழு அர்ப்பணிப்பும் ஆர்வமுமே இந்த கதைக்கு உயிர் கொடுத்தது.
சினிமா எப்போதுமே இதயங்களை இணைப்பதற்கான, எல்லைகளை மீறுவதற்கான, அர்த்தமுள்ள உரையாடல்களைத் தூண்டுவதற்கான ஒரு சக்திவாய்ந்த ஊடகமாக இருந்து வருகிறது.
இந்தியாவைப் போலவே இந்தப் படம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடையே எதிரொலிக்கும் என்று நம்புகிறேன்.
தேர்வுக் குழுவுக்கும், இந்தப் படத்தை நம்பிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வருடம் வெளியான பல அற்புதமான திரைப்படங்களின் பட்டியலில் இருந்து எனது படம் தேர்வானது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பாக்கியம்.” என்று கிரண் ராவ் பதிவிட்டுள்ளார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஆந்திரா குவாரியில் சிக்கிய சீசிங் ராஜா… ரவுடியாக உருவாக்கிய பைனான்ஸ் கம்பெனிகள்!