தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகச் சமீபத்தில் குஷ்பூ பொறுப்பேற்றார். இதற்கிடையே நிகழ்ச்சி ஒன்றில் பேசிய குஷ்பு, தனது சிறு வயது வாழ்க்கை குறித்து தனக்கு நேர்ந்த பிரச்சினைகள் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.
தர்மத்தின் தலைவன் படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் குஷ்பூ.
ரஜினி, கமல் என 80-களின் முன்னணி நட்சத்திரங்களுடன் பல படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார்.
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்த குஷ்பூ சமீபத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
மம்தா குமாரி, டெலினா கோங்தூப் ஆகியோருடன் குஷ்பூ-வும் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரானார்.
இதற்கிடையே 8 வயதில் தந்தையால் பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
”WeTheWomen” நிகழ்ச்சியில் மோஜோ ஸ்டோரிக்காக குஷ்பூ அளித்த பேட்டியில்,
“ஒரு குழந்தைக்கு துஷ்பிரயோகம் செய்யப்பட்டால் அது அதன் வாழ்நாள் முழுவதும் ஒரு வடுவாக ஆறாமல் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
அது ஆணோ, பெண்ணோ என்பதில் எந்த சிக்கலும் கிடையாது.
எனது அம்மாவிற்கு மிகவும் மோசமான ஒரு திருமண வாழ்க்கை அமைந்தது. எங்களுக்கு மனைவியையும், குழந்தையையும் அடிக்கும் ஒரு குடும்பத் தலைவன் அமைந்தார்.
தனது ஒரே மகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதை தன்னுடைய பிறப்புரிமை போல் அவர் நினைத்துக் கொண்டிருந்தார்.
எனக்கு எட்டு வயதாகும் போது என்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ய தொடங்கினார். அவருக்கு எதிராக துணிச்சலுடன் நான் பேசும் போது எனக்கு 15 வயதாகும். எனக்காக நான் ஒரு முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
ஒருவேளை நான் இதை வெளியே சொன்னால் குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் எனக்கு இருந்தது.
அதன் காரணமாகவே நான் பல ஆண்டுகள் அமைதி காத்து வந்தேன். இதை நான் கூறினால் எனது அம்மா நம்பவில்லை என்றால் என்ன செய்வது என்ற அச்சம் எனக்கு இருந்தது.
கணவனே கண்கண்ட தெய்வம் என்ற மனப்பான்மையிலேயே எனது அம்மா வாழ்ந்து வந்தார். இனியும் தாங்க முடியாது என்று எனது 15 வயதில் முடிவு செய்த நான். அவருக்கு எதிராக நான் பேசத் தொடங்கினேன்.
எனக்கு 16 வயது கூட இருக்காது அவர் எங்களை விட்டு பிரிந்து சென்றார். அடுத்த வேலை உணவுக்கு நாங்கள் என்ன செய்வதென்று தெரியாத நிலையில் இருந்தோம்.
எனது வாழ்வில் குழந்தை பருவமானது பல பிரச்னைகளை கொண்டது. ஒரு கட்டத்தில் என்ன நடந்தாலும் மன தைரியத்தோடு போராட வேண்டும் என்ற மனப்பான்மை எனக்கு வந்தது” என தெரிவித்தார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
போக்குவரத்து துறையை தனியார் மயமாக்காதே …அதிகாலையே ஆர்ப்பாட்டத்தை தொடங்கிய சி.ஐ.டி.யு!
அந்தமான் நிக்கோபார் தீவு: அதிகாலை நிலநடுக்கம்!