குழந்தைகளுக்கான அனிமேஷன் படங்களைப் பெரியவர்கள் பார்க்கலாமா? இந்தக் கேள்வி பலருக்கும் உண்டு. மீறிப் பார்க்கும் பழக்கமுள்ளவர்கள், ‘குழந்தையாடா நீ? பொம்மை படமெல்லாம் பார்த்துட்டு இருக்க’ என்ற கிண்டல்களை எதிர்கொள்ள வேண்டி வரும்.
அப்படி ஒருமுறை தரமான அனிமேஷன் படமொன்றைப் பார்த்துவிட்டால், அந்த வகைமைக்கு அடிமையாகி விடுவீர்கள் என்பதே உண்மை. அதுவே, சின்னஞ்சிறு குழந்தைகளோடு அவர்களைப் பெற்றவர்களும், வீட்டிலிருக்கும் முதியோர்களும் ஒன்று சேர்ந்து அனிமேஷன் படங்களை ரசிக்க வைக்கிறது.
அப்படியொரு தொடக்கத்தைப் பலரிடத்தில் ஏற்படுத்திய படம் ‘குங்ஃபூ பாண்டா’. அதன் முதல் மூன்று பாகங்களைத் தொடர்ந்து தற்போது நான்காம் பாகம் வெளியாகியிருக்கிறது. படம் எப்படியிருக்கிறது? என்பதை இங்கே பார்க்கலாம்.
அதே கதைதான்
’வீரம்னா என்ன விலை’ என்று கேட்கும் ’போ’ எனும் பாண்டாவை குங்ஃபூ மாஸ்டார் ஊஹ்வே அமைதிப் பள்ளத்தாக்கின் மாவீரனாகத் தேர்ந்தெடுப்பதையும், அதன்பிறகு அந்த பாண்டா நிஜமான வீரனாக மாறுவதற்கு மாஸ்டர் ஷிபு உதவுவதையும் சொன்னது ’குங்ஃபூ பாண்டா’.
’குங்ஃபூ பாண்டா 2’வில் ‘போ’வை வளர்த்துவரும் சைனீஸ் கூஸ் அதன் உண்மையான தந்தை அல்ல என்று தெரிய வருவதையும், அதன்பிறகு போவின் உண்மையான பெற்றோர் என்னவானார்கள் என்பதையும் சொன்னது.
Amigo Garage: அமீகோ கேரேஜ் – திரை விமர்சனம்!
‘குங்ஃபூ பாண்டா 3’யில் தனது உண்மையான தந்தை லீ ஷான் உயிரோடு இருப்பதை அறிந்து அதனைத் தேடி போ செல்வதைச் சொன்னது.
மூன்றுமே குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையூட்டும் பொருட்டு பெரியோர்கள் சொல்லும் ‘காதுல பூ’ வகையறா கதைதான்.
அதனைச் சுவைபடக் காட்சிகளாக வடித்து, அபாரமான அனிமேஷன் உருவாக்கம் மூலமாக உயிர் கொடுக்கும் வேலையை மூன்று படங்களுமே செய்திருக்கும். அதையே நான்காம் பாகமும் வழிமொழிந்திருக்கிறது.
நான்காவது பாகமான இப்படமானது, தன் வசமிருக்கும் மாவீரன் அந்தஸ்துக்கு தகுதியான வாரிசை போ தேர்ந்தெடுத்தே ஆக வேண்டுமென்று மாஸ்டர் ஷிபு சொல்வதில் இருந்து தொடங்குகிறது.
போவின் சாகசங்கள்
முதல் பாகத்தில் போவை மாவீரனாகத் தேர்ந்தெடுத்தது போன்றே ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. அதில் ‘பெர்பார்ம்’ செய்யும் எவரையும் போவுக்குப் பிடிக்கவில்லை.
அந்த நேரத்தில், ஸென் எனும் நரியைச் சந்திக்கிறது போ. தன்னுடைய இடத்தில் திருட வந்த ஸென் உடன் சண்டையிடுகிறது.
இறுதியாக, அமைதிப்பள்ளத்தாக்கைத் தன்வசப்படுத்த முயலும் கெமேலியன் பற்றிக் கேள்விப்படுகிறது.
வேண்டிய உருவத்திற்கு மாறிக்கொள்ளும் சூனியக்காரியான கெமேலியனிடம் இருந்து மக்களைக் காக்க வேண்டி, அதன் உடன் மோதத் தயாராகிறது போ. ஸென் உடன் சென்று அது இருக்கும் இடம் நோக்கிப் பயணிக்கிறது.
பல்வேறு தடைகளைக் கடந்து கெமேலியன் இருப்பிடத்தை அடைந்தபிறகே, ஸென் அதன் கையாள் என்று போவுக்கு தெரிய வருகிறது. மாஸ்டர் ஊஹ்வே தந்த ஆன்மிகத்தடியை போவிடம் இருந்து கெமேலியன் பறிக்கிறது.
அதன் மூலமாக, போ உடன் மோதி ஆன்மாக்களின் உலகத்திற்குச் சென்ற குங்ஃபூ வீரர்களின், வீராங்கனைகளின் திறமைகளை உறிஞ்சத் திட்டமிடுகிறது.
மின்னம்பலம் டாப் எம்பிக்கள் விருது விழா!
போவை மலையில் உச்சியில் இருந்து தள்ளிவிடுகிறது. இதற்கிடையே, சைனீஸ் கூஸும் லீ ஷானும் போவுக்கு தெரியாமல் அது கடந்த பாதையைத் தொடர்ந்து வருகின்றன.
தங்களது குழந்தை போவுக்கு நேரும் கதியைப் பார்த்து இரண்டும் கதறுகின்றன. இறுதியில் என்ன நிகழ்ந்தது? கெமேலியன் சதியை குங்ஃபூ பாண்டா முறியடித்ததா? இல்லையா? என்று சொல்கிறது இந்த நான்காம் பாகம்.
மேற்சொன்னவற்றில் இருந்தே படத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்று சிறு குழந்தையும் சொல்லிவிடும்.
அது தெரிந்தும் கூட, ஒரு பிரேமை கூட கண்ணை அகற்றாமல் பார்க்கச் செய்திருக்கிறார் இதன் இயக்குநர் மைக் மிட்செல்.
சிரித்து மகிழலாம்
ஜோனதன் ஐபெல், க்ளென் பெர்கர், டேரன் லெம்கேவின் எழுத்தாக்கத்தில் மிகச்சிறப்பாக போ மற்றும் ஸென்னின் பயணம் திரையில் விரிகிறது.
வழக்கம்போல, செகண்ட் கிளைமேக்ஸ் நம்மைச் சிரிக்க வைத்து வழியனுப்புகிறது. மற்ற மூன்று பாகங்களைப் போலவே, இதிலும் அனைத்து வண்ணங்களும் திரையில் ஆங்காங்கே மிளிர்கின்றன.
அந்த வகையில் இப்படமும் கண்களுக்கு விருந்தளித்திருக்கிறது. ஜோஷ்வா குந்தரின் ஒளிப்பதிவு அதனைச் சாதித்திருக்கிறது.
ஹான்ஸ் ஜிம்மரோடு இணைந்து ஸ்டீவ் மஸாரோ தந்திருக்கும் பின்னணி இசை நம்மை உற்சாகத்தில் தள்ளுகிறது. தமிழில் வட்டார வழக்கைக் கையாண்டுள்ளனர் இதனை மொழியாக்கம் செய்தவர்கள்.
அது மிகப்பொருத்தமாக அமைந்துள்ளது. ‘அடடா இந்த வசனம் நல்லாயிருக்கே’ என்று நினைவில் இருத்திக் கொள்வதற்குள் அடுத்த வசனம் வந்து விடுகிறது; நம்மைச் சிரிக்கவும் வைக்கிறது.
ஆங்கிலத்தில் ஜாக் ப்ளாக், டஸ்டின் ஹாஃபேம், ஜேம்ஸ் ஹாங் போன்றவர்களுடன் இணைந்து, இப்படத்திற்காக ஸென்னுக்கு குரல் கொடுத்திருக்கிறார் அமெரிக்க நடிகையான ஆக்வாஃபினா.
சாதாரணமாக தெரியும்
முதல் மூன்று படங்களையும் தியேட்டரில் பார்த்து ரசித்தவர்களுக்கு நான்காம் பாகம் சாதாரணமாகத் தெரியலாம்.
காரணம், அப்படங்கள் அடுத்தடுத்த பாகங்களைக் கண்டபோது, அவர்களும் வாழ்க்கையில் வளர்ந்ததுதான். அதனால், சின்னஞ்சிறு குழந்தைகளால் மட்டுமே இப்படத்தின் ‘ஒரிஜினல் டேஸ்ட்’டை உணர முடியும்.
நிச்சயமாக, அவர்கள் வாய்விட்டுச் சிரித்து, இருக்கையில் இருந்து எழுந்து குதூகலிக்கும் வகையில் இப்படத்தில் சில தருணங்கள் உண்டு.
மூன்று பாகங்களைப் பார்த்தவர்களுக்கு அது போன்ற தருணங்கள் இதில் குறைவு என்ற எண்ணம் தோன்றலாம். எனக்குள்ளும் அந்த எண்ணமே எழுந்தது.
அந்த ஒப்பீட்டைத் தவிர்த்துவிட்டால், குடும்பத்தோடு சேர்ந்து ரசிக்கச் சரியான சாய்ஸ் ஆக அமையும் இந்த ‘குங்ஃபூ பாண்டா 4’.
-உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சு.வெங்கடேசன், ஆர்.சச்சிதானந்தம்: மார்க்சிஸ்ட் வேட்பாளர்களின் பின்னணி என்ன?