சிரிக்க வைக்கிறாரா? அழ வைக்கிறாரா?
எழுபதுகளில் கே.பாலச்சந்தர், எஸ்.பி.முத்துராமன், கோபாலகிருஷ்ணன், எண்பதுகளில் தேவராஜ் -மோகன், விசு, ஆர்.சி.சக்தி, தொண்ணூறுகளில் வி.சேகர் உட்பட மிகச்சில இயக்குனர்கள் மட்டுமே ‘குடும்பப் படம்’ எனும் வகையறாவில் படங்களைத் தந்திருக்கின்றனர். ’காலைக்காட்சிக்கு பெண்கள் கூட்டமாக வருவார்கள்’ என்கிற வழக்கம் அருகிப்போய், இளையோர் மட்டுமே திரையரங்குகளுக்கு வருவார்கள் என்ற நிலை உருவானபின்னர் அப்படியான படங்களின் வருகை குறைந்துபோனது.
ஆனால், ஹீரோயிச கொண்டாட்டங்களுக்கு மத்தியிலும் மலையாளத் திரையுலகம் அப்படியான படங்களை இடைவிடாமல் தந்து வருகிறது. குறிப்பிட்ட வட்டாரத்தின் கலாசாரத்தை, அங்குள்ள சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை, அதில் இருக்கிற கரிப்புச் சுவையைப் பதிவு செய்து வருகிறது. ’தமிழிலும் அப்படிப்பட்ட படங்கள் அவ்வப்போது வரத்தான் செய்கின்றன’ என்று இதற்குச் சிலர் பதில் சொல்லலாம். அவர்களுக்கான உதாரணமாக உருவாக்கப்பட்டிருக்கிறது ராஜேஸ்வர் காளிசாமி இயக்கியுள்ள ‘குடும்பஸ்தன்’.
ஏலேய், ஜெய்பீம், குட்நைட், லவ்வர் படங்களின் வழியே கவனம் ஈர்த்த மணிகண்டன் இதில் நாயகனாக நடித்திருக்கிறார். சான்வே மேஹ்னா நாயகியாக அறிமுகமாகியிருக்கிறார். குரு சோமசுந்தரம், ஆர்.சுந்தர்ராஜன், பாலாஜி சக்திவேல், பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர், நிவேதிதா ராஜப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு வைஷாக் இசையமைத்திருக்கிறார்.
’குடும்பஸ்தன்’ தரும் திரையனுபவம் எத்தகையது?

பணம்தான் வாழ்க்கையா?
தாய், தந்தை, மனைவி, உறவினர்கள், நண்பர்களின் நலனுக்காகக் கடன் வாங்கும் ஒரு இளைஞன், அப்பணத்தை வட்டியோடு திருப்பிச் செலுத்த முடியாமல் தடுமாறுவதுதான் ‘குடும்பஸ்தன்’ படத்தின் ஒருவரிக்கதை.
கோயம்புத்தூரில் வாழ்ந்து வரும் நவீன் (மணிகண்டன்), வெண்ணிலா (சான்வே மேஹ்னா) எனும் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்கிறார். முதலில் தூற்றினாலும், இருவரையும் நவீன் பெற்றோர் ஏற்றுக்கொள்கின்றனர்.
வாழ்ந்துவரும் பூர்விக வீட்டின் குறைபாடுகளைச் சரி செய்து புனரமைக்க வேண்டும் என்று விரும்புகிறார் நவீன் தந்தை (ஆர்.சுந்தர்ராஜன்). வட இந்திய ஆன்மிகத்தலங்களுக்கு சுற்றுலா செல்ல வேண்டுமென்று விரும்புகிறார் தாய். மனைவியோ, சிவில் சர்வீஸ் தேர்வெழுத வேண்டுமென்று நினைக்கிறார்.
அதற்குத் தேவையான பணத்தைத் தயார் செய்வதற்குள், நவீன் பார்த்துக் கொண்டிருக்கும் வேலை பறி போகிறது. அதனைக் குடும்பத்தினரிடம் சொல்லாமல் கடன் வாங்கிச் சமாளிக்கிறார். இதற்கிடையே, வெண்ணிலா கர்ப்பமுறுகிறார்.
என்ன ஆனாலும், தான் கஷ்டப்படுவதைச் சொல்லாமல் உடனடியாக இன்னொரு வேலையில் சேர வேண்டுமென்று முயற்சிக்கிறார் நவீன். இந்த நேரத்தில், பெற்றோருக்கு அறுபதாம் கல்யாணம் நடத்த வேண்டிய கட்டாயம் நேர்கிறது. கொஞ்சம் குயுக்தியாக யோசித்து, அந்த வைபவத்தைத் தனது சகோதரி கணவர் (குரு சோமசுந்தரம்) நடத்துமாறு செய்கிறார்.

ஆனாலும், ஏற்கனவே நவீன் இழைத்த ஒரு சிறிய தவறை உணரும் சகோதரி கணவர் மூலமாக, அவரது வேலை பறி போன விஷயம் ஒட்டுமொத்த உறவினர்களுக்கும் தெரிய வருகிறது.
அதன்பிறகு, தன் கழுத்தை நெறிக்கும் கடன் சுமையைச் சமாளிக்க நவீன் என்ன செய்தார்? அவரது ஒவ்வொரு முயற்சியும் எடுபடாமல் போகும்போது, அவர் எப்படி துன்புற்றார்? இறுதியாக, அதிலிருந்து விடுபட்டாரா இல்லையா என்பதைச் சொல்கிறது இப்படத்தின் மீதி.
படம் முழுக்கப் பணத்தின் பின்னே திரியும் அளவுக்கு, நாயகன் எதிர்கொள்ளும் கஷ்டங்களே பிரதானப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதேநேரத்தில், அவர் தனக்கென்று தனிப்பாதை அமைத்து, கொள்கைகள் வகுத்து, அதன்படி வாழ்பவராகவும் இருக்கிறார். முதலாவதை அடிக்கோடிட்டுச் சொன்ன அளவுக்கு, இரண்டாவது கருத்து திரைக்கதையில் நேர்த்தியாக வெளிப்படுத்தப்படவில்லை. அதனைப் புறந்தள்ளிவிட்டால், இப்படம் நல்லதொரு திரையனுபவத்தைத் தருவதாக இருக்கும்.
மணிகண்டனுக்கு வெற்றி!

உறவினர்கள், நண்பர்களை அரவணைத்துச் செல்ல நினைக்கிற ஒரு சாதாரண மனிதனாகத் திரையில் தோன்றியிருக்கிறார் மணிகண்டன். எப்படி சிவகார்த்திகேயன் தனக்கென்று ‘ஹீரோயிசம்’ சார்ந்த ஒரு நாயக பிம்பத்தைத் திறமையாகக் கட்டமைத்தாரோ, கிட்டத்தட்ட அதற்கு நேரெதிரான திசையில் தனக்கான பாதையில் பயணித்து வருகிறார். அதில் கிடைத்த இன்னொரு வெற்றியாக, இப்படம் அவருக்கு அமைந்திருக்கிறது.
சான்வே மேஹ்னா வசன மழையைப் பொழியாவிட்டாலும், தனது முகம், உடல்மொழியில் வெளிப்படுத்தும் நுணுக்கமான அசைவுகள் மூலமாக ஈர்க்கிறார்.
ஆர்ப்பாட்டமிக்க எதிர்மறை பாத்திரத்தில் தோன்றி நம்மை எளிதாக வசீகரிக்கிறார் குரு சோமசுந்தரம். அவரது மனைவியாக வரும் நிவேதிதா, கிளைமேக்ஸ் காட்சியில் ‘சிக்சர்’ அடிக்கிறார்.
ஆர்.சுந்தர்ராஜன், அவரது மனைவியாக நடித்தவர், பாலாஜி சக்திவேல், நக்கலைட்ஸ் சாவித்திரி, பிரசன்னா பாலச்சந்திரன், ’லப்பர் பந்து’ ஜென்சன் திவாகர் உட்படப் பலர் இதிலுண்டு.
நாயகன் நாயகி மட்டுமல்லாமல் இதர பாத்திரங்கள் வந்து போகிற காட்சிகளும் கூட வாய்விட்டுச் சிரிக்கும் வகையில் இருக்கின்றன. குறிப்பாக பிரசன்னா – ஜென்சன் & கோ இடம்பெறும் தொடக்க, இறுதி காட்சிகள் நம்மைக் குலுங்கி விழுந்து சிரிக்க வைக்கின்றன.
இந்தப் படத்தில் எந்தவொரு காட்சியும் ‘இது ஒரு சினிமா’ என்று எண்ண வைக்கும்படியாக இல்லை.
மிகச்சரியாகத் திட்டமிட்டு, காட்சியாக்கத்தில் அப்படியொரு விளைவு வருமாறு வடிவமைத்திருக்கிறது படக்குழு.
ஒளிப்பதிவாளர் சுஜித் என்.சுப்பிரமணியம், கலை இயக்குனர் சுரேஷ் கல்லேரி, படத்தொகுப்பாளர் கண்ணன் பாலு என்று பலர் அதன் பின்னே இருக்கின்றனர்.
சீரியசாக நகரும் காட்சிகளைக் கண்டு ரசிகர்கள் சிரிக்க வேண்டும் எனும்போது திரையில் அவலச்சுவை மிகுந்து நிற்க வேண்டும். அதற்குப் பின்னணி இசை அமைக்கும் பணியைத் திறம்படக் கையாண்டிருக்கிறார் வைஷாக்.
அவரது இசையில் ஒலிக்கும் இரு பாடல்களுமே கதை நகர்வுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அவை திரையோடு நம்மை ஒன்றச் செய்கின்றன.
புதுமுக இயக்குனர் ராஜேஸ்வர் காளிசாமி இதன் திரைக்கதையை பிரசன்னா பாலச்சந்திரன் மற்றும் என்.கிருஷ்ணகாந்த் உடன் இணைந்து அமைத்திருக்கிறார்.
முழுக்க கோவை வட்டாரத்தில் அமைவதாக நகரும் கதைக்கு ஏற்றவாறு பிரசன்னா வசனம் எழுதியிருக்கிறார்.
நாயகன் படும் கஷ்டங்கள் தான் பிரதானம் என்பதை உணர்த்த, அதனை மையமாகக் கொண்டு பல காட்சிகளை அமைக்க வேண்டுமென்று இக்கூட்டணி எண்ணவில்லை. மாறாக, நாயகனும் அவரது நண்பர்களும் செய்யும் தகிடுதத்தங்களை நகைச்சுவையாக மாற்ற முயற்சித்திருக்கிறது.
அதன் வழியே மறைமுகமாக அப்பாத்திரத்தின் வலியும் வேதனையும் நம்மை வந்தடைகிறது. அதனால் இப்படம் நம்மைச் சிரிக்க வைப்பதோடு அழவும் வைக்கிறது.
கடைசி அரை மணி நேரத்தில் திரைக்கதை கொஞ்சம் சீரியஸ் தளத்திற்கு நகர்ந்து, மீண்டும் நகைச்சுவைக்கு மாறியிருப்பது அசாதாரணமான முயற்சி. கொஞ்சம் துருத்தலாக உணரவிடாமல், நேர்த்தியாக அம்மாற்றத்தைக் கையாண்டிருப்பது இயக்குனரின் வெற்றி. ஒரு புதுமுகமாக அவர் அச்சாதனையைச் செய்திருப்பதைக் கொண்டாடத்தான் வேண்டும்.
தியேட்டரில் திரள்கிற ரசிகர்கள் கூட்டம் அதனை வரும் நாட்களில் உணர்த்தும். முக்கியமாக, குடும்பத்துடன் சேர்ந்து கண்டு களிக்க ஏற்ற உள்ளடக்கத்தை இப்படம் கொண்டிருக்கிறது.
நடிகர் மணிகண்டனைப் பொறுத்தவரை இது இன்னுமொரு வெற்றிப்படமாக அமையக்கூடும். அவர் மட்டுமல்லாமல், இதர கலைஞர்களின் மீதும் வெளிச்சத்தைப் பாய்ச்சியிருக்கிறது.
‘கமர்ஷியல் படம்’ என்றால் கலகலப்பை நிறைக்கிற சில கலாட்டாக்களே போதும் என்றிருக்கும் சூழலில், மாநிலத்தின் ஒரு பகுதியிலுள்ள மண்ணின் கலாசாரத்தையும், மக்களின் வாழ்வியலையும், அங்கு நிலவுகிற முரண்களையும் சுவாரஸ்யமாகத் திரையில் காட்டுவது சாதாரண விஷயமல்ல.
அந்த வகையில், இப்படம் தன் மகுடத்தில் பல சிறகுகளை தாங்கிக் கொண்டிருக்கிறது. அடுத்தடுத்த நாட்களில், பலவிதமான ரசிகர்களால் நம் பார்வைக்கு வரலாம். அந்த வகையில், இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க திரைப்படமாக வெளியாகியிருக்கிறது ‘குடும்பஸ்தன்’.