’சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா குக்கூகூகு.. கூகூ..’ என்று சித்ரா பாடி 37 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.
வயது மூப்பையும் குரல் மாற்றங்களையும் மாறி இன்றும் அவரது பாடல்கள் இனிமையைத் தாங்கி நிற்கின்றன. இன்றும் கூட, ’லாலா லாலலா..’ என்று அவர் மெலிதாகச் சப்தமெழுப்பினாலே, அது தானாக இசை ஒழுங்குக்குள் வந்து நிற்கிறது. எத்தனை வெறுமையாக இருந்தாலும், நம்முள் உற்சாகத்தை நிறைக்கிறது. ஆகப்பெரிய கலைஞர்களால் மட்டுமே சாத்தியப்படுத்த முடிகிற சாதனை அது..!
நாயகிகளின் மனசாட்சி!
கேரளாவில் பிறந்து வளர்ந்தாலும், அவரது திறமையை மலையாளத் திரையுலகம் வளர்த்தெடுத்தாலும், உலகம் முழுக்க அவரது குரலைப் பரவச் செய்ததில் தமிழ் திரையிசைக்குப் பெரும் பங்குண்டு.
சித்ரா மட்டுமல்ல, எஸ்.பி.பி, கே.ஜே.யேசுதாஸ் தொடங்கிப் பல பின்னணிப் பாடகர்கள், பாடகிகளின் குரல்கள் எல்லை தாண்டி ஒலிக்கவும் இங்கிருப்பவர்களே காரணம் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.
எண்பதுகளில் அப்படியொரு அதிசயிக்கத்தக்க மாற்றம் நிகழ்ந்தது. அதன் விளைவாக, தமிழ் மண்ணின் குரலாக மாறிப்போனார் சித்ரா. கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர் – கணேஷ், இளையராஜா, கங்கை அமரன், ரவீந்திரன், டி.ராஜேந்தர், மனோஜ் கியான், தேவேந்திரன் என்று அந்த காலகட்டத்தில் இசையமைத்துவந்த அனைவரது படங்களிலும் சித்ராவின் பங்களிப்பு இருந்தது.
ஆர்.டி.பர்மன், லட்சுமிகாந்த் பியாரிலால், பப்பி லஹரி போன்ற இந்தி இசையமைப்பாளர்கள் தமிழுக்கு வந்தபோது, அவர்களது முதல் குரல் தேர்வாக சித்ராவே திகழ்ந்தார். இதனால், திரும்பிய திசையெங்கும் சித்ராவின் குரல் ஒலிக்கத் தொடங்கியது.
தமிழ் வார்த்தைகளைத் தெளிவாக உச்சரிப்பதோடு, காட்சியமைப்புக்கும் கதாபாத்திரமாகத் தோன்றும் நடிகையின் இயல்புக்கும் ஏற்பக் குரல் கொடுக்கும் திறமை சித்ராவிடம் எப்போதும் உண்டு. அப்போதிருந்த பல பின்னணி பாடகர்கள், பாடகிகள் அந்த அம்சத்திற்கு முக்கியத்துவம் தந்ததும் அதற்கான காரணமாக இருக்கலாம். அது மட்டுமல்லாமல், அப்போது சித்ராவின் குரல் இளம் நாயகிகள் வாயசைக்கவே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது.
அதற்கேற்ப, திரைக்குப் பின்னால் அவர்களது மனசாட்சியாகவும் அவர் திகழ்ந்தார். கிட்டத்தட்ட தன் வயதையொத்த கலைஞர்களுக்குக் குரல் இரவல் தருகிறோம் என்ற புரிதல் இருந்ததால் மட்டுமே, அவரால் அதனைச் சாத்தியப்படுத்த முடிந்தது. ’கண்ணா வருவாயா’, ‘மாசி மாசம்தான்’, ’சொல்லாமத்தானே இந்த மனசு துடிக்குது’, ’கண்ணுக்குள் நூறு நிலவா’, ‘மெதுவா மெதுவா’ போன்ற பாடல்கள் பலவற்றில் அதனை உணர முடியும். அந்த வகையில், அவரது குரல் இன்றைய பெருசுகளின் மனதில் இளமையைச் சுரக்க வைக்கும் அதிசயக் கருவி என்றால் மிகையல்ல.
கதாபாத்திரமாக மாறும் இயல்பு!
திரையில் தோன்றும் நடிகர் நடிகைகள் மட்டுமல்லாமல், அவர்களுக்குப் பின்னணி குரல் தருபவர்களும் பாடுபவர்களும் கூட அந்தந்த பாத்திரங்களாக மாற வேண்டியது அவசியம். திரையிசையின் மகத்துவமே அதுதான். குறிப்பிட்ட திரைக்கதையில் ஒரு பாத்திரத்தின் இயல்பை, குணாதிசயங்களை, மன எண்ணங்களை, கதைப் போக்கைக் குரலில் பிரதிபலித்தாக வேண்டும்.
பாடல் பதிவின்போது இயக்குனரும் இசையமைப்பாளரும் பாடலாசிரியரும் அதனை விளக்கிச் சொல்வார்கள் என்றபோதும், அதனைச் செயல்படுத்துவதென்பது சம்பந்தப்பட்டவரின் முழு ஈடுபாடு இருந்தால் மட்டுமே சாத்தியப்படும். தனது முன்னோடிகளைப் போலவே, அவ்விஷயத்தில் கெட்டிக்காரராக இருந்த காரணத்தினாலேயே இன்றும் சித்ராவினால் தனது இசைப்பயணத்தைத் தொடர முடிகிறது.
சித்ராவின் பாடல்களைத் தொடர்ச்சியாகக் கேட்கும் ஒருவருக்கு, பல ஆண்டுகளுக்கு முன்னால் அவர் பாடிய பாடலொன்றை முதன்முறையாகக் கேட்கும்போது ‘அவரா பாடியது’ என்று வியப்பு ஏற்படுவது இயல்பு. அந்த அளவுக்கு, ஆண்டுகள் ஆக ஆக மெல்லத் தனக்கான பாடல் தேர்வுகளையும் குரல் தரும் விதத்தையும் மாற்றிக்கொண்டார் சித்ரா.
அவர் பாடிய பாடல்களை ஆண்டுவாரியாகக் கேட்டு ரசித்தால், அந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள முடியும். குறிப்பிட்ட காலகட்டத்தில், தன்னைத் தேடி வரும் வாய்ப்புகளில் எதனை ஏற்பது, எவற்றைத் தவிர்ப்பது என்ற தெளிவான மனநிலையை அடைந்தார்.
வயது மூப்பினால் ஏற்படும் மாற்றங்களைப் பாடல்களில் பிரதிபலித்தாலும், ஏற்கனவே பாடிய பாடலை மீண்டும் பாடுவதென்பது பாடும் கலைஞர்களுக்குப் பெரும்சவாலைத் தரும். ஏனென்றால், ரசிகர்கள் அதே இனிக்கும் இளமையை மீண்டும் உணரவே விரும்புவார்கள்.
அதனைச் சாதிக்க, அதே காலகட்டத்திற்கு மனம் சென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இசைக்கலைஞர்கள் ஆளாவார்கள். அதனால்தான், எண்பதுகளில் வெளியான பாடல்களை மேடையில் சித்ரா பாடும்போது, ‘டைம் மெஷின்ல ஏறிட்டாரோ’ என்று தோன்றும் அளவுக்கு அவரது முகத்தில் பதின்பருவப் பெண் குழந்தையின் பாவனைகளைப் பார்க்க முடியும். அதேநேரத்தில், வாரிசு படத்தின் ’ஆராரிராரிரோ கேட்குதம்மா’ பாடுகையில் தென்படும் தாய்மையின் முதிர்ச்சி இரண்டுக்குமான வித்தியாசத்தை எடுத்துக் காட்டும்.
ஆராதிக்கும் குணம்!
சுமார் பதினெட்டாயிரம் திரைப்பாடல்கள் உட்பட 25,000க்கும் மேற்பட்ட பாடல்களைத் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட இந்தியாவின் பல மொழிகளில் பாடியுள்ளார் சித்ரா. ஆங்கிலம், பிரெஞ்சு, மலாய், லத்தீன், அரபிக் போன்ற வெளிநாட்டு மொழிகளில் பாடியதும் அவற்றுள் அடக்கம்.
‘நானொரு சிந்து’ தொடங்கி இதுவரை 6 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். இது போன்று அவரது பெருமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். திரையிசையில் அவர் அடைந்திருக்கும் உயரம், அதற்கு முன்னும் பின்னும் சாதித்த, சாதிக்கப் போகிறவர்களுக்கான இணைப்புப் புள்ளி என்று சொல்லலாம். இன்றும் அவரது இசைப்பயணம் தொடர்ந்து வருகிறது.
வயது, அனுபவம், புகழ், வாழ்வு தந்த மகிழ்ச்சி, துக்கம் தாண்டியும் ஒரு கலைஞர் தொடர்ந்து பயணப்பட, அடுத்த தலைமுறையை ஆராதிக்கும் குணம் நிச்சயம் வேண்டும். அது சித்ராவிடம் நிறையவே இருக்கிறது. இன்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இளையோர்களோடு இணைந்து, பேசி, பழகி, பாடி மகிழும் சித்ராவினைக் காணும்போது, அவர்களின் பிரதிபலிப்பாக மாறியதாகவே எண்ணத் தோன்றுகிறது. அவரைப் புதுப்பித்துக் கொள்ளவும், அடிப்படை இயல்பு மாறாமல் வைத்திருக்கவும் அது போன்ற தருணங்கள் உதவும் என்ற காரணமும் அதன் பின்னிருக்கலாம். அதையும் தாண்டி, பத்து விரல்களையும் காற்றில் விரித்து, அடுத்த தலைமுறையின் கரங்களை இறுகப் பிடித்து, மேலே உயர்த்தும் குணத்தை நிச்சயம் பத்தோடு பதினொன்றாகக் கருத முடியாது.
போலவே, இது போன்ற மேடைகளில் சித்ராவைக் காணும் அனுபவமே அலாதியானது. வாய் திறந்து தான் எதிர்கொண்ட வாழ்வை அவர் வார்த்தைகளில் விவரிப்பதைவிட, மிக எளிதாக அவரோடு உரையாடிய திருப்தியை ஒவ்வொரு ரசிகருக்கும் தருவதுதான் அவற்றின் மாயாஜாலம். கூடவே, வீட்டிலிருக்கும் குழந்தைகள், பெரியோர்கள், ஆண்கள், பெண்கள் என்று பலரும் உற்சாகமாக இருக்கவும், நினைவலைகளை அசைத்துப் பார்க்கவும் அவர் தூண்டுதலாக இருந்து வருகிறார்.
தான் உட்கார்ந்திருக்கும் பீடத்தின் வழியாக, இதே போன்றதொரு இடத்தை நீங்களும் அடைய வேண்டுமென்ற உத்வேகத்தை இக்காலக் குழந்தைகளுக்கு ஊட்டுகிறார். அப்படிப்பட்ட பாட்டுக்குயிலுக்கு, இன்றோடு வயது 60 ஆகிவிட்டது என்பது நம்பமுடியாத உண்மை.
இந்த நாளில் அவர் பங்குபெற்ற படைப்புகளை கேட்டு, பார்த்து, ரசித்து, அவர் ஆற்றிய பணியை நினைவுகூர்வதும் மனதுக்குள் சிலாகிப்பதும் ஆகச்சிறந்த மரியாதையாக அமையும். வாருங்கள்! பாட்டுக்குயிலின் அறுபதாவது பிறந்தநாளை அமர்க்களமாகக் கொண்டாடுவோம்!
உதய் பாடகலிங்கம்
டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலை மீது கோபம்… அமித்ஷா நிகழ்வை புறக்கணிக்கும் எடப்பாடி
கருப்பு உடையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள்: 6வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்!