உதயசங்கரன் பாடகலிங்கம்
சீனு ராமசாமியின் இன்னொரு மெலோட்ராமா!
முதல் படமான கூடல் நகர் ஒரு ஆக்ஷன் படமாக இருந்தாலும், தொடர்ந்து தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன், கண்ணே கலைமானே ஆகியவற்றை பீல்குட் படங்களாகத் தந்திருந்தார் இயக்குனர் சீனு ராமசாமி. சோகமான நிகழ்வுகள், பாத்திர வார்ப்புகளை மீறி வாழ்வை அதன் இயல்போடு கொண்டாட வேண்டுமென்கிற பார்வை அவற்றில் தென்படுவதை நாம் காண முடியும்.
அந்த வரிசையில் இன்னொன்றாக இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது கோழிப்பண்ணை செல்லதுரை பட ட்ரெய்லர். ஏகன், பிரிகிடா சாகா, சத்யா தேவி, லியோ சிவகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படமானது குணசித்திர பாத்திரத்தில் யோகிபாபுவை இடம்பெற வைத்ததன் மூலமாக வித்தியாசத்தைத் தன்வசப்படுத்தியது.
அந்த வித்தியாசம் படத்திற்குப் பலமாக அமைந்திருக்கிறதா, பலவீனமாக இருக்கிறதா?
இன்னொரு பாசமலர்!
ராணுவ வீரர் விருமன் விடுமுறையையொட்டி வீடு திரும்புகிறார். வந்த இடத்தில், மனைவி இன்னொருவருடன் இருப்பதைக் கண்டு கொதிப்படைகிறார். இருவரையும் கொல்லத் துடிக்கிறார். ஆனால், அவரது பிடியில் இருந்து தப்பியோடும் இருவரும் அந்த ஊரை விட்டே செல்கின்றனர். அதையடுத்து, தனது மகன் செல்லதுரையையும் மகள் சுதா மகேஸ்வரியையும் மாமியார் வீட்டில் கொண்டுபோய் விடுகிறார் விருமன். அதன்பின், அவர் என்னவானார் என்று உறவினர்களுக்குக் கூடத் தெரியவில்லை.
பாட்டியின் பாதுகாப்பில் செல்லதுரையும் சுதாவும் வளர்கின்றனர். ஆனால், அவரோ திடீரென்று ஒருநாள் இறந்து போகிறார். அதன்பின்னர், அவர்கள் இருவருக்கும் பாதுகாவலராக இருக்கிறார் தூரத்து உறவினரான பெரியசாமி (யோகிபாபு). அவர், இருவருக்கும் பெரியப்பாவாக இருக்கிறார்.
வளர்ந்தபின்னர், பெரியசாமி நடத்தி வரும் கறிக்கடையில் கறி வெட்டுபவராக வேலை செய்து வருகிறார் செல்லதுரை (ஏகன்). அவரது தங்கை சுதா (சத்யா தேவி) கல்லூரியில் படிக்கிறார்.
சந்தையில் செல்லதுரை வேலை செய்யும் கடைக்கருகே மட்பாண்டக் கடையை நடத்தி வருகிறார் தாமரைச்செல்வி (பிரிகிடா சாகா). அவருக்கு செல்லதுரை என்றால் உயிர். ஆனால், அவரது காதலைக் கண்டுகொள்ளாமல் உயிருள்ள சிலையாக தனது வேலையில் மட்டும் கவனம் செலுத்துகிறார் செல்லதுரை.
தங்கைக்காகப் பல வேலைகள் செய்து சம்பாதிக்கும் செல்லதுரைக்குச் சில ஆசைகள் இருக்கின்றன. சொந்தமாக ஒரு வீடு, கோழிப்பண்ணை மற்றும் தங்கைக்கு ஒரு நல்ல வீட்டில் மண வாழ்க்கை என்பதைத் தவிர அவர் வேறெதையும் யோசிப்பதில்லை. அதேநேரத்தில், தனது தாய், தந்தை குறித்து எவர் பேசினாலும் செல்லதுரைக்குக் கோபம் வந்துவிடும். அதனைத் தனது வாழ்நாள் அவமானமாக அவர் கருதுகிறார்.
இந்த நிலையில், வீட்டின் அருகே தங்கையுடன் ஒரு இளைஞரைப் பார்த்ததும் ஆவேசமடைகிறார் செல்லதுரை. அந்த நபரின் பெயர் சௌந்தர் (லியோ சிவகுமார்). அவர், சுதாவைத் தீவிரமாக விரும்புகிறார்.
அதனை அறியாமல் அவரைக் கொலைவெறியோடு துரத்துகிறார் செல்லதுரை. அவரை எதுவும் செய்ய முடியாத கோபத்தில், தங்கையைத் தாய் செய்த செயலோடு ஒப்பிட்டுப் பேசிவிடுகிறார். அது சுதாவைக் காயப்படுத்துகிறது.
அதன் தொடர்ச்சியாக, தங்கைக்குத் திருமணம் செய்தால் போதும் என்று தனது கடமையை ஆற்றத் துடிக்கிறார் செல்லதுரை. நல்லதொரு குடும்பத்தில் அவர் வாழ்க்கைப்பட வேண்டாமா என்று தாமரை இடித்துரைத்தாலும், அவர் அதனை ஏற்பதாக இல்லை.
ஆனால், வாழ்வின் யதார்த்தம் செல்லதுரைக்கு உண்மையைப் புரிய வைக்கிறது. அந்த நேரத்தில் அவர் தனது தாயையும் தந்தையையும் தனித்தனியே சந்திக்க நேர்கிறது.
அதன்பிறகு என்னவானது? எந்தப் பெற்றோரால் தன்னைக் காதலிக்கும் பெண்ணையே செல்லதுரை துச்சமாகக் கருதினாரோ, அவர்களைச் சந்தித்தபிறகாவது அவரது அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டதா? இந்தக் கேள்விகளுக்கு மிக நிதானமாகப் பதிலளிக்கிறது இப்படம்.
பாசமலர் மாதிரி ஒரு அண்ணன் தங்கை என்று கோலிவுட்டில் பல இயக்குனர்கள் கதை சொல்லியிருப்பார்கள். அதனை இதில் மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறார் சீனு ராமசாமி. ஆனால், அந்த பாசத்தைத் தாண்டியும் பல விஷயங்கள் இக்கதையில் உள்ளடுக்குகளாகப் பொதிந்து கிடக்கின்றன. அவற்றைக் காணும்போது மனம் நெகிழ்வதே இப்படத்தின் சிறப்பு.
சீரியல் பார்த்த உணர்வு!
ஜோ படத்தில் வந்து போன ஏகன், இதில் வேறொரு ஆளாகத் தெரிகிறார். எந்நேரமும் சீரியசாக இருப்பது போன்ற பாத்திர வார்ப்பு எளிதாக ரசிகர்களைக் கவரும் என்பது உண்மை தான். ஆனால், அவரது நடிப்பு அந்த வார்ப்பினை இன்னும் இறுக்கமாக்கியிருக்கிறது.
பிரிகிடா சாகாவுக்கு இதில் நாயகி பாத்திரம். அழகாக, பாந்தமாக வந்து போயிருப்பதோடு, காட்சிகளுக்குத் தேவையான அளவுக்கு நடிக்கவும் செய்திருக்கிறார்.
யோகிபாபு இதில் ஆங்காங்கே காமெடி கவுண்ட்டர்கள் அடித்தாலும், இரண்டொரு காட்சிகளில் சீரியஸ் முகம் காட்டியிருக்கிறார். அது எடுபட்டிருக்கிறது என்பதுவே சிறப்பான விஷயம்.
ஏகனின் தங்கையாக வரும் சத்யா தேவி ஒப்பனையின்றித் தோன்றியிருக்கிறார். முகத்தில் எண்ணெய் பசை வடியக் காட்டியிருந்தால், இன்னும் கொஞ்சம் ஈர்ப்பினை ஏற்படுத்தியிருப்பார்.
இவர்களோடு லியோ சிவகுமார், ஐஸ்வர்யா தத்தா, பவா செல்லதுரை உள்ளிட்ட சிலர் இதில் இடம்பெற்றிருக்கின்றனர். ஏகனோடு வரும் உயரக் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளி கலைஞரின் கவுண்ட்டர்கள் சில காட்சிகளில் கைத்தட்டல்களைப் பெறுகின்றன.
மிக எளிமையான கேமிரா கோணங்கள், நகர்வுகள் என்று இதன் ஒளிப்பதிவைக் கையாண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அசோக்ராஜ். ஆனால், அவரது எளிமையான காட்சியாக்கம் சில இடங்களில் சீரியல் பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது.
கதாபாத்திரங்களின் செய்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன் பேர்வழி என்று காட்சியாக்கம் மெதுவாக நகர்வதால், படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் சில பல காட்சிகளை கட் பண்ணியிருக்கிறாரா என்று தெரியவில்லை. ஏனென்றால், சில பாத்திரங்களே மீண்டும் மீண்டும் திரையில் தோன்றுவதால் அந்தச் சந்தேகம் நம்முள் எழுகிறது.
கலை இயக்குனர் ஆர்.சரவண அபிராமன் உட்படச் சில தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒத்துழைப்பு, திரையில் தென்படும் உலகம் ஒரே அலைவரிசையில் இருப்பதை உறுதி செய்திருக்கிறது.
அசத்தும் இசை!
இசையமைப்பாளர் ரகுநந்தன் இதில் அற்புதமான ஐந்து பாடல்களைத் தந்திருக்கிறார். தேவதையைப் போல பாடல் திருநங்கைகளைக் கௌரவிக்கும் விதமாக ஒலிக்கிறது. அண்ணன் தங்கை பாசத்தைச் சொல்ல பொன்னான பொட்டப்புள்ள, ஏலே ஏலே பாடல்கள் இருக்கின்றன. காத்திருந்தேன் உனக்குதான் ஒரு அருமையான காதல் மெலடி. அனைத்துக்கும் மேலே கையேந்தி நிற்பான் கடவுளே பாடல் எவர்க்ரீன் பாடலாக கிளைமேக்ஸில் ஒலிக்கிறது.
இந்த ஐந்தையும் தாண்டி பின்னணி இசை வழியாகவும் நம்மை அசத்தியிருக்கிறார் ரகுநந்தன். அந்தக் காட்சிகளில், அவரது பங்களிப்பு நம் மனதை நெகிழ்ந்து குலைந்து போகச் செய்கிறது.
தமிழ் திரையுலகில் மக்களின் வாழ்வியல் அம்சங்களைக் கொண்டு கதை சொல்வதில் சில இயக்குனர்கள் முக்கிய இடம் வகிக்கின்றனர். அவர்களில் ஒருவராக விளங்கும் இயக்குனர் சீனு ராமசாமி, மனிதம்தான் இந்த உலகில் உயர்வானது என்பதைத் தனது படங்களின் அடிநாதமாகக் கொண்டிருக்கிறார். இப்படமும் அப்படிப்பட்டதே.
கள்ளத்தொடர்பால் மனைவி கொலை அல்லது கணவன் கொலை என்று செய்திகள் அடிக்கடி வெளியாகும் காலகட்டத்தில், அவர்களது குழந்தைகள் என்னவானார்கள் என்ற சிந்தனை பெரும்பாலானோர் மனதில் நிச்சயம் உருவாகியிருக்கும்.
ஆனால், அது குறித்த விவரணைகள் திரைப்படங்களில், தொலைக்காட்சித் தொடர்களில் இடம்பெற்றால், அவற்றைப் பார்க்க அதே பெரும்பாலானோர் தயாராக இருக்க மாட்டார்கள். காரணம், அந்த வாழ்வின் வேதனைகளையும் வலிகளையும் காண்பதில் இருக்கும் பயம் தான்.
தனது கதை சொல்லல் மூலமாக அத்தடைகளை உடைத்தெறிந்திருக்கிறார் சீனு ராமசாமி.
அதே நேரத்தில், இன்னும் சுவாரஸ்யமாகத் திரைக்கதையை அமைத்து, சில திருப்பங்களைச் சேர்த்து, பார்வையாளர்கள் பெறும் திரையனுபவத்தை வேறு மாதிரியாக மாற்றியிருக்கலாம். அது நிகழவில்லை என்பது சோகம் தரும் விஷயம்.
இந்த படத்தின் ஆகப்பெரிய ப்ளஸ், கிளைமேக்ஸ் பகுதியில் வரும் 20 நிமிடக் காட்சிகள். அவை நெகிழ்ச்சிமிக்க தருணங்களாக அமைந்து கண்ணில் நீரைப் பெருக்கெடுக்க வைக்கின்றன. நல்ல நடிப்பு, சிறப்பான காட்சியாக்கம் இருந்தால் மட்டுமே அது நிகழும்.
இது போதுமே என்பவர்கள் நிச்சயமாக கோழிப்பண்ணை செல்லதுரையைக் கொண்டாடுவார்கள்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: நீங்கள் உபயோகிக்கும் சோப் உங்களுக்கு ஏற்றதா?
ஹெல்த் டிப்ஸ்: உடல் எடையைக் குறைக்க உதவுவது… வாக்கிங்கா, ஜாகிங்கா?
உணவு, மதம், அரசியல்: திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்
டாப் 10 நியூஸ்: அனுர குமார திசாநாயக்க பதவியேற்பு முதல் ஐ.நா சபையில் மோடி உரை வரை!