கங்கை அமரன் என்பவர் யார்? சினிமா ரசிகர்களிடம் இந்த கேள்வியைக் கேட்டால், அவர்கள் பதில் சொல்லத் திணறுவார்கள்.
காரணம், திரையுலகில் ஒரு பன்முக ஆளுமையாக அவர் திகழ்ந்து வருவதுதான். அந்த அளவுக்குப் பாடலாசிரியர், கிடார் இசைக்கருவியாளர், பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர், இயக்குனர், கதாசிரியர், தயாரிப்பாளர் என்று பல முகங்கள் அவருக்கு உண்டு.
தான் எடுத்துக்கொண்ட பணிகள் அனைத்தையும் திறம்படச் செய்ததே, அவரை எப்படி அடையாளம் காண்பது என்ற தயக்கத்தை விதைக்கிறது. அதையும் மீறி, இயக்குனர் என்ற அந்தஸ்து மேலெழுவதற்கு அவர் தந்த வெற்றிப்படங்களின் எண்ணிக்கையே காரணம். அந்த வகையில், இயக்குனராக அறிமுகமான ‘கோழி கூவுது’ படத்திலேயே அவரது வெற்றிக்கணக்கு தொடங்கிவிட்டது.
வித்தியாசமான படம்!
’கோழி கூவுது’ படத்தில் இரு நாயகர்கள், இரு நாயகிகள். ஒரு நாயகனாக வரும் பிரபு, வேலுச்சாமி என்ற பாத்திரத்தில் நடித்திருப்பார். இன்னொரு நாயகனான சுரேஷ், ராமகிருஷ்ணன் என்ற தபால்காரர் பாத்திரத்தை ஏற்றிருப்பார்.
வேலுச்சாமி ஒரு முரட்டுப் பேர்வழி. அவரது சகோதரி தனது மகள் காமாட்சியை (விஜி) அவருக்குத் திருமணம் செய்துவைக்க விரும்புவார். ஊர்க்காரர்களும் உறவினர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.
அவர்களது எதிர்ப்பைத் தவிடுபொடியாக்குவதற்காக, வேலுச்சாமி ராணுவத்தில் சேருவார். அதேநேரத்தில், காமாட்சியோ ஊருக்குப் புதிதாக வந்திருக்கும் தபால்காரர் ராமகிருஷ்னனை விரும்புவார்.
ராணுவத்தில் இருந்து திரும்பும் வேலுச்சாமிக்கு ராமகிருஷ்ணன் – காமாட்சி காதல் பற்றித் தெரிய வந்ததா? அதன்பிறகு என்ன நடந்தது என்று ‘கோழி கூவுது’ கதை நகரும்.
உண்மையைச் சொன்னால், அந்தக் காலத்தில் வெளியான படங்களில் இருந்து இக்கதையின் போக்கு முற்றிலுமாக வேறுபட்டிருந்தது. ’இதெல்லாம் ஒரு கதையா’ என்று கமெண்ட் அடிக்கும் அளவுக்கே, இதன் கதை இருந்தது.
ஆனால், திரைக்கதையோ நம்மை இருக்கையை விட்டு எழவிடாமல் இறுகப் பிடிப்பதாக இருந்தது. அந்த நுட்பம் அக்காலத்தில் வெகுசில படங்களிலேயே இடம்பெற்றன. இதன்பிறகே, பிரபு இப்படியான பல திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
நிவாஸின் கலர்ஃபுல் ஒளிப்பதிவு, லெனின் தந்த நேர்த்தியான படத்தொகுப்பு என்று அனைத்தும் ஒன்றுசேர்ந்து, இப்படத்தைச் சிறப்பானதாக மாற்றின.
பழிக்குப் பழி, வேலையில்லாத் திண்டாட்டம், விளிம்பு நிலைக்கு இழுத்துச் செல்லும் வறுமை, வாழ்வுக்கான வழியைத் தவறச் செய்யும் காதல் என்று மனித வாழ்க்கையிலுள்ள மோசமான பக்கங்களைக் காட்டும் கதைகளே எண்பதுகளில் பெரிதும் வெளியாகின. கொலை, கொள்ளை, கற்பழிப்பு இல்லாத கதைகளே, இல்லாத படங்கள் கிடையாது என்றொரு நிலை நிலவியது.
அப்படியொரு சூழலில், பெரிதாக அறிமுகமில்லாத நடிகர் நடிகைகளைக் கொண்டு ஒரு மெல்லிய காதல் கதையைத் திரையில் சொல்லியிருந்தார் கங்கை அமரன். அது வெற்றியைச் சுவைக்கப் படம் முழுக்க இழையோடும் நகைச்சுவை, கொஞ்சமாக செண்டிமெண்ட், லேசுபாசான சண்டைக்காட்சிகள், அனைத்துக்கும் மேலாக ‘எவர்க்ரீன்’ ஹிட் பாடல்கள் ஆகியவற்றை நிறைத்திருந்தது இத்திரைப்படம்.
ஓஹோவென்ற புகழ்!
‘ஓரு படம் ஓஹோன்னு புகழ்’ என்ற வார்த்தைகளை ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் நாகேஷ் உதிர்த்திருப்பார். கிட்டத்தட்ட அப்படிப்பட்ட நிலைமை வெகுசிலருக்கே வாய்க்கும்.
அந்த வகையில், ‘கோழி கூவுது’ வெளியானபிறகு சுரேஷுக்கு காதல் பட வாய்ப்புகள் குவிந்தன. ‘சிவாஜியின் மகனா இது’ என்று சங்கிலியில் பார்த்து ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்தவர்களுக்கு, ‘தனக்கென்று தனி ரூட் இருக்குது’ என்று நிரூபித்தார் பிரபு.
மறைந்த நடிகை விஜி இளமைப்பொலிவுடன் தோற்றம் தந்து, இப்படத்தின் வழியே தனக்கென்று தனிக்கவனத்தை உருவாக்கினார். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார். ‘ஏதோ மோகம்’ பாடல் அவரை ரசிகர்களிடத்தில் புகழ் பெற வைத்தது.
‘அலைகள் ஓய்வதில்லை’க்குப் பிறகு குடும்பத்தோடு ரசிக்கும் படமொன்றில் தன்னை நாயகியாகக் காட்டும் ஒரு பாத்திரத்தை மறைந்த சில்க் ஸ்மிதா பெற்றிருந்தார். அவரைக் கண்ணியமாகவும் கவர்ச்சியாகவும் காட்டிய பாடல்களில் ’பூவே இளைய பூவே..’ மிக முக்கியமானது. பிரபு உடன் அவர் நடனமாடும் பாடல்கள் மிக அழகாகத் தெரியும். அதில், இப்படம் முக்கிய இடம் பிடிக்கிறது.
இவர்கள் தவிர்த்து பிந்துகோஷ், கரிக்கோல்ராஜ் உட்பட துணை பாத்திரங்களில் நடித்த பலரும் இப்படத்தின் மூலமாகப் புகழ் பெற்றனர். அந்த வகையில், ‘கோழி கூவுது’ வெற்றி பலருக்கு வாழ்வு தந்தது.
கங்கை அமரனின் பாணி!
சினிமா பாடல்களைப் பிரதியெடுக்கும் ‘மெல்லிசைக் கச்சேரிகள்’ போலத் தான் பார்த்து ரசித்த திரைப்படங்களுக்கு அர்ப்பணம் செய்யும் வகையில், தனது பாணியில் சில திரைக்கதைகளைத் தந்தார் கங்கை அமரன். ஆனால், இப்படத்தில் கிடைத்த பெரும்புகழ் அவரது பயணத்தைத் திசை மாற்றியது. ’கொக்கரக்கோ’, ‘பொழுது விடிஞ்சாச்சு’, ‘தேவி ஸ்ரீதேவி’, வெள்ளைப்புறா ஒன்று’ ஆகிய படங்களில் ’பரீட்சார்த்த முயற்சிகளை’ மேற்கொண்டு, அவர் தனது கையைச் சுட்டுக்கொண்டார்.
‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தின்போது தான், அவர் தனது பாணி எதுவென்று தெரிந்துகொண்டார். சிறுகதை போன்ற ஒரு கமர்ஷியல் கதையை எடுத்துக்கொண்டு, அதில் அனைத்து அம்சங்களையும் ஜனரஞ்சகமான முறையில் சொன்னாலே வெற்றி கிடைக்குமென்று புரிந்து கொண்டார். அவை கிராமியப் படங்களாகவோ அல்லது குறிப்பிட்ட பின்னணியை விவரிக்கும் கதையாகவோ இருக்க வேண்டுமென்று உணர்ந்தார். கூடவே, அவற்றில் தனது சகோதரர் இளையராஜாவின் இசைக்குத் தனியிடம் தர வேண்டும் என்பதைப் பாலபாடமாகக் கருதினார்.
அதன்பிறகு ராமராஜன், பிரபு, விஜயகாந்தை நாயகர்களாகக் கொண்டு பல வெற்றிப்படங்கள் தந்தார். ரஜினி, கமலை இயக்க வந்த வாய்ப்புகளைச் சில காரணங்களால் நழுவவிட்டார். தொண்ணூறுகளின் பின்பாதியில், தனது பாணி படங்களுக்கு இனி வரவேற்பு கிடைக்காது என்று கருதிப் படம் இயக்கும் எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
என்ன சொன்னாலும், எண்பதுகளில் புகழ்க்கொடி நாட்டிய இயக்குனர்களில் கங்கை அமரனுக்குத் தனியிடம் உண்டு என்பதை மறக்கவோ, மறுக்கவோ முடியாது.
தேடலுக்குரிய கலைஞர்!
இன்றும், தேடலுக்குரிய பாடலாசிரியராகத் திகழ்ந்து வருகிறார் கங்கை அமரன்; இசையமைப்பாளராகக் கொண்டாடப்படுகிறார். அவரது படங்களின் நகைச்சுவை ஒரு ‘ட்ரெண்ட் செட்டராக’ நோக்கப்படுகிறது. பொதுமேடைகளிலும், பாடல் கச்சேரிகளிலும் அவர் செய்யும் குறும்புகள் இன்றைய தலைமுறையாலும் ரசிக்கப்படுகின்றன. அந்த வகையில் வெங்கட்பிரபு மற்றும் பிரேம்ஜிக்கு முன்னோடியாகவே அவர் இருந்து வருகிறார்.
திரையுலகின் போக்கு குறித்தும், திரைப்பட ட்ரெண்ட் மாற்றம் பற்றியும் இன்றும் அவரிடம் விலாவாரியாகக் கேட்டறிய முடியும். அந்த அளவுக்கு சினிமா உலகத்தோடு ஒன்றி வாழ்ந்து வருகிறார்.
உண்மையைச் சொன்னால், கங்கை அமரன் பாணியிலேயே ‘மெலிதான கதையை’ வலிமையான திரைக்கதை அம்சங்களோடு திரையில் தரும் பாணியைப் பின்பற்றுகிறார் அவரது மகன் வெங்கட்பிரபு. தந்தை, மகன் இருவருமே உதவி இயக்குநர்களாகப் பணியாற்றியதில்லை என்பது இன்னொரு ஒற்றுமை.
வெங்கட்பிரபு படங்களில் பாடல்கள் எழுதுவதே, இன்றைய தலைமுறையைத் திருப்திப்படுத்தும் திறன் கங்கை அமரனுக்கு உண்டு என்பதை நிரூபிக்கிறது. இன்று அவருக்கு இருக்கும் புகழ் மங்காமல் நிலைத்திருப்பதற்கு, இயக்குனராக இருந்ததும் ஒரு காரணம். அந்த வகையில், அதற்கான தொடக்கமாக அமைந்த ‘கோழி கூவுது’ படத்தைக் கொண்டாடுவது சாலப்பொருத்தம்!
இன்றோடு ’கோழி கூவுது’ வெளியாகி 41 ஆண்டுகள் ஆகிறது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அப்படத்தை ரசிக்க முடியும் என்பதே கங்கை அமரன் தந்திருப்பது ‘எவர்க்ரீன் கிளாசிக்’ என்பதற்கான அடையாளம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதய் பாடகலிங்கம்
ஹாட்ரிக் தோல்விகள்: பீனிக்ஸ் பறவை போல மீண்டெழுமா தமிழ் தலைவாஸ்?
சாதி இல்லை எனும் பொய்மை ஒழியட்டும்! நேரடி கள ஆய்வுத் தொடர் – பாகம் 1!