திரையரங்குகளில் இன்று (ஜூலை 5) வெளியாகவிருந்த `கவுண்டம்பாளையம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குநரும், நடிகருமான ரஞ்சித் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஞ்சித் இயக்கி, நடித்துள்ள கவுண்டம்பாளையம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால் படத்திற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் நேற்று புகார் மனு அளித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் ரஞ்சித் பேசுகையில், “நான் இயக்கி, நடித்துள்ள கவுண்டம்பாளையம் படம் நாளை (இன்று) ரிலீஸ் ஆகாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். இதனால் படம் வெளியாவது தள்ளிவைக்கப்படுகிறது.
இந்தப் பட வெளியீட்டில் உள்ள பிரச்சனைகளை சென்னை சென்று தமிழக முதல்வர், செய்தித் துறைஅமைச்சர் மற்றும் டிஜிபியை சந்தித்து முறையிட உள்ளேன்.
இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என்பதில் பலர் முனைப்புடன் செயல்படுகின்றனர். திரையரங்க உரிமையாளர்களை மிரட்டி, படத்தை திரையிட விடாமல் தடுக்கின்றனர். அவர்களின் அச்சத்தை புரிந்துகொண்டு பட ரிலீஸை தள்ளி வைத்துள்ளேன்.
கவுண்டம்பாளையம் படத்திற்கு பல இடங்களில் இருந்து எதிர்ப்பு வருகிறது. யார் எதிர்க்கிறார்கள் என்பதை சொல்ல விரும்பவில்லை. நான் தவறான நோக்கத்துடன் எதுவும் படம் எடுக்கவில்லை. நாடக காதல் குறித்து எடுத்த இத்திரைப்படம் சென்சார் சான்றிதழ் வாங்கியும், படத்தை வெளியிட முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது.
ஒரு படம் எடுப்பது எவ்வளவு சிரமம் என்று எனக்கு தெரியும். என் படத்தின் தயாரிப்பாளர்கள் அனைவரும் சாதாரண விவசாயிகள்தான். கோடீஸ்வரர்கள் கிடையாது.
நான் பிறந்த மண்ணில் எடுத்த திரைப்படம் வெளியாகாதது மிகுந்த வருத்தம், வேதனையை அளிக்கிறது. இந்தப் படத்தின் வெற்றிதான், என்னை எதிர்ப்பவர்களுக்கு நான் சொல்லும் பதிலாக இருக்கும். விரைவில் படம் நிச்சயம் வெளியாகும்” என ரஞ்சித் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
எனக்கு திருமணமா? – ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நிவேதா தாமஸ்
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க கல்வித்துறை அழைப்பு : முழு விவரம்!