Kotukkali collection: Aamir indirectly insulted Sivakarthikeyan

கொட்டுக்காளி வசூல்… சிவகார்த்திகேயனை மறைமுகமாக சாடிய அமீர்

சினிமா

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி, மலையாள நடிகை அன்ன பென் நடிப்பில் வினோத் இயக்கியுள்ள கொட்டுக்காளி மற்றும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சிறுவர்களான பொன்வேல் மற்றும் சேகர், கலையரசன், திவ்யா துரைசாமி, மலையாள நடிகை நிகிலா விமல் இணைந்து நடித்துள்ள வாழை படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இரண்டு படங்களும் திரை கலைஞர்கள்,, இயக்குநர்கள் என அனைவருக்கும் வெளியீட்டுக்கு முன்பாக சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இரண்டு படங்கள் பற்றியும் திரையுலகினர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

கொட்டுக்காளி படத்தை நடிகர் கமல்ஹாசன் விமர்சனம் செய்து நீண்ட கடிதம் ஒன்றை வெளியிட, அதே போன்று இயக்குநர் பாலாவும் பாராட்டு கடிதம் ஒன்றை வெளியிட்டார். இதனால் கொட்டுக்காளி படத்திற்கு வணிக படங்களுக்கு இணையாக முன்பதிவு இருந்ததுடன் முதல் மூன்று நாட்களில் சுமார் 1.50 கோடி ரூபாய் மொத்த வசூல் தமிழ்நாட்டில் செய்துள்ளது கொட்டுக்காளி திரைப்படம்.

இதனை அபூர்வ நிகழ்வாகவே திரையரங்கம், வணிக வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் கொட்டுக்காளி படத்தை திரையரங்கில் வெளியிட்டு இருக்க கூடாது என கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் இயக்குநர் அமீர்.

சென்னையில் நேற்று மாலை திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த இயக்குநர் அமீர் செய்தியாளர்களிடம் பேசுகிறபோது. “ஒரு திரைப்படம் என்பது பார்ப்பவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம், பல வேதனைகளை அனுபவித்தோம் என்று சொல்வதால் மட்டும் பார்வையாளர்களுக்கு தாக்கத்தை கடத்தி விடாது. அந்த திரைப்படம் அதை கடத்தியதா என்பதுதான் மிகவும் முக்கியம்.

நம் அனைவருக்குமே வாச்சாத்தி சம்பவம் குறித்து தெரியும். 18 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட ஒரு கொடுமை அது. அதை மையப்படுத்தி ஒரு படம் வந்தது. ஆனால் அந்தப் படத்தை உட்கார்ந்து பார்க்க முடியாது. போரடிக்கும். அந்த வலியை நம்மால் உணரவே முடியாது.

’ வெகுஜன சினிமாவுக்கு பக்கத்தில் இருப்பதால் தான் வாழை திரைப்படம் இவ்வளவு வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், கொட்டுக்காளி ஒரு ஃபெஸ்டிவல் திரைப்படம். அது வெகுஜன படம் கிடையாது. அதற்காக அது நல்ல படம் இல்லை என்று சொல்லவில்லை. ஒரு திரைப்படவிழா மனநிலைக்காக தயாரிக்கப்பட்ட ஒரு படத்தை, பல சர்வதேச விருதுகளை பெற்ற ஒரு படத்தை, இங்கே கொண்டு வந்து ஒரு வெகுஜன சினிமாவுடன் போட்டிப் போட வைப்பதே ஒரு வன்முறைதான். அது எனக்கு ஏற்புடையதாக இல்லை.

அப்படி செய்யும்போது பல சர்வதேச விருதுகள் வென்ற ஒரு இயக்குநரை, இங்கே 150 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்து படம் பார்த்தவர்கள் ‘என்னங்க.. படமா எடுத்து வச்சிருக்காங்க?’ என்று திட்டுவதை பார்க்கமுடிகிறது.

என்னை பொறுத்தவரை இந்த படத்தை நான் தயாரித்திருந்தால், நான் இதை தியேட்டருக்கே கொண்டு வந்திருக்க மாட்டேன். அதை வணிக நோக்கத்தில் கொண்டு வந்து திணிக்க வேண்டிய அவசியம் இல்லை.

படத்தின் தயாரிப்பாளர் ஒரு பிரபல நடிகராக இருக்கிறார். தன்னுடைய செல்வாக்கை வைத்து ஏதேனும் ஒரு ஓடிடி தளத்தில் அப்படத்தை விற்றிருக்க வேண்டும்” என அமீர் மறைமுகமாக சிவகார்த்திகேயனை விமர்சித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இராமானுஜம்

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘லப்பர் பந்து’ : ரிலீஸ் எப்போ தெரியுமா?

அமெரிக்காவில் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் என்னென்ன?

+1
0
+1
1
+1
0
+1
5
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *