கூழாங்கல் – விமர்சனம்!

Published On:

| By Monisha

kuzhangal movie review

உள்ளூரில் இருந்து படிப்படியாகப் புகழ் பெற்று வெளிநாட்டுக்குச் செல்வது ஒருவகை என்றால், வெளிநாடுகளில் பரவலாகப் பாராட்டுகளைக் குவித்துவிட்டு ஊர் திரும்புவது இன்னொரு வகை. தெரிந்தோ தெரியாமலோ அப்படியொரு நிலைமைக்கு ஆளாகியிருக்கிறது ‘கூழாங்கல்’ படக்குழு. இரண்டாண்டுகளுக்கு முன்பே வெளியாகியிருக்க வேண்டிய இத்திரைப்படம், தற்போது ‘சோனி லைவ்’ தளத்தில் காணக் கிடைக்கிறது.

விருதுகளைக் குறிவைத்து எடுக்கப்பட்ட படம் என்பது ’கூழாங்கல்’ ட்ரெய்லரிலேயே தெரிந்து விடுகிறது. அதனைத் தாண்டி, சாதாரண ரசிகர்களை இப்படம் நெகிழ வைக்கிறதா?

ரொம்பவே சிறிய கதை

கணவனோடு ஏற்பட்ட தகராறில், மூன்று வயதான பெண் குழந்தையைத் தூக்கிக்கொண்டு பிறந்த வீட்டுக்குச் செல்கிறார் மனைவி. அவரை வீட்டுக்கு அழைத்து வருவதற்காக, பள்ளி சென்றுள்ள தனது மகனையும் துணைக்குக் கூட்டிப் போகிறார் கணவர்.

kuzhangal movie review

அங்கே சென்று பார்த்தால், அப்பெண் ஏற்கனவே கணவர் வீட்டுக்குச் சென்றது தெரிய வருகிறது. அதற்குள் மாமியார், மச்சினன், அவரது மனைவி என்று அங்கிருப்பவர்களுடன் வசவு வார்த்தைகள் பரிமாறி சண்டையில் இறங்குகிறார் அந்த நபர்.

ஒருவழியாகச் சமாதானமாகி மீண்டும் ஊர் திரும்ப எத்தனிக்கையில், தந்தை கொடுத்த ரூபாய் நோட்டுகளைக் கிழித்தெறிந்துவிட்டு ஓடத் தொடங்குகிறான் மகன். தூரத்தே தெரியும் மலைக்குன்றுகளைப் பார்த்து மலைத்தவாறே, மண்டையைப் பிளக்கும் வெயிலைப் பொருட்படுத்தாமல் பொட்டல் வெளியில் அவனைத் துரத்துகிறார் அந்த தந்தை.

ஓரிடத்தில் மௌனமாக நிற்கும் மகனை அடி வெளுத்தெடுக்கிறார். ‘வீட்டுக்குப் போனதும், உங்க அம்மாவையும் உன்னையும் கொல்லப் போறேன்’ என்று கருவியவாறே கிழிந்த சட்டையைத் தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டு நடக்கிறார்.

வழியில் தென்படும் தனது ஆசிரியையுடன் டிவிஎஸ்50யில் ஏறிச் செல்கிறான் மகன். அது அந்த தந்தையை இன்னும் ஆத்திரப்படுத்துகிறது. ஆனால், ஊர் செல்லாமல் பாதி வழியிலேயே இறங்கிக் கொள்கிறான். அங்கிருக்கும் பாறையொன்றில் ஏதோ ஒரு பெயரைச் செதுக்குகிறான். இந்த முறையும் அவனை அடி பின்னியெடுக்கிறார் தந்தை.

வீட்டிற்குச் சென்றால், மகளைத் தூங்க வைத்துவிட்டு தண்ணீர் எடுக்கச் சென்றிருக்கிறார் மனைவி. போதை இறங்கி பசியின் வெம்மை தாங்க முடியாமல் தட்டில் சோற்றைக் கொட்டித் தின்கிறார் அந்த மனிதர். அவரைப் பார்த்தவாறே உள்ளே செல்லும் மகன், தூக்கத்தில் இருந்து விழித்த தங்கையுடன் விளையாடத் தொடங்குகிறான்.

அத்தனையையும் உள்வாங்கிக் கொண்ட நாம், அந்த பெண் யார் என்று பார்க்கத் துடிக்கிறோம். வற்றிப்போன ஆற்றில் பள்ளம் தோண்டி ஊற்று நீரை மொண்டு செல்லக் காத்திருக்கும் கூட்டத்தில் ஒருவராக அந்த பெண்ணும் காத்திருக்கிறார் என்பதோடு படம் முடிவடைகிறது.

’கூழாங்கல்’ திரைக்கதையானது, பள்ளியில் இருக்கும் மகனை அழைத்துக்கொண்டு அந்த தந்தை கிளம்புவதில் இருந்தே தொடங்குகிறது. அதனால், அந்தப் பெண் எங்கே என்பதற்கான பதில் பாதிப்படத்திற்கு பிறகே நமக்குத் தெரிய வருகிறது.

ஒவ்வொரு காட்சியையும் ‘இன்ச் பை இன்ச்’ சொன்ன பிறகும், இந்தப் படத்தில் நாம் உணர்ந்து சிலாகிப்பதற்குப் பல விஷயங்கள் இருக்கின்றன. சொல்லப் போனால், பல இடங்களில் ஒரே விஷயத்தை நீட்டி முழக்குவது நம்மை அயர்வுற வைக்கிறது. அதையும் தாண்டி, வறண்ட நிலத்திலுள்ள மனிதர்களின் பல்லாண்டு கால வாழ்வைச் சுருக்கமாகச் சொல்லிய வகையில் நம்மை அசத்துகிறது ‘கூழாங்கல்’. ஆதலால், பொறுமையைக் கைக்கொண்டால் நமக்கு அற்புதமான அனுபவம் கிடைப்பது நிச்சயம்.

எத்தனை மனிதர்கள்?

இந்த படத்தில் வேலு என்ற பாத்திரத்தில் சிறுவன் செல்லபாண்டியும், அவரது தந்தை கணபதியாக கருத்தடையானும் நடித்துள்ளனர்.

kuzhangal movie review

சிறுவனின் அம்மா வழிப் பாட்டி, தாய்மாமன், அவரது மனைவி என்று ஒரு குடும்பம் காட்டப்படுகிறது. கணபதியின் தாயாக ஒரு மூதாட்டி வந்து போகிறார்.

கதையில் முதன்மை வகிக்கும் இவ்விரு குடும்பத்தினரைத் தவிர்த்து, எத்தனையோ மனிதர்கள் திரையில் முகம் காட்டியிருக்கின்றனர்.

அப்பெண்ணின் தாய் வீட்டருகே, இரண்டு பெண்கள் சந்தைக்குக் கிளம்பிச் செல்வார்கள். ஒரு நபர் முள் மரத்தை வெட்டி அடுக்கிக் கொண்டிருப்பார். வீட்டில் இருக்கும் நாத்தனாரோ, இடுப்பில் குழந்தையைப் பிடித்தவாறே கணவனையும் மாமியாரையும் பற்றிப் புலம்பிக் கொண்டிருப்பார்.

வழியில் ஒரு கிழவன், கிழவி, நடுத்தர வயதுப் பெண், ஒரு சிறுமி என்று நான்கு பேர், எலி வேட்டையில் ஈடுபடுவார்கள். வறண்ட நிலத்தில் பொந்து அமைத்து வாழும் எலிகளைப் புகையிட்டுப் பிடித்து, நெருப்பில் வாட்டுவார்கள். பீடி பற்ற வைப்பதற்காக, அவர்கள் மூட்டிய நெருப்பைப் பயன்படுத்துவார் அவ்வழியாக செல்லும் தந்தை.

அப்போது, காற்றாடி போலிருக்கும் காய்ந்த முட்மர காய்களை அவரது மகனிடம் கொடுக்கும் அந்தச் சிறுமி பாத்திரம். ‘வேண்டாம்’ என்று அவன் மறுத்ததும், பாவாடையில் நிறைத்து வைத்திருக்கும் காய்களைக் காற்றில் சிதறவிடும். அந்தச் சிறுமியின் பின்னிருக்கும் வெளியெங்கும் காற்றாடி போல சுழன்றவாறே அக்காய்கள் கீழே விழும். கவித்துவமான காட்சி அது.

மினிபஸ்ஸில் இருக்கும் பயணிகள் வழியாகவும் பல கதைகளைச் சூசகமாகச் சொல்லியிருப்பார் இயக்குனர்.

கோயிலுக்குச் சென்று முடி காணிக்கை செலுத்திவிட்டுத் திரும்பும் குடும்பம், சீர்வரிசைக்குப் பாத்திரங்கள், விளக்கு வாங்கிக்கொண்டு ஊர் திரும்புவோர், அசந்து தூங்கும் நடுத்தர வயது ஆண், கைக்குழந்தையோடு பயணிக்கும் ஒரு பெண் என்று அந்தக் நிலத்தின் வெவ்வேறு மனிதர்கள் நமக்குத் தெரிவார்கள்.

சிறுவனின் தந்தைக்கும் தூங்கும் நபருக்கும் இடையே மோதல் ஏற்பட், பச்சிளங் குழந்தை கண் விழித்து அழும். உடனே, பாதி வழியில் இறங்கும் அந்த இளம்பெண், ஒரு முட்மரத்தினடியில் அமர்ந்து பால் கொடுப்பார். அப்போது, அவரது முகத்தில் தன்னைச் சுற்றியிருக்கும் மனிதர்கள் மீதான ரௌத்திரம் பொங்கி வழியும்.

சில காட்சிகளுக்குப் பிறகு, பொட்டல் வழியில் நடந்து வரும் தந்தை கொலுசு சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்ப்பார். அவரையே திரும்பிப் பார்த்தவாறே செல்லும்போது, கல் இடறி அவரது கால் நகம் இரண்டாகக் கிழியும். அடுத்த நொடியே, அந்தப் பெண் மாயமாக மறைந்து போனார் என்பதை உணர்வார். வந்தது மினிபஸ்ஸில் பார்த்த அதே பெண்ணா? அவர் எப்படி மாயமானார்? அது அமானுஷ்யமா என்ற எந்தக் கேள்விக்கும் இயக்குனர் பதில் சொல்லியிருக்க மாட்டார்.

அதே மினிபஸ்ஸில் தண்ணீர் குடங்களைச் சுமந்துகொண்டு ஒரு பெண் ஏறுவார். இன்றைய யுகத்தின் பிரதிநிதிகளாக மொபைல், ஹெட்செட் சகிதம் இருக்கும் இரு கல்லூரி மாணவர்களில் ஒருவர், அவரது குடங்களை பஸ்ஸில் ஏற்ற உதவுவார்.

இந்த பாத்திரங்கள் அனைத்தையும் ஒரு கோட்டில் அடுக்கினால், ஒரு சராசரிக் குடும்பத்தின் வாழ்க்கையில் நிகழும் பல்வேறு சம்பவங்கள் நமக்குக் காணக் கிடைக்கும். போலவே, அந்நிலத்தில் இருக்கும் சமூகப் பிரச்சனைகளும் தெரிய வரும்.

சாலை குண்டும் குழியுமாக இருக்கிறது என்பது குடத்திலிருக்கும் நீர் துளிகள் அதிர்வில் இருந்து புரிய வரும். படம் முழுக்கக் காட்டப்பட்டிருக்கும் காலி குடங்கள் அப்பகுதி மக்கள் தண்ணீருக்காக அல்லாடுகின்றனர் என்பதைச் சொல்லும். அது மட்டுமல்லாமல், பெண்களே அப்பிரச்சனைகளால் அதிகமும் பாதிக்கப்படுகின்றனர் என்பதாகப் படத்தின் முடிவும் அமைக்கப்பட்டிருக்கும்.

பாழடைந்த கல் மண்டப வெளியினுள் தூங்கிக்கொண்டும், விட்டத்தை வெறித்துக்கொண்டும், சீட்டாடிக் கொண்டும் இருக்கும் ஆண்கள் கூட்டத்தின் வழியே, அந்நிலத்தில் இருக்கும் ஆண் மகனது இலக்கணங்கள் உணர்த்தப்படும்.

அபாரமான காட்சியாக்கம்

இந்த படத்தில் எந்த அளவுக்குக் கதாபாத்திரங்களின் குளோஸ் அப் ஷாட்கள் இருக்கின்றனவோ, அதற்கு ஈடாக அவர்கள் வாழும் வறண்ட நிலப்பகுதியும் அதீத லாங் ஷாட்களில் காட்டப்பட்டுள்ளது. அந்த நிலத்தில் பூக்கும் செடிகளையும் பூக்களையும் போலவே, அவர்களது வாழ்விலும் அரிதாக பசுமை தென்படுவது அதன் வழியே நமக்கு உணர்த்தப்படுகிறது.

விக்னேஷ் குமுலை மற்றும் ஜெய பார்த்திபனின் ஒளிப்பதிவு, அம்மண்ணின் அழகியலோடு சேர்த்து கதையின் வீரியத்தையும் நமக்குக் கடத்துகிறது. பருந்து பார்வையில் மேலிருந்து கீழாகக் காட்டப்படும் ஷாட்கள் ஓரிடத்தில் நிலை கொண்டிருப்பது, அதில் விஎஃப்எக்ஸின் பங்கு எவ்வளவு என்ற கேள்வியை எழுப்புகிறது.

இயக்குனர் வடித்த நீளமான ஷாட்களை இணைத்து, அவர் காட்ட விரும்பிய உலகை நம்முன் வைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் கணேஷ் சிவா.

யுவன்சங்கர் ராஜாவின் பின்னணி இசை, பல இடங்களில் மௌனம் சாதித்திருக்கிறது. மிகச்சில இடங்களில் அது ஒலிக்கிறது என்பதையே மறந்துவிடும் அளவுக்கு, காட்சியின் தன்மையோடு இயைந்திருக்கிறது.

மினிபஸ் பயணம், எலியைச் சுடும் இடம் என்று வெகுசில பகுதிகளில் ஆச்சர்யத்தை அதிகப்படுத்துகிறது கலை இயக்குனர்கள் நஜன் ஊட் – சிஞ்ஜு இணை.

துல்லியமான ஒளிப்பதிவைப் போன்றே ஒலிப்பதிவும் மிகநேர்த்தியாக, தெளிவாக நம்மை வந்தடைகிறது. எலியைக் காட்டுமிடங்களில் விஎஃப்எக்ஸ் பயன்படுத்தப்பட்டிருந்தால், அதன் நேர்த்தியை நாம் நிச்சயம் வியக்கத்தான் வேண்டும். இது தவிர்த்து, இயக்குனர் முன்வைக்கும் உலகைச் சிலாகிக்க இன்னும் சில அம்சங்கள் மிச்சமிருக்கின்றன.

இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் தான் வாழ்ந்த நிலத்தை இன்னும் பெரிதாகக் காட்ட வேண்டுமென்ற நோக்கில், ‘கூழாங்கல்’ கதைக்களத்தைப் படைத்திருக்கிறார். அவரது அபாரமான காட்சியாக்கமும் மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தரும் எழுத்தாக்கமுமே இப்படத்தின் மாபெரும் பலம்.

படத்தின் தொடக்கத்தில், தந்தை மது வாங்கும் பெட்டிக்கடையில் தனது பேக்கை வைப்பான் சிறுவன். தந்தையுடன் வீடு திரும்புகையில், அந்த பேக் வீட்டிலிருப்பதைப் பார்ப்பான். அதை எடுத்து வந்தது தனது தாய் தான் என்பதை உணர்வான். இவ்விரண்டு சம்பவங்களுக்கும் நடுவே, வெக்கை நிரம்பிய அவனது பெற்றோரது வாழ்வும், அதில் அரிதாகப் பூக்கும் குளிர்மையும் நமக்குப் பிடிபடும்.

தான் வரும் வழியிலுள்ள பாறையொன்றில் அச்சிறுவன் தாய், தங்கை, தன் பெயரை அடுத்து தந்தையின் பெயரைக் கிறுக்குவதன் மூலமாக, அது முன்கூட்டியே உணர்த்தப்படும்.

மெல்ல யோசித்துப் பார்த்தால், இது போன்ற பல அற்புதங்கள் இப்படத்தில் நமக்குக் கிடைக்கலாம். அந்த வகையில், ஒரு எளிமையான கதையைத் திரும்பத் திரும்பப் பார்க்கத் தூண்டும் திரைமொழியுடன் தந்த இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் மற்றும் ‘கூழாங்கல்’ படக்குழுவை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உதய் பாடகலிங்கம்

ஆட்சிக்கு மிரட்டல்… -ஸ்டாலின் கூறிய ஃபிளாஷ்பேக்!

‘தங்கலான்’ டீசர்: ரத்தமாக தெறிக்கும் தங்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel