கொன்றால் பாவம் – மனிதம் தின்னும் வேட்கை! விமர்சனம்

Published On:

| By Selvam

பாத்திரங்கள், காட்சி நிகழுமிடங்கள், திரைக்கதை சொல்லப்படும் காலம் என்று எல்லாமே மிகச்சிறியனவாக இருக்கும்போது, ஒரு திரைப்படமும் மிகச்சிறியதாகவே மாறும். ஆனால், அதில் மனித உணர்வுகளுக்கிடையேயான போராட்டம் இடம்பெறும்போது அதன் உள்ளடக்கம் விஸ்வரூபமெடுக்கும்.

2018 இல் கன்னடத்தில் வெளியான ‘ஆ கரால ராத்திரி’ அப்படியொரு படைப்பாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தெலுங்கில் ‘அனகனகா ஓ அதிதி’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு ஓடிடியில் வெளியானது. தற்போது, அதன் தமிழ் பதிப்பு ‘கொன்றால் பாவம்’ என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது.

கன்னடத்திலும் தெலுங்கிலும் இயக்கிய தயாள் பத்மநாபன் தான் தமிழிலும் இப்படத்தை இயக்கியிருக்கிறார். வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், ஈஸ்வரி ராவ், சார்லி, சென்றாயன் உட்பட ஒரு டஜனுக்கும் மேற்பட்ட நடிப்புக்கலைஞர்கள் இதில் நடித்துள்ளனர்.

மெலிதான கதை!

ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு வீடு. அதில் மல்லிகா (வரலட்சுமி) என்ற இளம்பெண்ணும் அவரது தாய் தந்தையரும் (ஈஸ்வரி ராவ் – சார்லி) வசித்து வருகின்றனர்.

ஒருநாள் காலையில் அந்த வீட்டுக்கு ஒரு கணியன் (ஜெயக்குமார்) வருகிறார். ‘மகாலட்சுமி வீட்டுக்கு வரப்போறா’ என்று அருள்வாக்கு சொல்கிறார். ஆனால், வறுமையில் உழன்று விரக்தி மட்டுமே மிஞ்சியிருக்கும் மூவரும் அந்த மனிதரைக் கிண்டல் செய்கின்றனர். ‘வரத்தை சாபமா ஆக்கிடாதீங்க’ என்று சொல்லும் அவரை அவமானப்படுத்தி விரட்டியடிக்கின்றனர்.

அவர்களது வீட்டுக்கு அர்ஜுனன் (சந்தோஷ் பிரதாப்) என்ற அந்நிய மனிதர் வருகிறார். பக்கத்து ஊருக்குச் செல்ல வேண்டுமெனவும், அந்திப்பொழுதாகிவிட்டதால் இங்கேயே தங்கலாமா எனவும் அவர்களிடம் கேட்கிறார். அவர்களும் அனுமதிக்கின்றனர். சில மணி நேரங்களிலேயே, அந்த குடும்பத்தில் ஒருவர் என்பது போல அர்ஜுனன் நடந்துகொள்கிறார். தன்னிடம் இருக்கும் பணத்தையும் நகையையும் காட்டுகிறார் அர்ஜுனன்.

ஆண்களை எல்லாம் அசட்டையாக நடத்தும் மல்லிகா, மெல்ல அர்ஜுனன் மீது ஈர்ப்பு கொள்கிறார். அது தெரியவரும்போது, அர்ஜுனன் அவரை வன்மையாகக் கண்டிக்கிறார். அதன்பிறகு, அர்ஜுனனுக்கு மல்லிகா மீது இரக்கம் கூடுகிறது; விருப்பே வெறுப்பாக மாறிய மனநிலையில், அந்தப் பணமும் நகையும் கிடைத்தால் தன் வாழ்வே தலைகீழாக மாறும் என்று எண்ணுகிறார் மல்லிகா.

அர்ஜுனனைக் கொலை செய்து பணம், நகையை அபகரிக்க மல்லிகா விரும்புகிறார். மல்லிகாவின் பெற்றோர் அதற்குச் சம்மதித்தார்களா? அந்நியரான அர்ஜுனன் அந்தக் குடும்பத்தினர் மீது பாசம் காட்டக் காரணம் என்ன? இறுதியில் அர்ஜுனன் என்னவானார் என்பது போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘கொன்றால் பாவம்’.

மிக மெலிதான கதை என்றபோதும், அடுத்தடுத்த காட்சிகள் ஒரு நல்ல த்ரில்லரை பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகின்றன.

நேர்த்தியான பாத்திர வார்ப்பு

ஏற்கனவே இரு மொழிகளில் இயக்கிய தயாள் பத்மநாபனின் அனுபவம், இதிலுள்ள பாத்திரங்களை நேர்த்தியாக வார்க்கத் துணை புரிந்திருக்கிறது.

உடலையும் மனதையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் வாலிபனாக வருகிறார் சந்தோஷ் பிரதாப். அவரது பிட்னெஸ், அந்த பாத்திரம் சந்திக்கும் எதிர்வினைகளை நியாயப்படுத்துகிறது. அதிகமான புன்னகை மட்டுமல்லாமல், சின்ன புருவ உயர்த்தல் கூட தவறான அர்த்தத்தை உருவாக்கிவிடும் என்பதில் கவனமாக இருந்திருக்கிறார்.

வாய்த்துடுக்கான முதிர்கன்னி தோற்றத்திற்கு நியாயம் செய்திருக்கிறார் வரலட்சுமி. படத்தின் மையத்தூண் என்றே அவரைச் சொல்லலாம்.

மனம் தளர்ந்துபோனாலும், உடலுழைப்பில் ஆர்வம் காட்டும் சாமான்ய மனிதராக நடித்துள்ளார் சார்லி. ஆளரவமற்ற இடத்தில் மனைவியோடு மகளோடும் வாழ்பவராகக் காட்டும்போது நாம் துணுக்குறாத அளவுக்கு அவரது நடிப்பு சிறப்பாக அமைந்திருக்கிறது.  

கிளைமேக்ஸ் காட்சியில் நம்மை அழ வைத்துவிடுகிறது தாயாக வரும் ஈஸ்வரிராவின் நடிப்பு.

இவர்கள் நால்வரைத் தாண்டி பார்வைக்குறைபாடு உடையவராக சென்றாயன், போலீஸ் கான்ஸ்டபிள்களாக கவிதா பாரதி, தங்கதுரை, சாராயக்கடை முதலாளியாக சுப்பிரமணியம் சிவா, கணியானாக ஜெயக்குமார், சாமியாராக மனோபாலா, மளிகைக்கடை அண்ணாச்சியாக மீசை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஒரே இடம், நான்கே பாத்திரங்கள் என்று பெரும்பாலான காட்சிகள் நகர்வதால் ‘படமா சீரியலா’ என்ற கிண்டல் எளிதாக எழலாம். அதனைத் தவிடுபொடியாக்கும்விதமாக ஒவ்வொரு பிரேமிலும் அழகு கூட்டியிருக்கிறது செழியனின் ஒளிப்பதிவு.

ஏற்கனவே ஒரு முன்மாதிரி இருக்கும் காரணத்தால், எளிதாக அமைந்திருக்கிறது ப்ரீதி மோகனின் படத்தொகுப்பு.

சாம் சிஎஸ்ஸின் பின்னணி இசை பல இடங்களில் மௌனம் காத்திருப்பது அழகு. இடைவேளையின்போதும் கிளைமேக்ஸிலும் காட்சியின் உக்கிரத்தைக் காட்ட அவரது இசையே பெரிதும் உதவியிருக்கிறது.

இயக்குனர் தயாள் பத்மநாபன் தனது திரையாக்கத்தைத் தமிழுக்குத் தகுந்தவாறு கொஞ்சம் மாற்றியிருக்கிறார். அதனால் கதாபாத்திரங்களின் உடல்மொழியில், அவற்றின் உணர்வுகளால் ரசிகர்கள் மனதுக்குள் உருவாகும் உள்ளடக்கில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

ஒரு படைப்பாளியாக, தமிழில் அவருக்கு நல்லதொரு அறிமுகமாகவும் அமைந்திருக்கிறது ‘கொன்றால் பாவம்’.

ஒரேயொரு திருப்பம்!

மொத்தக் கதையும் கிளைமேக்ஸில் வரும் திருப்பத்தை முன்வைத்தே நெய்யப்பட்டுள்ளது. அதனை மீறி இப்படத்தை சுவாரஸ்யப்படுத்துவது பாத்திரங்களுக்கு இடையிலான மனப்போராட்டம்தான்.

எண்பதுகளில் நடப்பதாகக் கதை சித்தரிக்கப்பட்டுள்ளது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு குடும்பம் வாழ்கிறது எனும்போது, சமூகப் படிநிலையில் அவர்களது நிலை என்னவென்பதும் புரியவைக்கப்படுகிறது.

அதையும் தாண்டி விவசாயத்தை நம்பிக் கடன் வாங்கி, பணம் கொடுத்தவரின் ஆதிக்கத்திற்குக் கட்டுப்படாமல் நழுவும் பிடிமானங்களை அக்குடும்பம் கைக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதனால் ஊராரின் அவதூறுகளுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது.

இதெல்லாமே மல்லிகாவும் அவரது தாய் தந்தையரும் கொலைப்பாவத்தைச் செய்ய வாய்ப்பிருப்பதாகக் கருத வைக்கின்றன.  

அனைத்தையும் தாண்டி, திருமண வயதைத் தாண்டி விரகதாபத்தைத் தணிக்கமுடியாமல் அல்லாடும் மல்லிகாவின் மனப்போராட்டம்தான் கதையின் மையமாக உள்ளது. ஒருவர் பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், அவரது காம ஆர்வத்தைப் புறந்தள்ளுவதால் ஏற்படும் வெறுப்பு அடக்க முடியாததாக இருக்கும்.

அந்த ஒற்றைப்புள்ளியை வைத்து நோக்கினால், இப்படத்தில் வரலட்சுமியை கிளாமராக காட்டத் தயங்கியிருக்கிறார் இயக்குனர். கொஞ்சம் வயதானவராகக் காட்டவும் யோசித்திருக்கிறார்.

தெலுங்கு ரீமேக்கில் இப்பாத்திரத்தில் பாயல் ராஜ்புத் அதீதமாக கிளாமர் காட்டியது படத்திற்குப் பின்னடைவாக அமைந்தது அதற்கான காரணமாக இருக்கலாம்.

அதேநேரத்தில், தனக்கு மொத்தக் கதையும் தெரியும் என்கிற வகையிலேயே சந்தோஷ் பிரதாப்பின் நடிப்பு அமைந்திருக்கிறது. வாலிப வயதிலும் அப்பாவித்தனத்துடன் இருப்பது எனும் அம்சம் அவரது நடிப்பில் வெளிப்படவில்லை.

அதுவே, பாதிப்படத்திலேயே மீதிக்கதை என்னவாக இருக்கும் என்று யோசிக்க வைக்கிறது. அவரது இடத்தில் நமக்கு நன்கு அறிமுகமான ஒரு வில்லன் நடிகர் நடித்திருந்தால் இந்த பிரச்சனை நிச்சயம் வந்திருக்காது.

சாமியாராக மனோபாலா வரும் காட்சி கூட மனதைத் தைப்பதாக இல்லை. அதனைக் கொஞ்சம் விலாவாரியாகக் காட்சிப்படுத்தியிருந்தால் அல்லது வேறுமாதிரியாக மாற்றியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

மேற்சொன்ன அனைத்து காரணிகளையும் யோசித்தபிறகே இந்த படத்தை தயாள் பத்மநாபன் உருவாக்கியிருக்கிறார் என்றால் அவரது தைரியத்தைப் பாராட்டத்தான் வேண்டும்.

டைட்டில், அடுத்தடுத்து வரும் வசனங்கள் என்று தொடக்கத்தில் இடம்பெற்ற பத்து நிமிடக் காட்சியிலேயே கதை எவ்வாறு நகரும் என்பதைச் சொல்லிவிடுகிறார் இயக்குனர். அப்படியிருந்தும் இறுதி வரை படம் பார்க்க ஒளிப்பதிவு, இசை என்று பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் துணை நிற்கின்றன.

நேர்த்தியான ஒரு த்ரில்லர் பார்க்கத் துடிப்பவர்களுக்கு இப்படம் நிச்சயம் திருப்தி தரும்..!

உதய் பாடகலிங்கம்

மு.க.ஸ்டாலின் வாழ்க்கை திரைப்படமாகுமா?: ஏ.ஆர்.முருகதாஸ் பதில்!

டியர் ஸ்டூடண்ட்ஸ்…ஆல்தி பெஸ்ட் : கூலாக வாழ்த்து சொன்ன முதல்வர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel