நடிகர் ரஜினிகாந்த்தின் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்க இருக்கிறது.
’அண்ணாத்த’ படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமாருடன் இணையும் திரைப்படம் ‘ஜெயிலர்’. அனிருத் இசையமைக்கிறார். ரஜினியின் 169வது படமான இதன் தலைப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. நெல்சன் இதற்கு முன்பு விஜய்யை வைத்து இயக்கிய ‘பீஸ்ட்’ பட திரைக்கதையில் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்ற விமர்சனத்தை பரவலாக பார்க்க முடிந்தது. இதனால், ரஜினியின் படத்தில் திரைக்கதைக்கு அதிக காலம் எடுத்திருக்கிறார் நெல்சன்.
மேலும் ரஜினியிடமும் இதை பற்றி விவாதித்து இருக்கிறார். இதற்கு முன்பு ரஜினிக்கு கமர்ஷியல் ரீதியாக வெற்றி படங்களை கொடுத்த மூத்த இயக்குநர்களை திரைக்கதையில் உதவிக்கு அழைக்கலாமா என்று ரஜினியிடம் நெல்சன் கேட்ட போது, அதை மறுத்து நெல்சனையே திரைக்கதையில் கவனம் செலுத்தும்படி முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறாராம் ரஜினி.
இந்த நிலையில் அடுத்த மாதத்தில் இருந்து அதாவது ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து ஹைதராபாத்தில் ‘ஜெயிலர்’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பிக்க இருக்கிறது. இதற்கான செட் அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கி உள்ளன. இதற்கு முன்பு கொரோனா பயம் காரணமாக ரஜினியின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பின் பெரும்பகுதியும் ஹைதராபாத்தில் தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
‘ஜெயிலர்’ படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், ரஜினிக்கு ஜோடியாக ஐஷ்வர்யாராய் பச்சன், ப்ரியங்கா அருள் மோகன் உள்ளிட்டோர் நடிக்க இருக்கின்றனர். நெல்சன் – அனிருத் கூட்டணிக்கு சிவகார்த்திகேயன் சமீப காலங்களில் எழுதி வரும் செல்லம்மா, அரபிக்குத்து பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தது. அந்த வகையில் இந்த படத்திலும் ரஜினிக்கும் ஒரு பாடலை சிவகார்த்திகேயன் எழுதுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆதிரா