ரொமாண்டிக் படங்கள்… தற்கொலைக்கு சமம்: இயக்குநர் மிஷ்கின்
பாலாஜி குமார் இயக்கத்தில் இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘கொலை’. இதில் நடிகர் விஜய் ஆண்டனி, நடிகை ரித்திகா சிங், நடிகை மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சென்னையில் நேற்று (ஜூலை 11) நடைபெற்ற இதன் இசை வெளியீட்டு விழாவில் படக்குழு மற்றும் பல முக்கிய திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இதில் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது…
“கொலை’ திரைப்படம் லாக்டவுனில் ஆரம்பித்து கடந்த வருடம் வெளியிட முடிவு செய்தோம். இந்த இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் உருவாக மிக முக்கிய காரணம் நடிகர் விஜய் ஆண்டனி. தொடர்ந்து இரண்டு மூன்று படங்கள் தயாரிக்க வேண்டும் என்று அவர்தான் எங்களை ஊக்கப்படுத்தினார்.
‘கொலை’க்கு பிறகு ‘இரத்தம்’ வரும். அதன் பிறகு ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் வரும். இப்படி அடுத்தடுத்து விஜய் ஆண்டனி அவர்களுடன் இணைந்து படத்தில் பணி புரிவது எங்களுக்கு மகிழ்ச்சி. இயக்குநர் பாலாஜி குமார் மிகச்சிறந்த படமாக இதை கொடுத்துள்ளார்.
சமீபத்தில் வெளியான மீடியம் பட்ஜெட் படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றது போல இந்த படமும் வெற்றி பெறும் என்று நம்புகிறோம். ‘பிச்சைக்காரன் 2’ வெளியானதும் என்னுடைய படத்திற்கு நல்ல ஓப்பனிங் இருக்கும். சிறிது காத்திருங்கள் என்று விஜய் ஆண்டனி நம்பிக்கையாக சொன்னார். அவர் சொன்னது போலவே தற்பொழுது ‘கொலை’ படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. க்ரைம் திரில்லர் உடன் சேர்ந்து படத்தில் நிறைய எமோஷனலான விஷயங்களும் உள்ளது என்றார்.
இசையமைப்பாளர் கிரீஷ் பேசியதாவது…
“இந்தப் படம் என் கரியரில் மிக முக்கியமானது என நினைக்கிறேன். வெளிநாடுகளில் சென்று இசையமைப்பது, பாடகர்கள் என அனைத்தையும் கேட்டவுடனே யோசிக்காமல் தயாரிப்பு தரப்பு செய்து கொடுத்தது. இசை, இயக்கம், தயாரிப்பு என விஜய் ஆண்டனி சாரிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு நிறைய விஷயம் இருக்கிறது. இயக்குநர் பாலாஜி குமாருடன் எனக்கு இரண்டாவது படம்” என்றார்.
ஒளிப்பதிவாளர் குமார் பேசியதாவது…
“நான் முதலில் வேலை பார்த்த படக்குழுவுடன் பத்து வருடங்கள் கழித்து மீண்டும் வேலை பார்க்கிறேன். படத்தில் உள்ள ஏழு தயாரிப்பாளர்களும் ஒற்றுமையுடன் ஒரே சீராக பணி புரிந்துள்ளனர். அதனை இயக்குநர் பாலாஜி குமார், நடிகர் விஜய் ஆண்டனி, மற்ற தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பாக கொண்டு சென்றுள்ளனர்” என்றார்.
இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது…
”’கொலை’ படத்தின் டிரெய்லர் அருமையாக இருந்தது. சினிமா என்பது கூத்து என்ற கலையில் இருந்துதான் வந்தது. சினிமா எனும் கலையை புரிந்து இயங்குபவர்கள் இங்கு குறைவு. என்னைப் பார்ப்பவர்களே அடுத்து என்ன சார் கொலை படமா என்று கேட்பார்கள். அப்படி என் படங்களை சுருக்கி விட்டார்கள். ‘கொலை’ என்ற இந்தப் படத்தின் டைட்டில் எழுத்துக்காக (Font) இயக்குநர் அவ்வளவு மெனக்கெட்டுள்ளார். ஒரு நல்ல இயக்குநர் படத்தலைப்பின் ஃபாண்ட் மூலமாக பார்வையாளர்களுக்கு கதை சொல்ல முடியுமா என்று யோசிப்பான்.
ஒரு மனிதன் ஏன் கொலை செய்கிறான்? உடல் முழுவதும் கத்தியால் குத்தப்பட்டு இருக்கும் ஒருவனின் வலியை நாம் எப்படி புரிந்து கொள்வோம்? அப்படி ஒரு இடத்திற்கு ஒரு மனிதன் உந்தப்படுவான் என்றால் அவன் மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளான் என்று அர்த்தம். மகாபாரதம், ராமாயணம் என இதிகாசங்களில் கொலை. ஷேக்ஸ்பியரின் நாவல்கள் நான்கு கொலைகள் பற்றிதான் சொல்கிறது. அது ஏன் என்று யோசிப்பவர்களால்தான் இதுபோன்ற படங்களை உருவாக்க முடியும்.
அந்த வகையில், இயக்குநர் பாலாஜிக்கு நன்றி. தொடர்ந்து அவர் கொலை படங்கள் செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். என்னிடம் ஜாலியான ரெமாண்டிக் காமெடி படங்கள் எடுக்க மாட்டீர்களா எனக் கேட்கிறார்கள். அப்படி செய்வதற்கு நான் தற்கொலை செய்து கொள்வேன். அது எனக்கு போர். ஒவ்வொரு கொலை படத்திலும் ஒரு கொலைகாரனுக்குப் பின்னால் ஒரு மர்ம முடிச்சு அவிழ்க்கப்படாமல் இறுக்கமாக உள்ளது. அதை விசாரித்து இயக்குநர் ஒரு சிறந்த படமாக தரும்போது அது வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை”.
நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது…
“இயக்குநர் பாலாஜி நிறைய ஹாலிவுட் படங்களில் பணியாற்றி உள்ளார். இவர் பற்றி ஒரு ரகசியம் சொல்கிறேன். எலான் மஸ்க் தங்கச்சியின் நண்பர் அவர். இந்தப் படத்தின் கதாநாயகி மீனாட்சி செளத்ரி தமிழ் தெரியாமல் கூட பயிற்சி எடுத்து சிறப்பாக நடித்துள்ளார். மிஷ்கின் சாருடைய பேச்சு கொலை செய்ய வேண்டும் என்று தோன்றுமளவுக்கு சிறப்பாக இருந்தது. நிகழ்ச்சியைப் போலவே படமும் சிறப்பாக வந்துள்ளது”என்றார்.
இராமானுஜம்
ஆதாரங்களை சேகரிப்பதும் புலன் விசாரணை தான்: துஷார் மேத்தா வாதம்!
டிஎன்பிஎஸ்சி குரூப் – 4 கலந்தாய்வு தேதி அறிவிப்பு!