#13YearsOfKO: சிம்புவின் காஸ்ட்லி மிஸ்… ‘என்னமோ ஏதோ’ன்னு 13 வருஷம் ஓடிப்போச்சு!

Published On:

| By Manjula

ஒரு நட்சத்திர நடிகரின் படம் வெளியாவதற்கு முன்பே, அது குறித்த தகவல்களை ஒன்றுவிடாமல் சேகரித்து, ரசித்து, சிலாகிக்கும் ரசிகர் கூட்டம் தொண்ணூறுகளில் இருந்தது. அவ்வளவு ஏன், பத்திரிகைகளில் வரும் துண்டுச்செய்தியை ஆதாரமாகக் கொண்டு, ‘இவர் நடிக்கும் புதிய படம் இது’ என்று சுவர்களில் எழுதி வைக்கும் பழக்கம் அன்றிருந்தது.

பல நேரங்களில் அந்த படங்கள் வெறுமனே எழுத்துகளாகவே இருந்து விடுவதுண்டு. அந்த காம்பினேஷன் குறித்த எதிர்பார்ப்பு மட்டும் ரசிகர்களிடத்தில் ஏமாற்றமாக மாறி மண்டிக் கிடக்கும்.

சிம்பு, கே.வி.ஆனந்த் கூட்டணியில் ‘கோ’ படத்தின் அறிவிப்பு வெளியானபோதும், அதன்பிறகும் மேற்கண்ட சம்பவங்களே நிகழ்ந்தன. சிம்பு ரசிகர்கள் வருத்தத்தில் ஆழ்ந்தார்கள்.

படம் வெளியானபிறகு அந்த வருத்தம் பன்மடங்கானது. காரணம், மிகப்பெரிய ஆக்‌ஷன் படமாக மட்டுமல்லாமல் இளமைத் துள்ளலோடும் ‘கோ’ இருந்தது தான். இன்றோடு (ஏப்ரல் 22)  அந்தப் படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆகின்றன.

முகவரி தந்த படம்

நடிகர் ஜீவாவின் வாழ்க்கை ‘ஆசை ஆசையாய்’, ‘தித்திக்குதே’ படங்களின் வழியே ஆரம்பமானது. பிறகு வந்த அமீரின் ‘ராம்’, ராமின் ‘கற்றது தமிழ்’ படங்கள் அவரைச் சிறந்த நடிகராக ரசிகர்களிடத்தில் கொண்டு சேர்த்தது. டிஷ்யூம், ஈ உள்ளிட்டவை கமர்ஷியலும் கலையம்சமும் மிக்க படங்களாக அமைந்தன.

ராஜேஷின் ‘சிவா மனசுல சக்தி’ வழியாக இளைய தலைமுறையைக் கவர்ந்திழுத்தார் ஜீவா. தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம் போன்ற படங்கள் இடைப்பட்ட காலத்தில் அவரது முகத்தை ரசிகர்கள் மறக்காமல் இருக்கச் செய்தன.

Ghilli: திரிஷா கதாபாத்திரத்த ‘மிஸ்’ பண்ண பிரபலம்… யாருன்னு பாருங்க!

அந்த காலகட்டத்தில், கே.வி.ஆனந்தின் ‘கோ’ ஜீவாவுக்கு தனித்துவமான முகவரி தந்ததுடன் மாபெரும் பிளாக்பஸ்டர் ஆகவும் அமைந்தது. இப்படத்தில் அஷ்வின் குமார் எனும் ஒரு இளம் புகைப்படக் கலைஞராகத் தோன்றியிருந்தார் ஜீவா. ஒரு தினசரிப் பத்திரிகையில் அவர் வேலை செய்வதாக வந்த காட்சிகள், அக்காலகட்டத்தில் வெகுவாக விமர்சனத்திற்கு உள்ளானது.

ஏனென்றால், அதில் கார்ப்பரேட் அலுவலகம் போன்று அந்த செட் அமைந்திருந்தது. இன்று, அதே பாணிக்கு பல பத்திரிகை அலுவலகங்கள் மாறியிருக்கின்றன என்பது ரசிக்கத்தக்க முரண். ஜீவா சம்பந்தப்பட்ட காட்சிகளில் சில, தொண்ணூறுகளில் கே.வி.ஆனந்த் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றியபோது எதிர்கொண்ட நிகழ்வுகளின் பிரதிபலிப்புகள் தான்.

கே.வி.ஆனந்தின் அனுபவம்

ஷங்கருடன் ‘முதல்வன்’, ‘சிவாஜி’ படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய அனுபவத்தில், ஒரு கமர்ஷியல் படத்தில் எங்கெல்லாம் ரசிகர்கள் கைதட்டி மகிழ்வார்கள் என்பதை நன்கு அறிந்திருந்தார் கே.வி.ஆனந்த். அதனாலேயே எழுத்தாளர்கள் சுபா உடன் இணைந்து ‘மிக கமர்ஷியலாக’ இப்படத்தின் எழுத்தாக்கத்தைக் கையாண்டிருந்தார்.

கோட்டா சீனிவாசராவிடம் கெஞ்சுவதாக இருந்தாலும் சரி; பியா பாஜ்பாயின் ‘அடல்ட்’ கமெண்ட்களை கேட்டு வெகுண்டெழுவதாக இருந்தாலும் சரி; பெற்றோரிடம் பேசும் காட்சிகளிலும் சரி; ஜீவாவின் வசனங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களிடையே கைத்தட்டல்களை அள்ளின.

பிரகாஷ் ராஜ், ஜெகன், கிரண் என்று பலரை வில்லத்தனமாகக் காட்டியபோதும், ‘யார் வில்லன்’ என்ற எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இறுதியாக அஜ்மலின் முகத்தைக் காட்டிய இடத்தில் அந்த ‘சஸ்பென்ஸ்’ சப்பென்று முடியவில்லை. அந்த சாமர்த்தியமான திரைக்கதை உத்தியே இப்படத்தின் பலமாக இருந்தது.

வில்லனாக நடித்த அஜ்மல் அமீர், எடிட்டராக வரும் அசியுத் குமார், நக்சலைட் குழு தலைவராக வரும் போஸ் வெங்கட் என்று பலருக்கும் அது போன்ற வரவேற்பு கிடைக்கச் செய்திருந்தார் கே.வி.ஆனந்த். அதற்குக் காரணம் பல மொழிப் படங்களில் பணியாற்றியதன் விளைவாக அவர் பெற்ற தாக்கத்தின் செறிவு தான்.

தோ அவுர் தோ பியார்: விமர்சனம்!

‘ஓம் சாந்தி ஓம்’ படத்தில் ஷாரூக் கான் உடன் இந்தி திரையுலகப் பிரபலங்கள் திரண்டது போல, ‘கோ’வில் வரும் ‘அகநக’ பாடலில் விஜய், அஜித் தவிர்த்து இளைய தலைமுறையைச் சேர்ந்த பெரும்பாலான நடிகர் நடிகைகள் தலைகாட்டியிருந்தனர்.

ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு, ஆண்டனியின் படத்தொகுப்பு, கிரணின் கலை வடிவமைப்பு உட்படத் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இப்படத்திற்கு வழங்கிய சிறப்பான ஒருங்கிணைப்பே இதனை அனைவரும் கொண்டாடச் செய்தது.

மிக முக்கியமாக, இளமை பொங்கும் தனது ‘பெஸ்ட்’ ஆல்பங்களில் ஒன்றாக இதனை ஆக்கியிருந்தார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். இன்றுவரை, இப்படம் தந்த உயரத்தை அவரது இதர படங்கள் எட்டவில்லை என்று தாராளமாகச் சொல்லலாம். போலவே, பின்னணி இசையிலும் ‘த்ரில்’ கூட்டி நம்மை இருக்கை நுனிக்கு வரவழைத்ததில் அவரது பங்கு அதிகம்.

அபாயம் அதிகம்

’அமளி துமளி’ பட பாடல் படப்பிடிப்புக்காக, சுமார் எட்டாயிரம் அடி உயரமுள்ள ஒரு மலைச் சிகரம் மீது ஜீவாவையும், கார்த்திகாவையும் ஆட வைத்த அனுபவத்தை ஒரு யூடியூப் தளத்தில் சமீபத்தில் பகிர்ந்திருந்தார் கோரியோகிராபர் தினேஷ்.

அப்போது, இரு குன்றுகளுக்கு நடுவே பந்து போலிருந்த ஒரு இடத்தில் தானும் உதவியாளரும் பனிமூட்டத்தின் இடையே அமர்ந்திருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். பனி விலகிய பிறகே, காலுக்கு கீழே சில ஆயிரம் அடி தொலைவில் தரை இருப்பது தெரிந்திருக்கிறது.

அதனைக் கண்டதுமே இருவருக்கும் தலை கிறுகிறுத்திருக்கிறது. அந்த இடத்தில்தான் நாயகனும், நாயகியும் ஆடுவதாகப் பின்னர் படமாக்கியிருக்கின்றனர். இது போன்ற பல அபாயங்கள் அப்படத்தில் நிறைந்திருக்கின்றன.

படக்குழுவினர் அதனைப் பொதுவெளியில் பெரிதாகப் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனால், அதற்கேற்ற பலனைத் தங்கள் ரசனையின் வழியே பரிசளித்தனர் ரசிகர்கள். காட்சியாக்கத்தில் மட்டுமல்ல; இப்படத்தின் உள்ளடக்கமும் கூட கொஞ்சம் அபாயகரமானது தான். திரைக்கதையில் அரசியல் ‘டச்’ மிக அதிகமிருந்தது.

அரசியல் டச்

முதலமைச்சர் ஆகும் கனவில் ஒரு அரசியல்வாதி பதின்ம வயதுப் பெண்ணைத் திருமணம் செய்வதாக, இதிலொரு காட்சி உண்டு. அது, எண்பதுகளின் இறுதியில் புலனாய்வுப் பத்திரிகைகளை ஆக்கிரமித்த செய்திகளில் ஒன்று.

வில்லன் குறித்த உண்மையைப் பொதுமக்களிடம் சொல்லாமல் நாயகன் மறைத்துவிடுவதாகப் படத்தின் முடிவு அமைந்திருக்கும். திரைக்கதை விதிகளுக்கு மாறானது அது என்று சிலர் அதனை விமர்சித்தனர். ஆனாலும் அதனை மீறி, அப்படம் வெற்றி அடைந்தது.

‘சாதாரண மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டாம்’ என்ற நாயகனின் கருத்து ரசிகர்களை ஈர்த்தது தான் அதற்குக் காரணம். போலவே, நாயகனை மட்டுமே முன்னிறுத்தி தனி மனித துதி பாடுவதாக அக்காட்சி அமையாததும் பலரை ஆசுவாசப்படுத்தியது.

அது போன்ற அம்சங்களே ‘ஆல் கிளாஸ் ஹிட்’ ஆக ‘கோ’வை ஆக்கியது. கே.வி.ஆனந்தை முன்னணி இயக்குனராக மாற்றியது. அடுத்து அவர் தந்த ‘மாற்றான்’, ‘கவண்’ படங்கள் அதற்கிணையான வரவேற்பைப் பெறாமல் போனதால் அந்த எதிர்பார்ப்பு மங்கியது.

அவர் மட்டுமல்ல; இன்னபிற தமிழ் இயக்குனர்களும் கூட ‘கோ’ போன்று மாஸும் கிளாஸும் இணைந்த ஒரு கமர்ஷியல் படத்தை தரவில்லை என்பதே உண்மை. ’கேஜிஎஃப்’புக்கு முன்பே ஒரு ‘பான் இந்தியா’ படத்திற்கான முன்னோட்டமாகவும் இதன் வெற்றி அமைந்ததை யாராலும் மறுக்க முடியாது.

கோவிட் – 19 காலகட்டத்தில் சிம்புவுடன் இணைந்து கே.வி.ஆனந்த் ஒரு படத்தை தரவிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. அதற்குள் அவர் இயற்கை எய்தியது திரையுலகுக்கும் ரசிகர்களுக்கும் பேரிழப்பாக அமைந்தது.

அவர் இயக்கவிருந்த திரைக்கதைகள் எதிர்காலத்தில் வேறு சிலரால் உயிர் பெறலாம். அதே போல ‘கோ’ மறுவெளியீட்டைக் காணலாம். அப்போதும், கே.வி.ஆனந்த் எனும் படைப்பாளி கொண்டாடப்படுவார்.

காலத்தை வென்ற கலைஞனாக, அவர் திரையுலகுக்கு வழங்கிய பங்களிப்பே அதற்குக் காரணமாக இருக்கும். அவரை இன்னும் இன்னும் சிலாகிக்கச் செய்யும்!

-உதய் பாடகலிங்கம்  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“மக்களிடம் மதரீதியான குழப்பங்களை ஏற்படுத்தும் பாஜக”: முத்தரசன் தாக்கு!

புதிய பிசினஸ் ஆரம்பித்த ‘அயலி’ நடிகை… வாழ்த்தும் ரசிகர்கள்…!

ஹீரோவாக அறிமுகமாகும் சீரியல் நடிகர்… ஹீரோயின் யார் தெரியுமா…?!

தனியார் பள்ளிகளில் இலவச கல்வி: விண்ணப்பிப்பது எப்படி?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel