தருணம்: விமர்சனம்!

Published On:

| By uthay Padagalingam

மீதிய எப்போ காட்டுவாங்க..?

பொங்கல் வெளியீடாக அறிவிக்கப்பட்டிருந்த ‘தருணம்’, ஜனவரி 14ஆம் நாளன்று தமிழகம் முழுவதும் அனைத்து தியேட்டர்களிலும் திரையிடாமல் நிறுத்தப்பட்டதாகச் சொல்லப்பட்டது. சரியான அளவில் காட்சிகள், தியேட்டர்கள் கிடைக்காமல் போனதே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஜனவரி 31ஆம் தேதியன்று இப்படம் தியேட்டர்களில் மீண்டும் வெளியானது. Kishan Das tharunam movie

அரவிந்த் சீனிவாசன் இயக்கியிருக்கிற இப்படத்தில் கிஷன் தாஸ் உடன் ஸ்ம்ருதி வெங்கட், ராஜ் அய்யப்பா, பாலசரவணன் உட்படப் பலர் நடித்துள்ளனர்.

‘தருணம்’ என்பது அபாரமான டைட்டில். அதற்குப் பொருத்தமான கதை இப்படத்தில் அமையப் பெற்றிருக்கிறதா?

குறிப்பிட்ட தருணத்தில்..!

இரண்டு பேர் பெண்களோடு பழகி அதனை வீடியோ எடுத்து, பின்னர் அதனைக் காட்டியே அவர்களது வாழ்வை நசிக்கின்றனர். அந்த நபர்கள் யாரென்று காவல் துறை தீவிரமாகத் தேடுகிறது.

தன்னோடு பணியாற்றிய நண்பனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அர்ஜுன் (கிஷன் தாஸ்) இடைக்கால நீக்கத்திற்கு ஆளாகியிருக்கிறார்.

சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர் விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு வருகிறார். வந்த இடத்தில் மீராவைச் (ஸ்ம்ருதி வெங்கட்) சந்திக்கிறார். மெல்ல அவர்களுக்குள் காதல் மலர்கிறது.

இதனிடையே, மீராவோடு பழகும் ரோகித் (ராஜ் அய்யப்பா) தானும் அவரைக் காதலிப்பதாகச் சொல்கிறார். அவர் பேசுவதை மீரா ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. அதேநேரத்தில், அவரைத் தவிர்ப்பதும் இல்லை.

சந்தேகத்திற்குரிய அந்த இயல்பைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடிவெடுக்கிறார் ரோகித். மீராவோடு நெருக்கமாக இருக்கும் தருணத்தை வீடியோ எடுத்துவைத்துக்கொண்டு, தனக்கும் தனது நண்பர்களுக்குமான செக்ஸ் அடிமையாகப் பயன்படுத்தத் திட்டமிடுகிறார்.

அதற்குத் தடையாக இருக்கும் காரணத்தால், அடியாட்களைக் கொண்டு அர்ஜுனைத் தாக்க முற்படுகிறார். அதில் தோல்வி ஏற்படுகிறது.

உடனே, அர்ஜுனின் பின்னணி என்னவென்று அறிய முயல்கிறார். அப்போதுதான், அவர் ஒரு போலீஸ் அதிகாரி என்று தெரிய வருகிறது. கணவராக வரப்போகிறவர் காவல் துறையைச் சேர்ந்தவர் என்ற தகவல் தனக்கு முன்கூட்டியே தெரியாததால், ரோகித் அதனைக் கூறியதும் அதிர்கிறார் மீரா.

அந்தச் சூழலில், அவரைத் தன் வலையில் விழ வைக்க முயல்கிறார் ரோகித். சில நிமிடங்கள் கழித்து, மீராவின் வீட்டிற்கு அர்ஜுன் வருகிறார். அங்கு, தரையில் படுத்த நிலையில் கிடக்கும் ரோகித்தைக் காண்கிறார். அவரது சுவாசம் நின்று போயிருப்பதை அறிந்ததும், என்ன செய்வதென்று யோசிக்கிறார். ஆனால், மீராவோ ‘போலீஸ்ல சொல்லிடுவோம்’ என்கிறார்.

அதன்பின், அவர்கள் வாழ்க்கையில் வரும் தருணங்கள் எப்படிப்பட்டவை? ரோகித் மரணத்தை அவர்கள் இவ்வுலகுக்குத் தெரிவித்தனரா அல்லது மறைத்தனரா என்று சொல்கிறது ‘தருணம்’ படத்தின் மீதி.

குறிப்பிட்ட தருணங்களில் ஒவ்வொரு மனிதரும் எவ்வாறு செயல்படுவர் என்பதைக் கொண்டு, இதன் திரைக்கதையை வடிவமைக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன். ஆனால், அந்தச் செயல்பாட்டில் அவர் பாதிக்கிணறு தாண்டியிருப்பதுதான் நம்மைப் படாத பாடு படுத்துகிறது. Kishan Das tharunam movie

சிறப்பான ‘ஐடியா’!

’இண்ட்ரோவெர்ட்’டாக படத்தில் தென்படும் கிஷன் தாஸ், ஒரு போலீஸ் அதிகாரியாக காட்டப்பட்டிருக்கிறார். ‘காக்க.. காக்க..’ படத்தில் நாம் பார்த்த சித்தரிப்பு என்றாலும், இடைவேளைக்குப் பிறகு ‘ஹீரோயிசம்’ காட்டும் வகையில் சில செயல்களில் அப்பாத்திரம் ஈடுபடுவதாகக் காட்டப்பட்டிருப்பது நம்பும்படியாக இல்லை. கூடவே, கிஷனின் நடிப்பு நம்மைத் திருப்திப்படுத்தும் வகையில் அமையவில்லை. Kishan Das tharunam movie

ஸ்மிருதி வெங்கட் கொஞ்சம் பருமனான உடல்வாகுடன் தோன்றியிருக்கிறார். ‘நடிக்கறதுல கொஞ்சம் கேப் விழுந்துருச்சு’ என்பது போன்று வந்து போயிருக்கிறார். காதல் காட்சிகளில் தென்படும் அளவுக்கு, பதற்றப்படுகிற இடங்களில் அவரது ‘பெர்பார்மன்ஸ்’ சிறப்பாக அமையவில்லை.

பாலசரவணன் மட்டுமே ஆங்காங்கே தலைகாட்டி, சில ‘காமெடி ஒன்லைனர்’களை அள்ளியிறைத்து நம்மைச் சிரிக்க வைக்கிறார். இரண்டாம் பாதியில், அதுவும் கூட லாஜிக்மீறல் கேள்விகளை எழுப்புகின்றன.

சமீபகாலமாகக் குணசித்திர பாத்திரங்களில் கலக்கிவரும் கீதா கைலாசம், இதில் ராஜ் அய்யப்பாவின் தாயாக நடித்திருக்கிறார். நான்கைந்து காட்சிகளில் இடம்பெற்றபோதும் அவருக்குப் பெரிதாக முக்கியத்துவம் தரப்படவில்லை.

ராஜ் அய்யப்பாவின் பாத்திரத்திற்கென்று தனியிடம் ஒதுக்கப்பட்டவில்லை. அது, திரைக்கதையைப் பலவீனமாக்கியிருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜீயின் உழைப்பு, சில காட்சிகளில் பளிச்சிடுகிறது. குறிப்பாக, கதாபாத்திரங்கள் ஓடுகிற, துரத்துகிற காட்சிகளில் அருமை.

ஒரு ’அண்டர்கிரவுண்ட் கார் பார்க்கிங்’கில் நடப்பதாக வரும் சண்டைக்காட்சிக்கு முந்தைய இடங்கள் சட்டென்ற ஈர்ப்பை விதைக்கின்றன.

அருள் இளங்கோ சித்தார்த்தின் படத்தொகுப்பு, நம்மை ஏமாற்றத்தில் ஆழ்த்துகிறது. இந்தப் படத்தின் சில காட்சிகளில் ‘பாலோ அப்’ என்ற விஷயத்திற்கே இடமில்லை. ஒரு நிகழ்வுக்குப் பிறகு என்ன நடந்தது என்று அறிய படத்தொகுப்பாளர் வாய்ப்பே தரவில்லை அல்லது இயக்குனர் அந்தக் காட்சியை உருவாக்கவில்லை என்றே கருத வேண்டியிருக்கிறது.

பாடல்களுக்கு இசையமைத்துள்ள தர்புகா சிவா, பின்னணி இசை அமைத்துள்ள அஸ்வின் ஹேமந்த் இருவரும் மேற்கொண்ட முயற்சிகள் பலிக்கவில்லை. அதனால் திரையோடு நாம் ஒன்ற முடியாமல் போகிறது.

படத்தின் பட்ஜெட் குறைவு என்கிற விஷயம், தொடர்ந்து பல காட்சிகளில் எதிரொலிக்கிறது. சில சண்டைக்காட்சிகள், சேஸிங் காட்சிகளில் மட்டும் அது தவிர்க்கப்பட்டிருக்கிறது.

ஒரு ‘த்ரில்லர்’ திரைப்படத்தில் மையக்கதையொன்றை அமைத்துக்கொண்டு, சில பாத்திரங்களை அருமையாக வார்த்து, அவை தொடர்பான நிகழ்வுகளைக் கொண்டு திரைக்கதையை விறுவிறுப்பாக்கும் முயற்சிகள் நடந்தேறும். அதன் நடுவே, நம்மை கொக்கி போட்டு இழுக்கும் வகையில் சில விஷயங்கள் புதைக்கப்பட்டிருந்தால் மிக அருமையான திரையனுபவம் கிடைக்கும்.

’தருணம்’ படத்தில் நாயகி பாத்திரம் நாயகனையும் வில்லனையும் சரிசமமாகக் கையாள்வது அத்தகையதுதான். ஆனால், இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் அதனைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

அது மட்டுமல்லாமல், லாஜிக் மீறல்கள் கொட்டிக் கிடப்பது சட்டென்று கண்களில் படுகிற வகையில் ஒரு திரைக்கதையைப் படைத்திருக்கிறார். அந்தக் காட்சிகள் தொடர்ச்சியற்று இருப்பது, படத்தின் மைய இழை உடனான நமது தொடர்பைக் குலைத்தெறிகின்றன.

’அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் நாகேஷ் பாத்திரம் அப்பு கமலை அழைத்து வருமாறு சொல்லும். உடனே, அடியாட்கள் மெக்கானிக் ராஜா கமலை அழைத்து வருவார்கள். அப்போது ‘பாதிதான் இருக்கு மீதி எங்கடா’ என்று கேட்பார் நாகேஷ். ‘தருணம்’ பார்த்து முடித்தபிறகு, அதே பாணியில் ‘மீதி படத்தை எப்போ பாஸ் காட்டுவீங்க’ என்று இதன் இயக்குனர், தயாரிப்பாளரிடம் கேட்கத் தோன்றுகிறது. arjun das tharunam movie

அதேநேரத்தில், ஒரு ‘ஐடியா’வாக ‘தருணம்’ சிறப்பானதுதான் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். பல கோணங்களில் சிந்தித்து, விவாதித்து, இதே திரைக்கதையில் செறிவினை அதிகப்படுத்தியிருந்தால் ‘வேறொன்றாக’ இப்படம் நமக்குக் கிடைத்திருக்கலாம். அந்த ‘தருணத்தை’ தவறவிட்டிருக்கிறது ‘தருணம்’!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share