கமர்ஷியல் & ஆர்ட்டிஸ்டிக் ‘ஆஃபாயில்’!
’ஸ்டைலா, கெத்தா, கைதட்டி ரசிக்கிற மாதிரி ஒரு ஆக்ஷன் படம் பார்க்கணும்’ என்பவரையும், ‘ரொம்பவே கிளாஸா ஒரு கேங்க்ஸ்டர் படம் பார்க்கலாமா’ என்பவரையும் ஒருசேர திருப்திப்படுத்தவே முடியாது. அப்படி முயன்றால் எல்லா தரப்பிலும் ஏமாற்றம்தான் மிஞ்சும். அதேநேரத்தில், வெகு எளிதாக ‘நல்ல படம்’ என்ற முத்திரையை சினிமா ஆர்வலர்களிடத்தில் பெற்றுவிடலாம். அந்த கணக்கோடு களமிறங்கியிருக்கிறது ‘கிங் ஆஃப் கோதா’ குழு.
அபிலாஷ் சந்திரன் எழுத்தாக்கத்தில், அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் வெளியாகியுள்ள இப்படத்தில் துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி, நைலா உஷா, செம்பன் வினோத் ஜோஸ், ஷபீர் கல்லாரக்கல், கோகுல் சுரேஷ் உட்படப் பலர் நடித்துள்ளனர்.
மலையாளத்தில் தயாரிக்கப்பட்ட இப்படம் தமிழ், தெலுங்கிலும் ’டப்பிங்’ செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.
ஒரு ஊர்ல ஒரு ராஜா!
பெரும்பாலான ஆக்ஷன் கதைகள் ‘ஒரு ஊர்ல ஒரு ராஜா’ என்று தொடங்கும் அல்லது சில நேரங்களில் அப்படி ஒரு தீர்வுடன் முடிவடையும். அதில் ஒன்றாகியிருக்கிறது ‘கிங் ஆஃப் கோதா’. 1985, 1995 காலகட்டங்களில் நடப்பதாக நீள்கிறது இக்கதை.
கோதா என்ற ஊரில் சட்டவிரோதமான காரியங்களை மேற்கொண்டு வருகிறார் கண்ணன் பாய் (ஷபீர் கல்லாரக்கல்). அங்கு, அவர் வைத்தது தான் சட்டம். அந்த நிலையில், அங்குள்ள காவல்நிலையத்திற்கு மாற்றலாகி வருகிறார் இன்ஸ்பெக்டர் ஷாகுல் (பிரசன்னா). கண்காணிப்பில் இருக்கும் குற்றவாளி எனும் அடிப்படையில் கண்ணனைச் சந்திக்கிறார் ஷாகுல். அப்போது, அவரால் மிரட்டப்படுகிறார் ஷாகுல். அதற்குப் பழி வாங்க, என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார். அப்போது, கண்ணனின் நண்பனான ராஜு பற்றித் தெரிய வருகிறது.
பத்தாண்டுகளுக்கு முன்னர், கோதா முழுவதுமே ராஜுவின் பிடியில் இருந்திருக்கிறது. பக்கத்து ஊரான காந்தி நகரைச் சேர்ந்த ரஞ்சித்துக்கும் (செம்பன் வினோத் ஜோஸ்) ராஜுவுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். ரஞ்சித்தின் உறவினரை ராஜு கொன்றதும், அது மேலும் அதிகமாகிறது. அந்தச் சூழலில், இருவரும் கை கோர்த்து போதை மருந்து கடத்தலில் ஈடுபடலாம் என்கிறார் ரஞ்சித். அதற்கு ராஜு ஒப்புக்கொள்வதாக இல்லை. ஆனால், ராஜுவின் நெருங்கிய நண்பர் கண்ணன் அதனை ஏற்கிறார்.
அதற்குள் காதல், நட்பு இரண்டிலும் துரோகத்தை எதிர்கொள்கிறார் ராஜு. அதே நேரத்தில், ’உன்னைப் பார்த்து வளரும் தங்கையின் வாழ்க்கை என்னவாகும்’ என்று கூறி, அவரை ஊரை விட்டுச் செல்லுமாறு நிர்ப்பந்திக்கிறார் அவரது தாய். அப்போதைய வெறுமை, அதனை ஏற்கச் செய்கிறது.
பத்தாண்டுகள் கழித்து, அதே தங்கையின் வாழ்க்கை அபாயத்தில் இருப்பதையறிந்து மீண்டும் கோதா திரும்புகிறார் ராஜு. ராஜுவின் தங்கை எதிர்கொண்ட அபாயம் என்ன? இத்தனை நாட்கள் ராஜு எங்கிருந்தார், என்ன செய்தார்? ஊர் திரும்பியபிறகு கண்ணன் உடன் அவரது நட்பு எப்படியிருந்தது என்பது உட்படப் பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘கிங் ஆஃப் கோதா’வின் மீதிப்பாதி.
அபாரமான செட்கள்!
’கிங் ஆஃப் கோதா ’ படத்தைத் தனது ‘கேஜிஎஃப்’ ஆகவே துல்கர் சல்மான் பாவித்திருக்க வேண்டும். அதற்கேற்ப, ஆக்ஷன் காட்சிகளில் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். இதர காட்சிகளிலும் கூட நன்றாகவே நடித்திருக்கிறார்.
ஐஸ்வர்யா லட்சுமியைப் பொறுத்தவரை, இது அவர் நடித்த இன்னொரு மலையாளப் படம். அவ்வளவே! அதற்கேற்ப, அவரும் திரையில் வந்து போயிருக்கிறார்.
’சார்பட்டா’வுக்குப் பிறகு ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் நம்மைத் திகைக்க வைத்த ஷபீர் கல்லாரக்கலுக்கு இதில் முதன்மையான பாத்திரம். அதனை ஏற்று அவரும் படம் முழுக்க வலம் வருகிறார்.
ஷபீரின் மனைவியாக நடித்த நைலா உஷா, அபாயமிக்க பெண் பாத்திரத்தில் கம்பீரமாக வந்து போயிருக்கிறார்.
துல்கரின் பெற்றோராக நடித்த ஷம்மி திலகன் – சாந்தி கிருஷ்ணா, சகோதரியாக வரும் அனிகா, இன்ஸ்பெக்டராக வரும் பிரசன்னா, கோகுல் சுரேஷ், ரவுடி ரஞ்சித்தாக நடித்த செம்பன் வினோத் ஜோஸ் ஆகியோருக்கு இதில் முக்கிய இடம் கிடைத்துள்ளது. அதேநேரத்தில் சுதி கோப்பா, சௌபின் ஜாகிர் உட்படப் பலர் ’கௌரவமாக’ தலைகாட்டியிருக்கின்றனர்.
நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவானது ஆக்ஷன் காட்சிகளில் சுழன்றடித்து நம்மை அசர வைக்கிறது. உமாசங்கர் சடபதியின் படத்தொகுப்பு, ‘சில காட்சிகளை கட் செய்திருக்கலாமே’ என்று எண்ண வைக்கிறது. கதையோடு ரசிகர்கள் ஒன்றிணைவதற்காக அவர் தந்திருக்கும் கால அவகாசத்தால் நமக்கு கொட்டாவிகள் வருவதுதான் மிச்சம்.
ஜேக்ஸ் பிஜோய்யின் பின்னணி இசை ஒவ்வொரு காட்சியிலும் மாறுவது அருமை. ‘தீம் மியூசிக்’ என்ற பெயரில் நம்மை போரடிக்கவில்லை. ஜேக்ஸ் மற்றும் ஷான் ரஹ்மான் இசையில் அமைந்த பாடல்கள் கொஞ்சமாய் உற்சாகப்படுத்துகின்றன.
நிமேஷ் தனூரின் தயாரிப்பு வடிவமைப்பு, கோதா எனும் ஊரே முழுமையாக நிர்மாணிக்கப்பட்ட உணர்வை உருவாக்குகிறது. அந்த வகையில், இயக்குனர் உருவாக்கிய உலகத்திற்கு உரு கொடுக்க அவரது குழு உருவாக்கிய செட்கள் பெரிதும் உதவியிருக்கின்றன. அப்பணி அபாரமானது என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
நடிப்பு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பை மீறி இரண்டு பேருடைய பணிப் பங்களிப்புதான் ‘கிங் ஆஃப் கோதா ’ எதிர்காலத்தை நிர்மாணிக்கவல்லவை. எழுத்தாக்கம் மேற்கொண்ட அபிலாஷ் சந்திரன் மற்றும் இயக்குனர் அபிலாஷ் ஜோஷியே அந்த இருவர்.
எது அயர்வைத் தருகிறது?
படம் தொடங்கி கிட்டத்தட்ட 25 நிமிடங்கள் கழித்தே துல்கர் சல்மான் திரையில் அறிமுகமாகிறார். அதுவரை, கோதா எனும் கற்பனையான ஒரு ஊரின் வரலாறு காட்சிகளாக விரிகிறது. ஒரு நல்ல ’ஆக்ஷன் ட்ராமா’வுக்கு ஏற்ற திரைக்கதை இப்படித்தான் தொடங்க வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அதன்பிறகும் ‘ட்ராமா’ அதிகமாகி, அவ்வப்போது ‘ஆக்ஷன்’ காட்சிகள் திணிக்கப்பட்டதுதான் நம்மை அயர்வுற வைத்திருக்கிறது.
முக்கியமாக, இதில் இடம்பெற்ற காட்சிகளில் ஒரு சில மட்டுமே ‘கூஸ்பம்ஸ்’ அனுபவங்களைத் தரவல்லவை. மற்றவை ஏற்கனவே வெளியான பல இந்தியப் படங்களில் பார்த்தவை. முக்கியமாக, கன்னடத்தில் வெளியான ’கருட கமன விருஷிப வாகன’ படத்தின் தாக்கம் இதில் அதிகம். ஆனாலும், ‘கேஜிஎஃப்’ பாகங்களின் வெற்றி ‘க்ளிஷே’வான கதையைச் சிறந்த காட்சியாக்கத்துடன் தந்துவிட முடியுமென்ற நம்பிக்கையை இருவரிடத்திலும் உருவாக்கியிருக்கிறது.
ஒரு கேங்க்ஸ்டர் கதையை கமர்ஷியலாக சொல்ல வேண்டுமா அல்லது செறிவான கலையம்சங்களுடன் காட்சிப்படுத்த வேண்டுமா என்று திரைக்கதை ட்ரீட்மெண்டில் தடுமாறியிருக்கிறார் இயக்குனர் அபிலாஷ் ஜோஷி. முடிவில், இரண்டையும் கலந்து ஒரு படத்தைத் தந்து நம்மை அயர்வுர வைத்திருக்கிறார்.
ஏற்கனவே ‘பொறிஞ்சு மரியம் ஜோஸ்’ படத்தில் பணியாற்றியவர் அபிலாஷ் சந்திரன். அதைப் போலவே, இதிலும் எண்பதுகள், தொண்ணூறுகள் என்று கதை சொல்லி ரசிகர்களின் பழைய நினைவுகளைக் கிளறியிருக்கிறார். அந்த படம் பிடிக்குமென்றால் இதுவும் நிச்சயம் பிடிக்கும். ஆனால், அதற்கான வாய்ப்பு குறைவு. காரணம், படத்தின் நீளம். கிட்டத்தட்ட திரையில் மூன்று மணி நேரம் ஓடுகிறது.
இந்த படத்தில் அனு மோள், சாந்தி கிருஷ்ணா, சுதி கோப்பா உட்படச் சிலர் ஏற்ற பாத்திரங்கள் திரையில் வந்த வேகத்தில் காணாமல் போகின்றன. சிலவற்றுக்குத் தெளிவான வார்ப்பு அமையவில்லை. அதுவும் நம்மை அயர்வுற வைக்கிறது. அதையும் தாண்டி, படம் பார்த்து முடியும்போது ‘எத்தகைய படத்தைப் பார்த்தோம்’ என்ற கேள்வியே மிஞ்சுகிறது.
’ஓணம்’ போன்ற விழாக்காலத்தையொட்டி வெளியாகிற படங்கள் மிகச்சிறப்பான காட்சியாக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும் அல்லது மக்களை உற்சாகப்படுத்துகிற பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், நடுவாந்திரமாக அமைந்து ரசிகர்களைக் குழப்புகிறது ‘கிங் ஆஃப் கோதா’.
’ஆம்லெட்’ போட வேண்டுமென்று எடுத்த முட்டை தவறி தோசைக்கல்லில் விழுந்து ‘ஆஃபாயில்’ ஆக மாறுமே, அந்த கதி தான் இந்த படத்திற்கும் நேர்ந்திருக்கிறது. என்ன, அகப்பையில் எடுக்கும்போதும் பிடிவாதம் காட்டி ‘கலக்கி’யாக மாறுவது போல கடைசி நேரத்தில் மொத்த படத்தையும் ‘பிரட்டி’ தந்திருக்கிறார் இயக்குனர் அபிலாஷ் ஜோஷி. ’ஏதோ ஒன்றைச் சாப்பிட்டால் போதும்’ என்பவர்களுக்கு இப்படம் அதிர்ச்சி தராது. ஆனால், இதுதான் வேண்டும் என்று அடம்பிடிப்பவர்களை நிச்சயம் ஏமாற்றும்.
உதய் பாடகலிங்கம்
டிஜிட்டல் திண்ணை: உதயநிதி கையில் எம்பி வேட்பாளர் பட்டியல்… அமைச்சர்கள் ஷாக்!
ஸ்டாலினை ’அண்ணன்’ என்று அழைத்த வீர முத்துவேலின் தந்தை: ஏன்?