உதயசங்கரன் பாடகலிங்கம்
கைதி பாணியில் ‘ஆக்ஷன்’ படம்!
ஆக்ஷன் வகைமை திரைப்படங்களுக்கான கதையை யோசிப்பது அவ்வளவு கடினமான விஷயமல்ல. ஆனால், மிகக்குறைவான காலகட்டத்தில் நிகழும் சம்பவங்களை மையமாகக் கொண்ட கதையை ஆக்குவது மிகக்கடினம்.
ஆங்கிலம் உள்ள வெளிநாட்டு மொழிகளில் அப்படிச் சில திரைப்படங்கள் வந்திருக்கின்றன. பிளாஷ்பேக்குகள் இல்லாமல் ஆக்ஷன் படம் எடுக்க முடியாது என்ற எழுதப்படாத விதி இருக்கிற நம்மவர்களின் பூமியில் அதற்கான சாத்தியம் கொஞ்சம் குறைவாக இருந்தது.

லோகேஷ் கனகராஜின் ‘கைதி’ போன்ற படங்களே அதன் முன்னிருந்த தடைகளை உடைத்தன. அந்த வழியைப் பின்பற்றி, கிட்டத்தட்ட ‘கைதி’ பாணியில் ஒரு ஆக்ஷன் படமாக அமைந்திருப்பதாக ரசிகர்களால் புகழப்படுகிறது ‘மேக்ஸ்’.
கிச்சா சுதீபா நாயகனாக நடித்துள்ள இப்படத்தைப் புதுமுக இயக்குனர் விஜய் கார்த்திகேயா இயக்கியிருக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு இதனைத் தயாரித்திருக்கிறார். கன்னடப் படமான இது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தியில் ‘டப்’ செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது.
சரி, ஆக்ஷன் படமாக ‘மேக்ஸிமம்’ அனுபவத்தைத் தருகிறதா ’மேக்ஸ்’?
’கடுகளவு’ கதை!
’கைதி பாணியில கதைன்னு சொன்னா, ஒரு ராத்திரியில நடக்குற மாதிரிதான் திரைக்கதை இருக்கிறதா’ என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். அந்த எண்ணம் மிகச்சரியானது.
ஒரு புறநகர் காவல் நிலையம். அதனருகே ஒரு டீக்கடை கூட இல்லை. பாழடைந்த பங்களா போன்றிருக்கும் அந்த கட்டடத்திற்குச் செல்ல இரண்டு வழிகள் இருக்கின்றன. அதனருகிலேயே ஒரு பாலம் இருக்கிறது. அது சேதமடைந்திருப்பதால், யாரும் அதனைப் பயன்படுத்துவதில்லை. இது போக, அருகாமையில் பயன்படுத்தப்படாத ஆலையொன்று இருக்கிறது.
’ஒரு காவல்நிலையத்தைப் பற்றி ஏன் இவ்வளவு விவரிக்க வேண்டும்’ என்ற உங்களது கேள்வி புரிகிறது. ஏனென்றால், அந்த இடம், சூழலைச் சுற்றித்தான் மொத்தக் கதையும் காட்சிகளும் அமைந்திருக்கின்றன.
அந்த காவல்நிலையத்திற்குப் புதிதாக மாற்றலாகி வரும் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் மகாக்ஷே (சுதீபா) அடுத்த நாள் காலையில் பணியில் இணைவதாகத் திட்டமிட்டிருக்கிறார். ஆனால், அன்றிரவே அவர் காவல்நிலையம் செல்ல நேர்கிறது.

மது போதையில் விபத்தை ஏற்படுத்தி, அதனை விசாரிக்க வந்த பெண் கான்ஸ்டபிளை அவமானப்படுத்துகின்றனர் இரண்டு பேர். ரயிலில் இருந்து இறங்கித் தனது தாயுடன் நண்பனின் வீட்டுக்குச் செல்லும்போது, அதனைக் கவனிக்கிறார் அர்ஜுன். அவர்களைப் பிடித்திழுத்து வழக்குப் பதிவிடச் சொல்கிறார்.
ஆனால், சப் இன்ஸ்பெக்டர் தாஸ் (உக்ரம் மஞ்சு) அதனைச் செய்யத் தயாராக இல்லை. காரணம், அவர்கள் இருவரும் அரசில் பொறுப்பு வகிக்கும் இரண்டு (ஆடுகளம் நரேன், சரத் லோகித்சவா) அமைச்சர்களின் மகன்கள்.
’அவ்வாறு வழக்கு பதியவில்லை என்றால், அனைவரது மீதும் நடவடிக்கை எடுக்க வைப்பேன்’ என்கிறார் அர்ஜுன். தனது வீட்டிற்குச் செல்கிறார்.
அந்த நேரத்தில், அந்த காவல்நிலையத்தில் இருக்கும் அனைவரும் வெவ்வேறு பணிகளுக்காக வெளியே செல்கின்றனர். அவர்களில், அடுத்த நாள் ஓய்வு பெறவிருக்கும் கான்ஸ்டபிள் ராவணனும் (இளவரசு) ஒருவர். மனைவிக்கு உடல்நலம் சரியில்லை என்று தகவல் வந்ததால், அவர் காவல்நிலையத்தைப் பூட்டிவிட்டுச் செல்கிறார்.
சுமார் ஒரு மணி நேரம் கழித்து ஒவ்வொருவராகக் காவல்நிலையத்திற்குத் திரும்புகின்றனர். ஆனால், லாக்கப்பில் அந்த அமைச்சர்களின் மகன்கள் இல்லை. ஒவ்வொரு இடமாகத் தேடி, இறுதியாக ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்குச் செல்கின்றனர். அங்கு அவர்கள் இருவரும் பிணமாகக் கிடக்கின்றனர்.
அவ்வளவுதான். அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அர்ஜுனுக்குத் தகவல் சொல்கின்றனர். அவர் வந்ததும், இருவரும் காவல் நிலையத்திற்கு வராதது போல ‘செட்டப்’ செய்து பிணங்களை எங்காவது போட்டுவிடலாம் என்கின்றனர். ‘அது சட்டப்படி தவறு’ என்று மறுக்கிறார் அர்ஜுன்.

அதற்குள், அமைச்சரின் மகன்கள் கைது செய்யப்பட்ட விவரம் அறிந்து ரவுடி கனி (சுனில்), நரசிம்மா (வம்சி கிருஷ்ணா) மற்றும் குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ரூபாவின் (வரலட்சுமி) ஆட்கள் அடுத்தடுத்து அந்த காவல்நிலையத்திற்கு வருகின்றனர்.
அமைச்சரின் மகன்களைக் கொன்றது யார்? அவர்கள் உயிருடன் இல்லாத விவரம் ரவுடிகளுக்குத் தெரிய வந்ததா? அர்ஜுனும் அங்கிருந்த போலீசாரும் என்ன ஆனார்கள்? விஷயம் முழுமையாகத் தெரியாதபோதும், எதுவுமே செய்ய முடியாத அளவுக்கு அவ்விரு அமைச்சர்களும் என்ன செய்து கொண்டிருந்தனர்? இப்படிச் சில கேள்விகளுக்குப் பரபரவென்று நகரும் காட்சிகளைக் கொண்டு பதிலளிக்கிறது ‘மேக்ஸ்’ஸின் மீதி.
உண்மையைச் சொன்னால், இதிலிருப்பது ‘கடுகளவு’ கதையே. அதில் திருப்புமுனையை ஏற்படுத்துகிற அளவுக்கு நான்கைந்து விஷயங்களைப் புகுத்தி, சண்டைக்காட்சிகளையும் சேஸிங்கையும் நிறைத்து இரண்டு மணி நேரம் பொழுது போகுமாறு செய்திருக்கிறார் இயக்குனர் விஜய் கார்த்திகேயா.
திரைக்கதையில் நிறைய இடங்களில் லாஜிக் மீறல்கள் மலையென உயர்ந்து நிற்கின்றன. ஆனால், தியேட்டருக்குள் அமர்ந்திருக்கும்போது நம்மைப் பற்றிக்கொள்ளும் பரபரப்பில் அவையனைத்தும் நினைவில் மேலெழுவதில்லை. அதுவே ‘மேக்ஸ்’ படத்தின் வெற்றி.
ஆனால், அதற்கடுத்துப் பார்க்கும்போதெல்லாம் அவை மட்டுமே நம் கண்களுக்குத் தெரியும். அதுவே இப்படத்தின் பலவீனம். ஆதலால், ‘ஒரு டைம் பார்க்கலாம் பாஸ்’ என்கிற ரேஞ்சில் அமைந்திருக்கிறது ‘மேக்ஸ்’.
’கொஞ்சம்’ பில்டப் அதிகம்!
’ஜெயிலர்’ படத்தில் ரஜினிக்கான ‘பில்டப்’ காட்சிகளைப் பார்க்கும் ஒரு வெளிநாட்டவருக்கு ‘கொஞ்சம் பில்டப் அதிகமாக இருக்குதே’ என்று தோன்றுவது இயல்பு. நம்மூரில் அவரைத் தெரியாதவர்களே கிடையாது என்பதால், இங்கிருக்கும் எவருக்கும் அந்த எண்ணம் பெரும்பாலாகத் தோன்றாது.
ஆனால், அதே பில்டப் வேறு யாருக்காவது திரையில் தரப்பட்டால் நிறையவே ‘ஜெர்க்’ அடிக்கும். கன்னடத்தில் கணிசமான ரசிகர்களைக் கைக்கொண்டிருக்கும் கிச்சா சுதீபாவை மனதில் கொண்டு ஆக்ஷன் காட்சிகளில் தோன்றியிருக்கிறார். ஆனால், நமக்கு அது ‘பில்டப் அதிகமா தெரியுதே’ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
இந்தப் படத்தில், அவருக்கு ஜோடி கிடையாது. ஆனால், அவரது ரசிகர்கள் அதனைக் குறையாக எண்ணாத வண்ணம் இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் தோன்றியிருக்கிறார்.
இளவரசு, வரலட்சுமி, ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் நரேன் என்று இதில் நமக்குத் தெரிந்த முகங்கள் குறைவு. இவர்களில் இளவரசுக்கு மட்டுமே ஆறேழு காட்சிகள் தரப்பட்டிருக்கின்றன. வரலட்சுமி வழக்கம்போல வில்லத்தனமாகத் திரையில் வந்து போயிருக்கிறார்.

வம்சி கிருஷ்ணா, சரத் லோகித்சவா, சுனில் என்று இதில் வில்லன்களாக வரும் நடிகர்கள் அனைவரும் நமக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள் தான்.
இவர்களைத் தாண்டி சுதீபாவின் தாயாக வரும் சுதா பெலவாடி, காவல் நிலையக் காட்சிகளில் இடம்பெற்றிருக்கும் சம்யுக்தா ஹொர்னாட், சுக்ருதா வாக்லே, அனிருத் பட், உக்ரம் மஞ்சு, விஜய் செந்தூர் என்று பலர் வந்து போகின்றனர்.
இது போக பிரமோஷ் ஷெட்டி உட்பட ரவுடிகளாக வந்து போனவர்களின் எண்ணிக்கை சில டஜன்கள் இருக்கும்.
’இந்த போலீஸ் ஸ்டேஷன் செட்டு தான்’ என்று முன்வரிசை ரசிகர்கள் கூவும் அளவுக்கு, இதில் கலை வடிவமைப்பு அமைந்திருக்கிறது. அது தெரிந்தே, பிரேம்களின் உள்ளடக்கத்தைத் தீர்மானித்திருக்கிறது தயாரிப்பு வடிவமைப்பாளர் சிவகுமாரின் குழு.

பரபரவென்று நகரும் காட்சிகளுக்கு ஏற்றவாறு, படம் முழுக்க நிலைகொள்ளாமல் திரிகிறது சேகர் சந்திராவின் கேமிரா.
படத்தொகுப்பாளர் எஸ்.ஆர். கணேஷ் பாபு நாம் சிந்திக்க இடமே தராமல், அடுத்தடுத்த காட்சிகளைத் திரையில் அடுக்கியிருக்கிறார்.
இவர்களை எல்லாம் ஓரம்கட்டுவது போன்று பின்னணி இசையில் ‘அதகளம்’ செய்திருக்கிறார் அஜனீஷ் லோக்நாத். சுதீபாவின் ஆக்ஷன் பில்டப்களில் அவர் காட்டியிருக்கும் மெனக்கெடல் அபாரம்.
காவல் நிலையத்தின் பின்னணியை லாங் ஷாட்டில் காட்டும் இடங்களில் விஎஃப்எக்ஸ் குழு இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம்.
இவர்கள் தவிர்த்துப் பெருங்குழுவின் உழைப்பை ஒருங்கிணைத்து, ஒரே திசையில் சொல்லும் திரைக்கதையை உணரச் செய்திருக்கிறார் இயக்குனர் விஜய் கார்த்திகேயா. நிச்சயமாக, அவரது வரவு ஆக்ஷன் பிரியர்களுக்கு இனிப்பைத் தரக்கூடியது. ஆனால், அவ்வகைமை படங்களை விரும்பாதவர்களுக்கு இப்படம் உவப்பைத் தராது.
ஏற்கனவே சொன்னது போல, இந்தப் படத்தில் லாஜிக் மீறல்கள் ஏராளம். ’க்ளிஷே’வான விஷயங்களும் கூட கணிசமாக இருக்கின்றன. ஆனால், அவற்றை நம் நினைவுக்கு வரவிடாமல் தடுத்து, ஒரு பண்டிகைக் காலத் திரைப்படமாக அமைந்திருக்கிறது.
அதனால், ஆண்டிறுதியில் வெளியான ‘ஸ்டார்’ திரைப்படம் என்ற அந்தஸ்தை எட்டியிருக்கிறது இந்த ‘மேக்ஸ்’.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை… விஜய் கைப்பட எழுதிய கடிதம்!
போலீசாரை டென்ஷனாக்கிய அதிமுகவின் ‘யார் அந்த சார்?’ போஸ்டர்!
19,000 ஊழியர்களுக்கு BSNL விருப்ப ஓய்வு? – காரணம் இதுதான்!
போக்குவரத்து ஓய்வூதியர்கள் அகவிலைப்படி: புத்தாண்டு பரிசாக அறிவிக்க வலியுறுத்தல்!