இந்திய சினிமாவில் ஓடிடி வருகைக்கு பின் டிஜிட்டல் உரிமை மூலம் கிடைக்கும் வருவாயால் பெரும்பான்மையான படங்கள் நஷ்டத்தில் இருந்து தப்பியிருக்கிறது.
புதிய முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் பல படங்களுக்கு ஓடிடி தளங்கள் பேசுகின்ற விலையில் 80% தொகையை முன்பணமாக கொடுக்கின்றனர்.
இதனால் பைனான்சியர்களின் கொடூரமான வட்டியில்லாமல் இயக்குநர்களின் சுதந்திர சிந்தனைக்கு தயாரிப்பாளர்களால் வாய்ப்பு தர முடிகிறது.
இயக்குநர்களே தயாரிப்பாளர்களாக முடிகிறது அப்படி உருவான திரைப்படம்தான் 2018.
கடந்த ஒரு மாத காலமாக கேரளாவில் 2018 படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகள் மக்கள் வருகையால் கல்லா கட்டியது.
சில வருடங்களாக மலையாள திரையுலகில் 100 கோடி ரூபாய் வசூல் சாதனையை 2018 திரைப்படம் சமன் செய்ததுடன் அதனையும் கடந்து இதுவரை 180 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை நிகழ்த்தியுள்ளது.
இன்னும் ஒரு வாரம் இத்திரைப்படம் 200 கோடி ரூபாய் மொத்த வசூலை எட்டிப்பிடிக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் ஓடிடி நிறுவனத்துடன் 2018 படத்தின் தயாரிப்பாளர் ஏற்கனவே செய்த ஒப்பந்தப்படி திரையரங்குகளில் படம் வெளியாகி 30 நாட்கள் முடிந்தவுடன் ஓடிடியில் வெளியானது.
அதே போல ஃபகத் ஃபாசில் நடித்த ‘பச்சுவும் அத்புத விளக்கும்’ திரைப்படமும் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது.
இந்த நிலையில், திரையரங்குகளில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாவதைக் கண்டித்து ஜூன் 7, 8 ஆகிய இரண்டு நாட்களும் கேரளாவில் உள்ள அனைத்துத் திரையரங்குகளும் மூடப்படுவதாக கேரள திரையரங்க உரிமையாளர்கள் கூட்டமைப்பு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் தலைவர் கே.விஜய்குமார்,
“‘2018’ மற்றும் ‘பச்சுவும் அத்புதவிளக்கும்’ ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.
ஓடிடியில் இதுபோன்ற திரைப்படங்களை முன்கூட்டியே வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூன் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் திரையரங்குகளை மூடி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மட்டுமே ஓடிடியில் திரைப்படங்களை வெளியிட அனுமதி வழங்குமாறு அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்.
ஓடிடி தளங்களுக்கு இணையாக திரையரங்குகளை எங்களால் இயக்க முடியாது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
திரைப்படங்களின் ஓடிடி வெளியீட்டுத் தேதிகள் அறிவிக்கப்பட்டதும், திரையரங்குகளுக்குச் செல்லும் மக்கள் அங்கே செல்வதில்லை.
தயாரிப்பாளர் இன்னும் சில நாட்கள் காத்திருந்திருந்தால் ‘2018’ கேரளாவில் ரூ.200 கோடி வசூல் செய்த முதல் மலையாளப் படம் என்ற பெருமையைப் பெற்றிருக்கும்” என அவர் கூறினார்.
இச்சிக்கல் குறித்து 2018 படத்தின் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் வெளியிட்டுள்ள பதிவில், திரையரங்கு உரிமையாளர்களின் போராட்டத்தை மதிக்கிறேன்.
வெளியீட்டுக்கு முன்பே இப்படத்தை நம்பிப் பணம் போட்டது சோனிலைவ் நிறுவனம். அதனால் தயாரிப்பாளர் பாதுகாக்கப்பட்டார்.
அதனால் தான் எல்லாம் சுமுகமாக நடந்தது. எனவேதான் இப்போது படம் இணையத்தில் வெளியாகிறது. இது வேண்டுமென்றே செய்த செயல் இல்லை” என்று கூறியுள்ளார்.
இராமானுஜம்
‘ஆளுநர் கட்சி உறுப்பினர் போல் செயல்படுகிறார்’ – செல்லூர் ராஜூ
’வணிக மின் கட்டண உயர்வும் பொதுமக்களை பாதிக்கும்: ஜெயக்குமார்
