’தசரா’ படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அவரின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு இன்று (அக்டோபர் 17) வெளியிட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் ஸ்ரீகாந்த ஒதெலா இயக்கத்தில் நடிகர் நானி தற்போது நடித்துவரும் படம் தசரா. எஸ்.எஸ்.வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடா, மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக 2023 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த படத்தில் நடிகர் நானிக்கு ஜோடியாகக் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, பிரகாஷ் ராஜ், ராஜேந்திர பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரெயிலர் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியானது.
இந்த படத்தின் கதை தெலுங்கானா மாவட்டம் பெத்தபள்ளி மாவட்டத்தில் உள்ள கோதாவரி கரையில் சிங்கரேணி நிலக்கரி சுரங்கத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் “நடிகர் நானி தனது வழக்கமான பாணியிலிருந்து நவ நாகரிக தோற்றத்திலிருந்து முற்றிலுமாக மாறி முதல்முறையாக முழுக்க முழுக்க ஒரு கிராமத்தான் கதாபாத்திரத்தில் கரடுமுரடான தோற்றத்தில் நடிக்கிறார்” என்று படத்தின் இயக்குநர் கூறியிருந்தார்.
நானியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அவருடைய மாஸ், லோக்கல் தோற்றத்தை உறுதிப்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, ‘தசரா’ படத்தின் முதல் பாடல் “தாம் தூம்” வெளியாகி யூடியூப்பில் 7.5 மில்லியன் பார்வைகளை கடந்து டிரண்டிங்கில் உள்ளது.
இந்நிலையில் நானிக்கு ஜோடியாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை அவரது பிறந்தநாள் கொண்டாட்டமாகப் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் வெண்ணலா என்ற கதாபாத்திரத்தில் ஒரு கிராமத்துப் பெண்ணாக நடித்திருக்கிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் மஞ்சள் நிற புடவையில் மணப்பெண் கோலத்தில் மகிழ்ச்சியாக மேள இசைக்கு நடனம் ஆடுவது போல் கீர்த்தி சுரேஷின் வெண்ணலா தோற்றம் அமைந்திருக்கிறது.
இந்த தோற்றத்தின் மூலம் சினிமா துறையில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷின் தசரா கேரக்டர் சவாலான கதாப்பாத்திரமாக இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
மோனிஷா
காங்கிரஸ் தலைவர் தேர்தல் : வாக்குபதிவு விறுவிறுப்பு!
பிரின்ஸ், சர்தார் படங்களின் காட்சி நேரம் மாற்றம்!