விமர்சனம்: கழுவேத்தி மூர்க்கன்!

சினிமா

பொறுப்புணர்வுமிக்க இயக்குனரின் படைப்’பூ’!

ஒரு திரைப்படத்தைச் சமூகப் பொறுப்புணர்வுடன் உருவாக்குவது மிக முக்கியம். அதனை எந்த அளவுக்குக் கவனமாகக் கையாள வேண்டுமென்பதற்குக் கடந்தகால உதாரணங்கள் பல உள்ளன. அந்த வரிசையில் சமீபத்திய வரவாகச் சேர்ந்துள்ளது ‘கழுவேத்தி மூர்க்கன்’.

அரசுப் பள்ளிகள் புனரமைப்பை வலியுறுத்திய, ஜோதிகா நடித்த ‘ராட்சசி’யின் இயக்குனர் கௌதம்ராஜ் தந்திருக்கும் இரண்டாவது படைப்பு இது. அருள்நிதி, சந்தோஷ் பிரதாப், யார் கண்ணன், முனீஸ்காந்த், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

பூமிநாதனும் மூர்க்கசாமியும்..!

ஒரு ஊரில் இரண்டு நண்பர்கள். இருவரும் வெவ்வேறு சாதியைச் சார்ந்தவர்கள். அவர்களது ஒற்றுமை கண்டு உறவினர்கள் முதல் ஊரார் வரை பலரும் பொருமுகின்றனர். இந்த நிலையில், அவர்களது நட்பைக் குலைக்கும் வகையில் ஒரு சூழ்ச்சி நடத்தப்படுகிறது. அதற்கு ஒரு நண்பர் பலியாக, இன்னொருவர் கொலையாளியாகக் குற்றம்சாட்டப்படுகிறார். அதன்பிறகு என்னவானது? தனது நண்பனைக் கொன்றவர்களை அவர் அடையாளம் கண்டுகொண்டாரா என்று சொல்கிறது ‘கழுவேத்தி மூர்க்கன்’.

இந்தக் கதையில் பூமிநாதன் எனும் பாத்திரத்தில் சந்தோஷ் பிரதாப்பும், மூர்க்கசாமி எனும் பாத்திரத்தில் அருள்நிதியும் நடித்துள்ளனர். ராமநாதபுரம் வட்டாரத்தில் கதை நிகழ்வதாகச் சொல்லப்படுவதால், படத்தின் இரு முக்கியக் கதாபாத்திரங்களும் என்ன சாதியைச் சார்ந்தவர்களாகக் காட்டப்படுகின்றனர் என்பதை எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது. நேரடியாக அதனைச் சுட்டாமல் மேலத்தெரு, கீழத்தெரு என்றே இரு பிரிவினரையும் வகைப்படுத்துகிறது ‘கழுவேத்தி மூர்க்கன்’ கதை.

உண்மையைச் சொன்னால், சமீபத்தில் வெளியான ‘ராவணகோட்டம்’ படத்தின் கதையும் இதே போன்றதொரு களத்திலேயே பின்னப்பட்டிருந்தது. அதிலும் மேலத்தெரு, கீழத்தெரு என்றே கதைமாந்தர்களின் இருப்பிடம் சொல்லப்பட்டிருந்தது. ஆனால், அப்படத்தின் கதையமைப்பு யதார்த்தத்தை விட்டு ரொம்பவே விலகியிருந்தது. ‘கழுவேத்தி மூர்க்கன்’ அந்த விஷயத்தில் மிகக்கவனமாகச் செதுக்கப்பட்டிருக்கிறது. அதுவே மூர்க்கசாமி, பூமிநாதன் எனும் இரு கற்பனைப் பாத்திரங்கள் இடையிலான நட்பை உண்மை என நம்ப வகை செய்திருக்கிறது.

அபாரமான பாத்திரத் தேர்வு!

எங்கே ‘த்ரில்லர் ஸ்பெஷலிஸ்ட்’ ஆக்கிவிடுவார்களோ என்ற பயத்தில் தேடித் தேடி இப்படியொரு கதையைத் தேர்வு செய்திருக்கிறார் அருள்நிதி. அது மட்டுமல்லாமல், ஆக்‌ஷன் செய்வதற்குத் தகுந்த கதையையும் பாத்திர வார்ப்பையும் அவர் ரொம்பவே உன்னிப்பாகத் தேர்வு செய்வதுதான் ஆகச் சிறப்பு. இதிலும் அவரது ஆக்ரோஷ நடிப்பு ரசிக்கும்படியாக இருக்கிறது.

சந்தோஷ் பிரதாப்பின் பாத்திரமான பூமிநாதனின் சாயலை ‘மெட்ராஸ்’ படத்தில் வரும் அன்பு, காளியோடு நம்மால் ஒப்பிட முடியும். எந்தவிதத்திலும் சர்ச்சை எழாத வகையில் அப்பாத்திரத்தை வடிவமைத்திருப்பதும் அதில் சந்தோஷை நேர்த்தியாக நடிக்க வைத்திருப்பதும் இயக்குனரின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது.

போலவே இந்த படத்தில் துஷாரா ஏற்றிருக்கும் ‘கவிதா’ பாத்திரமும் ரொம்பவே இயல்பானதாகவும் ரசிக்கத்தக்கதாகவும் அமைந்திருக்கிறது. ஆனால், பின்பாதியில் அவரது பாத்திரத்திற்கு உரிய இடம் தரப்படவில்லை.

சந்தோஷின் காதலியாக வரும் சாயாதேவியின் நடிப்பு அருமை. இந்தப் படத்தைக் கண்டபிறகு, அவர் மீதான கவனிப்பு அதிகமாகலாம்.

உண்மை எனும் பாத்திரத்தில் நடித்த முனீஸ்காந்த், வில்லனாக வரும் ராஜசிம்மன், அருள்நிதியின் தந்தையாக வரும் யார் கண்ணன், எஸ்பியாக வரும் சரத் லோகித்சவா, இன்ஸ்பெக்டராக வரும் பத்மென் மற்றும் சந்தோஷின் நண்பனாக வருபவர் உட்பட அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். பாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிகர் நடிகைகளைத் தேர்ந்தெடுத்திருப்பதும், அதற்கேற்ப அவர்களைத் திரையில் காட்டியிருப்பதும் மட்டுமே இப்படத்தினை வியந்து நோக்க வைத்திருக்கிறது.

டி.இமான் இசையில் ’அவ கண்ண பாத்தா’, ‘செந்தாமரை’ பாடல்கள் சட்டென்று ஈர்க்கின்றன. ‘எங்கே போன ராசா’ பாடல் நம் மனதை அரிக்கிறது. அதே அளவுக்குப் பின்னணி இசை வழியே காட்சிகளோடு ஒன்ற வைத்திருக்கிறார் இமான். கிளைமேக்ஸில் காட்சியோடு சேர்ந்து இசையும் உக்கிரத்தைக் கொணர்வது அருமை.

ஸ்ரீதரின் ஒளிப்பதிவில் ராமநாதபுரத்து வறட்சியும் வெக்கையும் சட்டென்று மனதில் பதிந்து விடுகிறது. படத்தொகுப்பாளர் நாகூரான் பணியானது இடைவேளைக்குப் பிறகு திக்குத்தெரியாமல் அல்லாடியிருக்கிறது. அதுவே, சீராகச் சென்றிருக்க வேண்டிய பின்பாதியைத் துண்டு துண்டுகளாக்கியிருக்கிறது.

மகேந்திரனின் கலை வடிவமைப்பில் காட்டப்படும் கழுமரம் நம்மைப் பயமுறுத்துகிறது. சந்தோஷின் வீடு அமைந்திருக்கும் விதமும் பிரமிக்க வைக்கிறது. சண்டைக்காட்சிகளை கணேஷ்குமார் வடிவமைத்திருக்கும் விதம் அருள்நிதியின் உடல்வாகுக்குப் பொருந்துவதாக உள்ளது.

இயக்குனரின் பொறுப்புணர்வு!

உண்மையைச் சொன்னால், இப்படத்தின் கதையானது எளிதாகச் சர்ச்சையை எழுப்பக்கூடியது. இம்மி பிசகினாலும், ஏதேனும் ஒரு தரப்பை எரிச்சலூட்டக்கூடியது. ஆனால், அதனை மிகச்சரியாகவும் பொறுப்புணர்வோடும் கையாண்டிருக்கிறார் இயக்குனர் கௌதம்ராஜ். அதேநேரத்தில், அதுவே இப்படத்தினை ஆதிக்க மனம் கொண்டோர் புறக்கணிக்கவும் காரணமாக இருக்கும் என்ற வாதத்தையும் மறுக்க முடியாது.

பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றோர் தரும் கதைகளை, பாத்திரங்களை இன்னொரு திக்கில் இருந்து பார்ப்பதாக அமைந்திருக்கிறது ‘கழுவேத்தி மூர்க்கன்’. அந்த பார்வையானது ஏற்றமோ இறக்கமோ இல்லாமல் நேர்கோடாக இருப்பது மிக முக்கியம். அதனை கைக்கொண்டிருப்பது இயக்குனர் கௌதம்ராஜின் வெற்றி.

இரண்டாம் பாதியில் சில காட்சிகள் ’கட்’ ஆகியிருப்பதும் சொல்லப்படாமல் தவிர்த்திருப்பதும் நிச்சயம் பார்வையாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தும். போலவே, படத்தின் முடிவு சிலருக்கு எரிச்சலைத் தரலாம். ஆனால், எதிர்காலத்தில் ‘பருத்தி வீரன்’ போல ‘கழுவேத்தி மூர்க்கன்’ கிளைமேக்ஸ் சிலாகிப்புக்கு உரியதாக மாறுவதற்கும் அதுவே காரணமாக அமையும். ஏனென்றால், இன்றும் உயிர்ப்புடன் இருந்துவரும் சாதீயத்தின் வீரியத்தைக் காட்டுவதாகவே அது அமைக்கப்பட்டுள்ளது. அதனை உணர்ந்தவர்களுக்கு இப்படம் பிடிக்கும்! 

“மீண்டும் தோனியிடம் ஆட்டோகிராப் வாங்குவேன்”: கவாஸ்கர்

டிஜிட்டல் திண்ணை: செந்தில்  பாலாஜிக்கு செக்-  டாஸ்மாக்கை குறிவைக்கும் அன்பில் மகேஷ்- மீண்டும் அமைச்சரவை மாற்றமா?

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *