உதய் பாடகலிங்கம்
கல்லூரியில் படித்து ஒரு வேலையில் சேர்ந்து ஜாலியும் கேலியுமாக ஊரைச் சுற்ற வேண்டிய வயதில் ஒரு குழந்தைக்குத் தகப்பன் ஆனால், தாய் ஆனால் வாழ்க்கை எப்படியிருக்கும்? நிச்சயமாகச் சுற்றியிருக்கும் உலகத்தில் இருந்து தாம் வேறுபட்டிருப்பதை எந்தச் சிடுக்கும் இல்லாமல் ஒரு ஜோடியால் உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியொரு சூழலுக்கு ஆளான இளம் பெற்றோரின் வாழ்வைச் சொல்கிறது ‘டாடா’.
கவின், அபர்ணா தாஸ், ஹரிஷ், கே.பாக்யராஜ், ஐஸ்வர்யா, விடிவி கணேஷ் உட்படப் பலர் நடித்திருக்கும் இப்படம், இயக்குனர் கணேஷ் கே பாபுவின் அறிமுகமாகவும் அமைந்திருக்கிறது.
வச்சாங்கடா ஆப்பு..!
இளம் வயது பெற்றோர் எப்படி வாழ்ந்தார்கள் என்பதுதான் கதையா? அப்படியானால், முதல் பாதி காலேஜ், கலாட்டா, ஆண் பெண் நட்பு என்று ஜாலியாக இருக்கும் என்று தியேட்டரில் வந்தமர்ந்தவர்களை முதல் பத்து நிமிடங்களிலேயே நெளிய வைத்து விடுகிறது ‘டாடா’.
‘ஓ! பர்ஸ்ட் ஹாஃப் பார்த்துட்டு பாப்கார்ன் தின்னுட்டு ஓடிடலாம்னு பார்த்தியா’ என்று சொல்லி, முதல் ரீலிலேயே கதை சொல்ல ஆரம்பித்துவிடுகிறார் இயக்குனர். கிளுகிளுப்பான காட்சிகளை எதிர்பார்த்து வந்தவர்கள் ‘வச்சாங்கடா ஆப்பு..’ என்று கதறாத குறை.
மணிகண்டனும் (கவின்) ஸ்வேதாவும் (அபர்ணா தாஸ்) காதலர்கள்; கல்லூரியில் படிக்கும்போதே, இருவரும் ஒன்றாகச் சேர்ந்து சுற்றியதில் ஸ்வேதா கர்ப்பிணியாகிறார். விஷயம் இருவரது வீட்டுக்கும் தெரிய வருகிறது. ‘மானம் போய்விட்டது’ என்று இரு தரப்புமே அவர்களைக் கைவிடுகிறது.
மணியின் நண்பன் (ஹரிஷ்) அவர்களுக்கு வீடு தந்து, ஒரு வேலையும் வாங்கித் தருகிறார். இளைஞர் பட்டாளம் கூடுமிடமாக இருப்பதால், அந்த வீடு ஸ்வேதாவுக்குப் பிடித்தமானதாக இல்லை. அதனால், ஒரு வாடகை வீட்டில் குடியேறுகின்றனர்.
தினசரிச் செலவுகள், கர்ப்பகால மருத்துவம், தேர்வுக் கட்டணம் என்று ஒவ்வொன்றையும் தாக்குப் பிடிக்க முடியாமல் திணறும் மணி, ஒருநாள் குடித்துவிட்டு வருகிறார். அடுத்த நாள், குழந்தை பிறக்கும்வரை குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்கிறார். அதன்பிறகும் மது அருந்திவிட்டு வருகிறார். இது போன்ற பல விஷயங்கள் இருவருக்குள்ளும் மோதலைத் தூண்டுகின்றன.

ஒருநாள் பிரசவ வலியில் துடிக்கும்போது, ஸ்வேதாவின் அழைப்பைத் துண்டிக்கிறார் மணி. அது, அவரது வாழ்வையே புரட்டிப் போடுகிறது. அடுத்த சில நிமிடங்களில், ஒரு ஆண் குழந்தையைத் தந்துவிட்டு ஸ்வேதா அகன்றுவிடுகிறார். அவர் என்னவானார் என்று தெரியாமல் மனம் குமைகிறார் மணி. தன்னையும் குழந்தையையும் புறக்கணித்துவிட்டுப் போனதாக உணர்கிறார்.
குழந்தையை வளர்க்க இயலாது என்று அதனை ஆதரவற்றோர் இல்லமொன்றில் சேர்க்கவும் தயாராகிறார். ஆனால், முதன்முறையாகப் பாசத்தை உணர்வது அவரது மனதை மாற்றுகிறது. அதன்பின், மிகத்தீர்க்கமாக அந்த குழந்தைக்காகவே வாழ்வதென்று தீர்மானிக்கிறார்.
சில ஆண்டுகள் கழித்து, ஒரு அலுவலகமொன்றில் மீண்டும் ஸ்வேதாவைச் சந்திக்கிறார் மணி. தினமும் அவரைப் பார்க்கும் சந்தர்ப்பம் நேரிடுகிறது. அப்போதாவது ’என்னையும் குழந்தையையும் ஏன் விட்டுச் சென்றாய்?’ என்று ஸ்வேதாவிடம் மணி கேட்டாரா இல்லையா என்பதுடன் படம் முடிவடைகிறது.
அழ வச்சிடுறாங்க..!
அந்தக் காலத்தில் மட்டுமல்ல, இன்றும் கூட மனிதர்கள் கஷ்டப்படத்தான் செய்கின்றனர். பொதுவெளியில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளின் வடிவம் மாறியிருக்கலாம். ஆனால், குடும்பம் என்ற அமைப்பில் புரிதல் இல்லாவிட்டால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுமோ அதெல்லாமே அப்படியேதான் இருக்கின்றன. தொடக்க காட்சியிலேயே நாயகனும் நாயகியும் பின்னிப் பிணைந்திருக்கும்போது, பின்னணியில் ஒலிக்கும் பக்கத்துவீட்டு தம்பதியின் மோதல் வழியாக அதனை உணர்த்திவிடுகிறார் இயக்குனர்.

அது மட்டுமல்ல, முதல் ஒரு மணி நேரம் கோபம், சோகம், அழுகை என்றே கதை நகர்கிறது. ‘நான் அழுது நீ பார்த்திருக்கியா, பொறந்தப்பவே நான் அழவே இல்லையாம்’ என்று சொல்லும் கவின் பாத்திரம் முதன்முறை கண்ணீர் விடும் இடம் ரசிகர்களையும் அழ வைக்கிறது.
‘2கே கிட்ஸ் அழுவாச்சி படம் பார்க்க மாட்டாங்கப்பா’ என்று சொல்லிவிடாத வகையில், பிரச்சனைகளைக் கடந்து வரும் அனுபவங்களையும் பதிவு செய்கிறது திரைக்கதை. அதெல்லாமே விக்ரமன் படம் பார்ப்பது போலிருந்தாலும், ‘நம்பிக்கைதானே வாழ்க்கை’ என்ற வார்த்தைகளுக்கு நியாயம் சேர்க்கிறது.
ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாமல் ஒரே ஊரில் நாயகனும் நாயகியும் இருப்பது லாஜிக் இல்லையே என்பது போலப் பல குறைகள் ரசிகர்களின் கண்களுக்குத் தென்படலாம். இயக்குனர் காட்டும் உலகம் உங்களுக்குப் பிடிக்கும் பட்சத்தில், அவ்வாறு நிகழவும் வாய்ப்புண்டு’ என்று மனம் நம்பத் தொடங்கும். அதைச் சாத்தியப்படுத்தியிருப்பதுதான் ’டாடா’வின் வெற்றி.
’இது உணர்வுப்பூர்வமான படம்’ என்ற உறுதியோடு கதாபாத்திரங்களை கேமிராவுக்கு நெருக்கமாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர் கணேஷ் கே பாபு. பாத்திரங்கள் நகரும்போது மட்டும், அவர்களின் அசைவுகளோடு சேர்ந்து இயங்கியிருக்கிறது கேமிரா. அதனைப் பார்த்தவுடனே, மிகத்திட்டமிட்டு காட்சிகளைச் செதுக்கியிருப்பது பிடிபடுகிறது. தொடக்கமும் முடிவும் ஒரேமாதிரியான காட்சியமைப்புடன் அமைந்திருப்பது இன்னொரு உதாரணம்.
ஒளிப்பதிவாளர் எழில் அரசுவின் கேமிரா பார்வை ஒரு ‘பீல்குட்’ உணர்வை படம் முழுக்கத் தந்திருக்கிறது. ஆங்காங்கே பிளாஷ்பேக்குகள் வந்தாலும், காட்சிகளைச் சீராக காட்டினால் பார்வையாளர்கள் புரிந்துகொள்வார்கள் என்று தன் பணியைச் செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் கதிரேஷ் அழகேசன். சண்முகராஜாவின் கலை வடிவமைப்பு, கேமிரா பார்வையை அழகானதாக மாற்ற முயற்சிக்காமல் இடத்தின் தன்மையைக் காட்ட மட்டும் உதவியிருப்பது ஆச்சர்யப்படுத்துகிறது.
ஜென் மார்ட்டின் இசையில் பாடல்கள் முதல்முறை கேட்கும்போதே ஈர்க்கின்றன. முன்பாதியில் நெகிழவைக்கும் காட்சிகளிலும், பின்பாதி நகைச்சுவைக் காட்சிகளிலும் அவரது பின்னணி இசை ஒரு பாத்திரமாக நடமாடியிருக்கிறது.
’லைஃப்ல சின்னச் சின்ன விஷயங்களை நாம முடிவு பண்ணலாம்; ஆனால் பெரிய விஷயங்களை லைஃப் தானா முடிவு பண்ண விட்டுடணும்’, ’உங்களுக்கு உங்களால நல்லாயிருக்கணும்; ஆனா உங்களை விட நல்லாயிருக்கக் கூடாதுல்ல’ என்பது போல மிகச்சில இடங்களில் மட்டும் இயல்பான பேசுமொழியைத் தாண்டி வசனங்கள் ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கின்றன. ‘உனக்கு எதிர்காலத்துல என்னவாகணும்னு ஆசை’ என்று கவின் கேட்க, ‘எல்லாரும் ஒரே இடத்துல படிக்கிற மாதிரி ஏதாவது செய்யணும்’ என்று மகன் சொல்லுமிடம் போகிற போக்கில் சேதி சொல்லிச் செல்கிறது.

ஆங்காங்கே சிரிப்பு!
முழுக்க இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியாக வேண்டிய கட்டாயம் இருந்தபோதும் கவினும் அபர்ணாவும் அதனை லாவகமாக எதிர்கொண்டிருக்கின்றனர்.
இரு வேறு கெட்டப்களில் வந்தாலும், அலட்சியமும் தெனாவெட்டும் கலந்த தனது முந்தைய சீரியல், சினிமா பாவனைகளை கவின் கைவிட்டிருப்பது பலன் தந்திருக்கிறது. தோள் வரை புரளும் சுருள் முடியுடன் ‘எனக்கென்ன’ என்ற பாவனையுடன் தொடக்கத்தில் கவின் வருவது, இடைவேளைக்கு முன்பாக விடிவி கணேஷ் பேசும் ’நான் மட்டும் ரக்டு பாயா இருந்திருந்தா’ என்ற வசனத்தின்போது நினைவுக்கு வருகிறது. அதேபோல, கிளைமேக்ஸிலும் கவின் முகத்தில் கண்ணீர் துளிர்க்கும் இடம் அழகு.
’கொஞ்சம் பெரிய பொண்ணு’ தோற்றத்துடன் உலா வரும் அபர்ணா, இளம் தாய் பாத்திரத்துக்கு முற்றிலுமாகப் பொருந்தியிருக்கிறார். கவின் உடன் சண்டையிடும் காட்சிகளில் அவரது நடிப்பு ‘ஆஹா’ ரகம்!
இருவரையும் தவிர்த்து, நம் நெஞ்சோடு ஒட்டிக்கொள்பவர் நண்பராக வரும் ஹரிஷ். ’ஏன், இன்னும் மூணு வருஷத்துக்கு உன் குழந்தைக்கு மட்டுமில்ல உனக்கும் கழுவி விடுறேன்’ என்று ‘பீஃப்’ சத்தத்துடன் அவர் பேசும் வசனம் தியேட்டரில் சிரிப்பலைகளை உண்டு பண்ணுகிறது.
பின்பாதியில் அவரது இடத்தை நிரப்புகிறார் பிரதீப் ஆண்டனி. அபர்ணாவை ஒருதலையாக காதலிப்பதாக அவர் தரும் ‘அலப்பறை’கள் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும். விடிவி கணேஷ் வரும் காட்சிகளும் கூட அப்படித்தான்.
கவின் – அபர்ணாவின் மகனாக நடித்திருக்கும் இளன், மிகச்சில காட்சிகளில் வந்தாலும் அளவோடு அழகாக நடித்திருக்கிறார்.
ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து குழந்தையை தூக்கிவரும் காட்சியில், உடனிருக்கும் ஆட்டோக்காரர் கவினை மனநிறைவுடன் பார்ப்பார். அதற்கு முன்பாக, ‘நீயெல்லாம் ஒரு மனுஷன்’ என்பதாக அவரது முகபாவம் இருக்கும். இது போல, துணை பாத்திரங்களும் பொருத்தமாக நடித்திருப்பதுதான் இப்படத்தின் சிறப்பு.

இடைவேளைக்குப் பிறகுதான் சோகக் காட்சிகள் வரும் என்ற வழக்கத்தை உடைத்து, ’சோகமும் சுகமும் கலந்ததுதான் வாழ்க்கை’ என்று திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர். அழுவதும் சிரிப்பதும் அல்லாமல் நெகிழ வைக்கும் காட்சிகளும் படத்தில் உண்டு. அதேநேரத்தில், ‘வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல’ எனும் பழமொழிக்கு ஏற்ப இளம் வயது பெற்றோர்கள் படும் பாட்டையும் இளைய தலைமுறைக்கு உணர்த்தியிருக்கிறார் கணேஷ் கே பாபு.
90’ஸ் கிட்ஸ் பொறாமைப்படும் விதமாக, இரண்டாயிரத்திற்குப் பிறகு பிறந்தவர்கள் உடனடியாக காதல், கல்யாணம் என்று ‘செட்டில்’ ஆவதாக கிண்டலடிக்கப்படும் காலகட்டத்தில் ’டீப்பா லவ் பண்ண ரெண்டு பேரு ஒண்ணா சேர்ந்தாங்க’ என்பதற்குப் பின்னிருக்கும் வாழ்வைச் சொன்ன விதத்தில் ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறார் கணேஷ் கே பாபு. அவரது கூட்டுழைப்புக்கு ஒரு வந்தனம்!
குஜராத்தை தொடர்ந்து அசாமிலும் நிலநடுக்கம்!
ஆர்.எஸ்.எஸ். பேரணி : தமிழ்நாடு அரசுக்கு சிபிஎம் முக்கிய கோரிக்கை!