பேய்ப்படங்கள் சீசன் முடிந்துவிட்டது என்று சொன்னவர்களைக் கண்டுபிடித்து தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும். அஜய் ஞானமுத்து, டீகே, ராகவேந்திரா லாரன்ஸ் படங்கள் தந்து கொண்டிருக்கும்வரை, அதற்கொரு முடிவே கிடையாது. அந்த எண்ணத்தை வலுப்படுத்தும் விதமாக வெளியாகியிருக்கிறது காஜல் அகர்வால், ரெஜினா கேசன்ட்ரா, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘கருங்காப்பியம்’.
கொத்துக்கொத்தாகப் பேய்க்கதைகள்!
கொரோனா கால ஊரடங்கையொட்டி நிகழும் வகையில் ‘கருங்காப்பியம்’ கதை அமைக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கின்போது என்ன செய்வதென்று புரியாமல், ஒரு பெண் புத்தகங்களாகப் படித்துத் தள்ளுகிறார். அப்படியும் திருப்தியுறாமல் ஒரு நூலகத்திற்குச் செல்கிறார். அங்கிருக்கும் பழைய புத்தகங்களில் அரதப்பழசான ஒன்றை எடுத்து தூசி தட்டுகிறார்; படிக்கத் தொடங்குகிறார்.
நூறாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட புத்தகத்தில் கொரோனா ஊரடங்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு வாழ்க்கையும் சொல்லப்பட்டிருக்கின்றன. அதைப் படித்தபிறகாவது ‘உஷார்’ ஆகியிருக்க வேண்டாமா அப்பெண். ம்ஹூம், ‘படிக்கறதுக்கும் யோசிக்கறதுக்கும் சம்பந்தமே இல்ல’ங்கற மாதிரி அவர் தொடர்ந்து கதைகளாகப் படித்து தள்ளுகிறார். அப்புறமென்ன, ஒவ்வொரு கதையிலும் விதவிதமாகப் பயமுறுத்துகின்றன பேய்கள். ஒரு கதையில் வேற்றுக்கிரகவாசிகள் கூட வருகின்றனர்.
ஒவ்வொரு கதையைப் படித்து முடித்தபிறகும், அக்கதையில் இடம்பிடித்த பாத்திரங்கள் அப்பெண்ணின் கண்களுக்குத் தெரிகின்றன. முதலில் அதனைப் பிரமை என்று நினைப்பவர், அதன்பிறகு உண்மையிலேயே அவ்வுருவங்கள் தென்படுவதைப் பார்த்து பயந்து போகிறார். அவர் அந்த புத்தகத்தைத் தொடர்ந்து படித்தாரா, இல்லையா என்பதோடு முடிவடைகிறது ‘கருங்காப்பியம்’.
கொத்துக்கொத்தாகப் பேய்க்கதைகளைத் தர வேண்டுமென்ற மெனக்கெடலோடு இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் கார்த்திகேயன். விதவிதமாகப் பேய்க்கதைகள் சொல்ல வேண்டுமென்று நினைத்தது சரிதான்; ஆனால், அவற்றை ஒரேபுள்ளியில் கோர்க்க முயன்ற விதம்தான் சறுக்கியிருக்கிறது.
சிரிப்பா, பயமா?
பேய்ப்படங்கள் என்றால் பயமுறுத்துவதோடு சிரிப்பூட்டவும் செய்யும் என்ற நிலையை ராகவா லாரன்ஸும் சுந்தர்.சியும் உருவாக்கிவிட்டார்கள். ‘யாமிருக்க பயமேன்’ போன்ற படங்கள் அதிலிருந்து விலகி, முற்றிலும் புதிதானதொரு அனுபவத்தைத் தந்தன. ஒரேநேரத்தில் பயத்தையும் சிரிப்பையும் அனுபவிக்க வைத்தன. ஆனால், ‘கருங்காப்பியம்’ படத்தைப் பார்க்கும்போது ஆங்காங்கே பயப்படுகிறோம்; வெகுசில இடங்களில் சிரிக்கிறோம். ஆனால், அந்த அனுபவம் முழுமையானதாக இல்லை.
ஒரு சீரியல் போன்றோ அல்லது வெப்சீரிஸ் போன்றோ உருவாக்கியிருக்க வேண்டிய கதையைத் திரைப்படமாக மாற்றியிருக்கிறார் இயக்குனர். அதனால், முழுநீளத் திரைப்படம் பார்த்த பலன் கிட்டவில்லை. இந்தக் கதையில், கருங்காப்பியத்தை வாசிக்கும் பெண் என்னவாகப் போகிறார் என்ற பதைபதைப்பை திரைக்கதையின் எந்த இடத்திலும் இயக்குனர் உருவாக்கவே இல்லை. இதன் மாபெரும் பலவீனம் அதுவே.

ரெஜினா கேசண்ட்ரா முக்கியக் கதாபாத்திரமாக வந்தாலும், ஒவ்வொரு கதையிலும் ஓரிரு கலைஞர்கள் முதன்மையாக இடம்பெறுகின்றனர். முதல் கதையில் கலையரசனும் ரைசா வில்சனும் சம அளவில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இரண்டாவது கதையில் கருணாகரன், யோகிபாபு உட்படப் பலர் தலைகாட்டினாலும், மையப்பாத்திரமாக வரும் ஜனனிக்குப் பெரிதாக ‘ஸ்கோப்’ கிடைக்கவில்லை. லொள்ளுசபா மனோகர், வீஜே பார்வதி, ஷரா தோன்றும் கதையே, நம் மனதில் ‘கிளாசிக்’ பேய்க்கதை பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது. நான்காவது கதையில் குட்டி கோபி, டிஎஸ்கேவின் ‘மொக்க’ நகைச்சுவையை மீறி வேற்றுக்கிரகவாசியாக வரும் நொய்ரிகாவின் கவர்ச்சிகரமான தோற்றம் நம்மை ஈர்க்கிறது. ஐந்தாவது கதையில், இப்படத்தின் முக்கிய அங்கமான கருங்காப்பியம் புத்தகம் உருவானது பற்றிச் சொல்லப்படுகிறது. அதிலும் கூட, அந்தக் கதையைச் சொன்னவிதம் ‘பீட்சா’ படத்தைப் புரட்டிப் போட்டாற்போன்றே உள்ளது. ஆனால், அதில் காஜல் அகர்வாலுக்கு முக்கியத்துவம் தந்து காட்சிகளை நகர்த்தியிருப்பது எளிதாகக் கதையுடன் ஒன்றச் செய்கிறது. அதேநேரத்தில், படத்தில் சிறுபாத்திரங்களில் தோன்றியவர்களும் அருமையாக நடித்துள்ளனர் என்பதைச் சொல்லியே தீர வேண்டும்.
விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவில் இருளும் ஒளியும் கலந்த பிரேம்கள் நம்மைப் பயத்தில் தள்ளுகின்றன. பிரசாத் எஸ்.என். அமைத்திருக்கும் பின்னணி இசை வழக்கமான பேய்ப்படங்களின் வார்ப்பில் உள்ளது. படத்தொகுப்பைக் கையாண்டிருக்கும் விஜய் வேலுக்குட்டி, சின்னச் சின்னதாகச் சில அத்தியாயங்களை ஒன்றாகக் கோர்ப்பதை ஆவலுடன் மேற்கொண்டிருக்கிறார். அதேநேரத்தில், ஒரு சாதாரண ரசிகனுக்கு இது களிப்பூட்டுமா என்பதை யோசித்துப் பார்க்கத் தவறியிருக்கிறார். செந்தில் ராகவனின் கலை இயக்கத்தில் காஜல் அகர்வால் வரும் பகுதி நம்மை வசிகரிக்கிறது.

இந்தப் படத்தின் இயக்குனர் டீகே எனும் டி.கார்த்திகேயன், ஏற்கனவே ’யாமிருக்க பயமே’, ‘கவலை வேண்டாம்’ படங்களை இயக்கியவர். ஆனால் ‘காட்டேரி’, ‘கருங்காப்பியம்’ இரண்டுமே முழுமையாகத் தயாராகியும் திரையை எட்ட நீண்டகாலமாகியிருக்கிறது.
எது பலவீனம்?
ஒரு நல்ல சிறுகதை போல ஐந்து பேய்க்கதைகளை அடுத்தடுத்து சொல்லியிருக்கிறார் இயக்குனர். அவற்றின் மூன்று கதைகள் முத்தான ரகம். ஆனாலும், அவற்றை ஒரு பெண் வாசிப்பது போலக் காட்டியிருப்பதுதான் கதையுடன் ஒன்றுவதைத் தடுக்கிறது. அதற்குப் பதிலாக, ஒரு கதைசொல்லியாகவோ அல்லது கதையைப் படித்துக் காட்டுபவராகவோ அமைத்திருந்தால் இன்னும் ஈர்ப்பைத் தந்திருக்கலாம் அல்லது ஐந்து கதைகளையும் ஒன்றாகத் தொகுக்க வேறு ஏதாவது உத்தியைக் கையாண்டிருக்கலாம்.
அவ்வாறு செய்யாத காரணத்தால், ரொம்பப் பழைய புத்தகத்தைக் கையிலெடுத்ததும் தாள்கள் நைந்து உதிர்வது போலாகிறது திரைக்கதை உண்டாக்கும் காட்சியனுபவம். அதுதான் இப்படத்தின் ஆகப்பெரிய பலவீனம். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஆற அமர ஒவ்வொரு கதையாகப் பார்க்கலாம் என்ற முடிவுடன் இருக்கிறீர்களா? அப்படியானால், உங்களைப் போன்ற ரசிகர்களால் ஓடிடி வெளியீட்டின்போது இந்த படம் வெற்றி காணும்!
உதய் பாடகலிங்கம்