தமிழ் சினிமாவில் வழக்கமான மசாலா அல்லது பொழுதுபோக்கு, சண்டை படம் என கடந்துபோக முடியாத படம்,
செய்திகளை, கடந்த கால சம்பவங்களை ஒருவரிக் கதையாக கொண்டு திரைக்கதை எழுதுகிறபோது அது சம்பந்தமான ஆய்வுகள், அதற்குரிய ஆவணங்கள், லாஜிக் மீறாத காட்சிகள் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட எதுவும் இல்லாமல் தயாரிக்கப்பட்டுள்ள படம்தான் சர்தார்
சர்தார் படம் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ்,சீனாவை சுற்றி எழுதப்பட்ட திரைக்கதை.
எதிர்கால சர்வதேச அரசியல், யுத்தங்கள் எல்லாம் நிலத்தடி நீரையும், வற்றாத ஜீவநதிகள் நீரையும் கொண்டுதான் இருக்கும் என்பது உலக அரசியல் பார்வையாளர்களின் கணிப்பாக இருக்கிறது.
அதைப்பற்றி பேசுகிற சர்தார் படத்தில் எதிர்கால சந்ததிக்கு தவறான தகவலையே படத்தில் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் மித்ரன்.
இந்திய ராணுவத்தில் ரகசிய உளவாளியாகப் பணியாற்றிய அப்பா சர்தார் தேசத்துரோகி பட்டத்துடன் காணாமல் போகிறார்.

அவருடைய மகன் காவல்துறையில் சேர்ந்து திறமையாக வேலை செய்கிறார். ஆனாலும் உயரதிகாரிகள் அவரை குறை சொல்லி கொண்டே இருக்கிறார்கள். அப்பாவின் கெட்டபெயர் அவரைத் துரத்திக்கொண்டே இருக்கிறது.
அதிலிருந்து அவர் மீண்டாரா? சர்தார் என்னவானார்? என்கிற கேள்விகளுக்கான விடைதேடும் திரைப்பயணம்தான் சர்தார்.
ராணுவ உளவாளி, காவல்துறை அதிகாரி ஆகிய இரட்டை வேடங்களுக்கும் பொருத்தமாக இருக்கிறார் கார்த்தி. அதிலும் வயதான வேடம் கனகச்சிதமாக இருக்க உடல் மொழி, குரல் மொழி இரண்டுக்காகவும் பண்பட்ட நடிகராக மெனக்கெட்டிருக்கிறார் கார்த்தி.
படத்தில் ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன் என இரண்டு நாயகிகள் இருந்தபோதிலும் கதாநாயகனுடனான காதல் காட்சிகள், நெருக்கமான காட்சிகள் கதைகளத்திற்காக மட்டுமே பயன்படுத்தபட்டிருகிறார்கள்.
இருவரின் வேடங்களும் வெவ்வேறு காலகட்டங்களில் பயணிக்கிறது என்றாலும் நெஞ்சுரமிக்க நேர்மையான இளம்பெண்களாக நன்றாக நடித்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
நீண்ட இடைவெளிக்குப்பிறகு வந்திருக்கிறார் லைலா. வேலைக்காரன் படத்தில் சினேகா வேடத்தை நினைவுபடுத்தும் வேடம். லைலாவின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் ரித்விக்கின் காட்சிகள், பேசும் வசனங்கள் திரையரங்குகளில் கரவொலியை எழுப்புகின்றன.

வில்லனாக நடித்திருக்கும் சங்கிபாண்டே, பெயருக்கேற்ப அவருக்கு கதாபாத்திரமும் அமைந்துள்ளது. ஒரே இந்தியா ஒரே பைப்லைன் என்று பெயர் வைத்து இந்தியா முழுக்க தண்ணீர் வியாபாரம் செய்கிறார்.
ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் காட்சிகள் தரமாக இருக்கின்றன.
ஜி.வி..பிரகாஷின் இசையில் ஏறுமயிலேறி பாடல் தாளம் போடவைக்கிறது.
படத்தின் முதல் பாதி அரைகுறை தூக்கத்தை,சலிப்பை பார்வையாளனுக்கு ஏற்படுத்தினாலும் மையக்கதைக்குள் படம் பயணிக்க தொடங்குகிறபோது அரைகுறை தூக்கமும், அலுப்பும் பார்வையாளனை விட்டு விலகி பரபரப்பு தொற்றிக்கொள்ள வைக்கிறது திரைக்கதை.
தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு விரைவில் சென்னை மற்றும் தமிழகமெங்கும் வரவுள்ள தண்ணீருக்குக் கட்டணம் என்கிற நீர் வியாபாரத்தின் கொடூரத்தின் விதை 1980 ஆம் ஆண்டுகளிலேயே ஊன்றப்பட்டுவிட்டது என்று சொல்லி பார்வையாளனை அதிரவைத்திருக்கிறார் இயக்குநர் மித்ரன்.
அடையாளமின்றி அழிந்துபோனாலும் நாட்டுப்பற்றுடன் பணியாற்றும் உளவாளிகள் பற்றிய தகவல்கள் திரைக்கதைக்கு பலம் சேர்க்கிறது.
திரைக்கதைப்படி படம் முடிகிறபோது உளவாளி அப்பாவின் அவப்பெயர் அப்படியே தொடர்வதும் மகனும் அதையே விரும்பி ஏற்பதும் தமிழ் சினிமாவுக்கு புதிது.
நீர் அதன் பின் இருக்கும் சர்வதேச அரசியல்
இந்திய நாட்டுக்காக ரகசிய உளவாளியாக பணிபுரிவர்களின் தியாகத்தையும், தங்கள் குடும்பங்களுடன் ஒன்றிப் போக முடியாமல்,
எதிரிகளுடன் சிக்கிகொண்டால் அவர்கள் நிலை என்னவாகும் என்பதை மக்களுக்கு திரைப்படம் மூலம் சொல்லவேண்டும் என முயற்சித்த இயக்குநர் லாஜிக் மீறாத உண்மை தன்மையுடன் திரைக்கதையை அமைத்திருந்தால் சர்தார் கம்பீரமாக இருந்திருப்பார்.
படத்தில் கதாநாயகன் நினைத்த மாத்திரத்தில் பாகிஸ்தான், பங்களாதேஷ் என சென்று வருகிறார் இது நடைமுறையில் சாத்தியமில்லை
இந்திய நீராதாரத்தை சைனா கையகப்படுத்த முயற்சிப்பதாக. கூற முயற்சிப்பது சர்வதேச அரசியலுக்கு முரணானது இது போன்றகுறைகளை தவிர்த்துவிட்டு பார்த்தால்கம்பீரமான உளவாளி சர்தார்.
இராமானுஜம்