இது ‘கமர்ஷியல்’ படமா?!
பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன் என்று வழக்கத்திற்கு மாறான கதைகளில் நடித்தவர் கார்த்தி. நான் மகான் அல்ல, சிறுத்தை படங்களின் வெற்றி, அவரை ‘கமர்ஷியல் பாதைக்கு’ மாற்றியது.
கமலின் நடிப்பு பாணியைப் பின்பற்றி படத்துக்குப் படம் வித்தியாசமான நடிப்பைத் தர வேண்டுமென்று சூர்யா முயற்சித்த சூழலில், அவரது சகோதரரான கார்த்தி அதிலிருந்து வித்தியாசப்படும் வகையில் ரஜினியின் ‘கமர்ஷியல்’ பாணியைத் தேர்ந்தெடுத்ததில் ஆச்சர்யம் இல்லை.
அவர் தான் ஏற்ற பாத்திரத்திற்கான அதீத ‘பில்டப்’ காட்சிகளைத் தவிர்த்தபோதெல்லாம் நமக்கு மெட்ராஸ், கைதி, சர்தார் போன்ற வழக்கத்திற்கு மாறான கமர்ஷியல் படங்கள் கிடைத்தன. அந்த வரிசையில் இன்னொன்றாக இடம்பெறுமா என்ற கேள்வியை எழுப்பியது ‘ஜப்பான்’. இது, அவரது 25வது திரைப்படம்.
ராஜு முருகன் எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்; ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
சரி, படம் எப்படியிருக்கிறது?
ஒரு ஊரில் ஒரு திருடன்!
ஜப்பான் (கார்த்தி) மீது தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களில் பல திருட்டு, கொள்ளை வழக்குகள் உள்ளன. எதிலும் அவர் பிடிபடவில்லை. கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு, அவர் ஒரு படத்தையும் தயாரித்துள்ளார். அதில் நாயகியாக நடித்த சஞ்சனாவை (அனு இம்மானுவேல்) தீவிரமாகக் காதலித்துள்ளார். அத்தனை விவரங்கள் தெரிந்தும் போலீசாரால் ஜப்பானை நெருங்க முடியவில்லை.
இந்தச் சூழலில், சென்னையில் ஒரு நகைக்கடையில் 200 கிலோ தங்க நகை கொள்ளையடிக்கப்படுகிறது. அங்கு கிடைக்கும் சாட்சியங்கள், அதில் ஈடுபட்டது ஜப்பான் என்று உணர்த்துகின்றன.
அந்த கடை வாசலில் இரவு நேரத்தில் ஒரு மாட்டு வண்டியுடன் ஒரு நபரும் வந்து சென்ற வீடியோ பதிவுகள் கிடைக்கின்றன. அந்த நபர், சாக்கடைக் கழிவுகளில் இருந்து தங்கத் துணுக்குகளைப் பிரித்தெடுக்கும் வேலையைச் செய்து வருபவர். அவர் வீட்டில் நிற்கும் மாட்டு வண்டியில், ஜப்பான் உருவம் பொறித்த நாணயம் கிடைக்கிறது. அதையடுத்து, அவரும் இந்த வழக்கில் உடந்தை என்று கருதி போலீஸ் கைது செய்கிறது. அவரிடம் விசாரணை தொடர்கிறது.
அதேநேரத்தில், வெகுநாட்கள் கழித்து சஞ்சனாவைச் சந்திக்கும் வேட்கையோடு கிளம்புகிறார் ஜப்பான். இரு வேறு அதிகாரிகளின் (சுனில், விஜய் மில்டன்) தலைமையில் அமைந்த போலீஸ் படைகள் அவரது நடவடிக்கையைக் கண்காணிக்கின்றன. கூடவே கர்நாடகா, கேரளா போலீசாரும் ஜப்பானைப் பிடிக்கும் முயற்சியில் இறங்குகின்றனர்.
மூன்று மாநில எல்லைப்பகுதியாக விளங்கும் இடமொன்றில் சஞ்சனாவைச் சந்திக்கச் செல்கிறார் ஜப்பான். அங்கு, அவரைப் பிடிக்க போலீஸ் படைகளும் போட்டியிடுகின்றன. அப்போது நடக்கும் களேபரத்தில், சென்னையில் நகைக்கடை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தான் சிக்க வைக்கப்பட்டிருப்பதை உணர்கிறார் ஜப்பான்.
தன்னைச் சிக்க வைத்தது யார் என்று அவர் கண்டறிந்தாரா? போலீசார் பிடியில் இருந்து தப்பித்தாரா என்று சொல்கிறது ‘ஜப்பான்’.
’ஒரு ஊர்ல ஒரு திருடன் இருந்தான்’ எனும் தொனியில் கதை தொடங்கினாலும், அதன்பிறகான காட்சிகள் அதனை வழிமொழியும் விதமாக அமையவில்லை. மிக முக்கியமாக, கதையில் சொல்லப்பட்டிருக்கும் முடிச்சுகள் என்னென்னவென்று நமக்குத் தெளிவாகப் பிடிபடுவதற்குள் படம் முடிவடைந்துவிடுகிறது.
வித்தியாசமான முயற்சி!
இந்த படத்தில் கார்த்தி, அனு இம்மானுவேல், வாகை சந்திரசேகர், ஜித்தன் ரமேஷ், சுனில், கே.எஸ்.ரவிக்குமார், ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், பவா.செல்லத்துரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆனாலும், படம் முழுக்க நிறைந்து வழிகிறது கார்த்தியின் இருப்பு.
அலட்சியம் நிறைந்த உடல்மொழியுடன் உதட்டைச் சுருக்கிப் பேசும் அவரது தொனி, நம்மைச் சட்டென்று பற்றிக் கொள்கிறது. கிட்டத்தட்ட ‘கல்யாணராமன்’, ‘குணா’, ‘சிப்பிக்குள் முத்து’ கமல் மாதிரி, இதில் வரும் ஜப்பான் பாத்திரம் தனித்துவமாகத் தெரிய மெனக்கெட்டிருக்கிறார் கார்த்தி. திரையில் அதற்கான பலன் கிடைக்கிறது.
நாயகி அனு இம்மானுவேலுக்கு ‘துப்பறிவாளன்’ தவிர தமிழில் பெரிதாகப் படங்கள் வாய்க்கவில்லை. மீறித் தோன்றும் படங்களிலும் கூட, அவர் பத்து நிமிடங்களுக்கு மேல் இடம்பிடித்தால் பெரிதென்ற நிலை. ‘ஜப்பான்’ படத்திலும் அது தொடர்வதை என்னவென்று சொல்வது?
மாவீரன், ஜெயிலர், மார்க் ஆண்டனி என்று வரிசையாக மூன்று வெற்றிப் படங்களில் தலைகாட்டி, ‘யார் இவர்’ என்று ரசிகர்களை யோசிக்க வைத்தவர் சுனில். இதிலும் அவருக்கு வித்தியாசமானதொரு வேடம். ஆனால், திரையில் அது சாதாரணமாகவே வெளிப்படுகிறது.
போலீஸ் அதிகாரியாக வரும் விஜய் மில்டன், தனது முறுக்கேறிய உடல்மொழியால் நம்மை அசத்துகிறார். கே.எஸ்.ரவிக்குமார் வழக்கம் போல தனது தெனாவெட்டான வசனம் பேசும் பாணியால் நம்மைக் கவர்கிறார். ஜித்தன் ரமேஷ், பவா செல்லதுரை என்று வழக்கத்திற்கு மாறான ‘காஸ்டிங்’ இடையே, நீண்டநாட்கள் கழித்து இதில் வாகை சந்திரசேகரும் தலைகாட்டியிருக்கிறார்.
சாக்கடையில் இருந்து தங்கம் பிரித்தெடுக்கும் தம்பதியாக வருபவர்களின் நடிப்பு அருமை. ’சொட்டாங்கல்லு’ பாடலும் கூட அவர்களது காட்சிகளின் மீதே ஒலிக்கிறது.
ரவி வர்மனின் ஒளிப்பதிவு, இந்த படத்தைப் பார்க்கத் தூண்டும் மிக முக்கியமானதொரு அம்சம். வறுமையையும் செம்மையையும் ஒளியின் வழியே சொல்வது அவரது அனுபவத்தின் வெளிப்பாடு.
ஒவ்வொரு பிரேமிலும் ஒளிப்பதிவு வித்தியாசமாகத் தெரிய உதவியிருக்கிறார் தயாரிப்பு வடிவமைப்பாளர் வினேஷ் பங்கலான்.
படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ், பின்பாதியில் எந்தக் காட்சி தேவை, தேவையில்லை என்று முடிவு செய்வதில் ரொம்பவே தடுமாறியிருக்கிறார்.
இரண்டு பாடல்கள் தான் என்று முடிவு செய்தபிறகு, பின்னணி இசையில் ஜி.வி.பிரகாஷ்குமார் ‘அதகளம்’ செய்திருக்க வேண்டும். ஆனால், அது நிகழவில்லை. சிற்சில காட்சிகளில் விறுவிறுப்பூட்ட உதவுகிறது அவரது பின்னணி இசை. கிளைமேக்ஸ் காட்சியில் நம்மை நெகிழ வைக்கிறது.
‘நம்மால எதுவுமே செய்ய முடியாதுங்கற போது என்ன செய்யணும் தெரியுமா? ஃபன் பண்ணனும்’ என்பது வசனங்கள் சில பாத்திரங்கள் உடனடியாக நம்மைப் பீடிக்க வகை செய்கின்றன. அது போன்ற வசனங்களே இப்படத்தின் மிகப்பெரிய பலம்.
ஏன் சுணக்கம்?
திரைக்கதை தொடர்பான விதிமுறைகளில் திரும்பத் திரும்ப ஒரு இடத்தையோ, ஒரு விஷயத்தையோ சொல்வது சரியாக இருக்காது என்பதும் ஒன்று. உதாரணமாக, ஒரு திரைக்கதையில் ஒன்றுக்கு மேற்பட்ட விபத்துகள் ஏற்படுவது சலிப்பைத் தரும். இந்த படத்திலோ, ஜப்பான் போலீஸ் பிடியில் சிக்குவதும் தப்பிப்பதும் ‘ஜஸ்ட் லைக் தட்’ நடக்கின்றன.
போலீசார் தன்னைச் சுற்றி நிற்கின்றனர் என்பதை அறிந்த பிறகும் நாயகி முன்னே நாயகன் வந்து நிற்பதாக, இதில் ஒரு காட்சி உண்டு. அது போன்ற மிக முக்கியமான காட்சிகள் சரியான தாக்கத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தாதது ஒரு குறை. போலவே, இக்கதையில் வாகை சந்திரசேகர், அனு உட்படப் பல பாத்திரங்களின் முடிவு தெளிவாகக் காட்டப்படவில்லை.
மையப் பாத்திரங்கள் எல்லாம் எதிர்மறையாக இருக்க, இக்கதையில் வரும் சாதாரண மக்களே நல்லவர்களாகக் காட்டப்பட்டுள்ளனர். அது நம் மனதுக்கு உறைக்கும்வகையில் திரையில் சொல்லப்பட்டிருக்க வேண்டும். அதுவும் கூட நிகழவில்லை.
மக்களின் தங்க மோகமோ, அதன் பின்னிருக்கும் அரசியலோ, அதனைக் கொள்ளையடிப்பவர்களின் பதற்றம் நிறைந்த வாழ்க்கையோ இதில் அடிக்கோடிட்டுக் காண்பிக்கப்படவில்லை. அனைத்துக்கும் மேலாக, ’கேஜிஎஃப்’பில் வரும் அம்மா செண்டிமெண்டை நினைவூட்டும் காட்சிகள் இதிலும் உண்டு. ஆனால், அவை எதுவுமே சட்டென்று நம்மைக் கவர்வதாக இல்லை. கைகளால் காதை நேரடியாகத் தொடுவதை விடுத்து பின்னந்தலையைச் சுற்றித் தொடும் வகையில் கதையை ‘இழுவை’யாக்கி இருக்கின்றன.
இவையனைத்தும் ஒன்று சேர்ந்து, இந்த படத்தை கமர்ஷியல் என்பதா அல்லது ரியாலிட்டியாக இருக்கிறது என்பதா என்ற கேள்வியை உருவாக்குகிறது. அதனால், இது வழக்கமான கார்த்தி படமாகவும் கூட ரசிகர்களால் கருதப்படாது என்பதே உண்மை.
பிரசாரத் தொனி இன்றி, மிக நேரடியாக மக்களின் வேதனை நிறைந்த வாழ்க்கை நிகழ்வுகளை நகைச்சுவையாகச் சொல்வார் என்பதே, இயக்குனர் ராஜு முருகன் மீதான எதிர்பார்ப்பு. அடுத்த படத்திலாவது அதனை அவர் நிறைவேற்ற வேண்டும் அல்லது முழுக்க ’கமர்ஷியலான’ ஒரு படத்தை நமக்குத் தர வேண்டும். அதில் சற்றும் ‘சுணக்கம்’ வேண்டாம். ‘ஜப்பான்’னில் நீங்கள் பெற்ற அனுபவம், இனிமேல் எங்களுக்குப் புதிய காட்சியனுபவங்களைத் தர உதவட்டும்..!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதய் பாடகலிங்கம்
டிடி பொதிகை பெயர் மாற்றம்: எல்.முருகன் அறிவிப்பு!
2024-ல் எத்தனை நாட்கள் பொது விடுமுறை!
நெருப்போடு விளையாடாதீர்கள் : ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!